The side that is not spoken about, generally.

சோற்றுக்கு இணையான நெய் ஊற்றி உண்பது என்று பெரியாழ்வார் பாசுரத்தில் பார்த்தோம். அவ்வளவு பாலும் நெய்யும் ஏழை அந்தணர் வீட்டில் எப்படி? அந்தணர் என்றாலே ஏழை என்றே படித்துப் பழகிவிட்டோம். எனவே 9-ம் நூற்றாண்டிலும் அப்படியே இருந்திருக்க வேண்டும் என்கிற அனுமானத்தில் மேலே தொடர்வோம்.

நெய்யும் பாலும் செல்வமும் இருந்தனவா?

எம்.ஜி.ஆர். படத்தில் பெரிய மேசையில் பல உணவு வகைகள் இருந்தாலும் அவர் ரொம்ப பாசாங்கு பண்ணிக்கொண்டு ஒரே ஒரு இட்லியை மட்டும் உண்பார். மற்ற விலை மதிப்பான, கண்ணால் மட்டுமே பார்க்கக்கூடிய உணவு வகைகளை உதாசீனப்படுத்துவார். 50 பைசா கொடுத்து டிக்கட் வாங்கித் தரையில் அமர்ந்து படம் பார்க்கும் கூட்டம் இதைப் பார்த்து ஆர்ப்பரிக்கும்.

இது உளவியல் சார்ந்த எதிர்வினை. ‘அவ்வளவு உணவு வகைகளைப் பார்க்க மட்டுமே முடியும். வாங்கி உண்ண முடியாது. ஏனெனில் நாட்டு நிலை அப்படி. எனவே அந்த உணவுப் பதார்த்தங்களை உதாசீனப்படுத்துவோம்’ என்கிற எண்ணம் மக்களிடம் உண்டு. அதனை எம்.ஜி.ஆர். தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். திரையில் தோன்றும் நடிகைகளும் உடல் நிறைய நகை அணிந்து வந்ததும் அதனாலேயே. ‘வாங்கத்தான் முடியாது. கண்ணாலாவது பார்ப்போமே’, ‘நாம் உண்டால் என்ன நம் எம்.ஜி.ஆர். உண்டால் என்ன? நம் சார்பாக அவர் உண்ணட்டும்’ என்று சோஷலிச அரசியல் கோலோச்சிய அன்றைய நாட்டில் மக்கள் திரையைப் பார்த்து வயிறு குளிர்ந்தனர்

பெரியாழ்வாரின் நிலையும் ஒரு வேளை அது போல் இருக்கலாமோ என்னவோ. பெருமாளுக்குப் பூ கைங்கர்யம் செய்து வந்தவர், சாதத்தின் அளவு நெய் என்று சொல்வதில் மேற்சொன்ன உளவியல் இருக்கலாம்.

ஆனால் ஆண்டாளின் நிலை அதுவல்ல. அவள் தானே ஆயர்பாடியில் இருப்பதாக நினைத்தாள். தன்னை ஒரு ஆய்ச்சியாகவே பாவித்துக் கொண்டள். தன் நிலை மறந்து, ஆய்ச்சியரோடு ஒருத்தியாக, ஆய்ச்சேரியில் இருக்கும் மற்றுமொரு பெண்ணாக நினைத்துக்கொண்டு பாவை நோன்பு நோற்றாள். எனவே அவளது கண் முன்னே ஆநிரைகள் பெருமளவில் தென்படுகின்றன.

அவையும் எப்படிப்பட்ட ஆநிரைகள் அவை?

‘சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’. பசுவின் கனமான மடியில் பால் நிறைந்து வடிகிறதாம். பாலை கறக்கத் தேவை இல்லை; வெற்றுக் குடத்தை மடியின் அடியில் வைத்தாலே அது நிறைந்துவிடுகிறதாம். குடத்தை வாங்கி வாங்கி வைத்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். அவ்வளவு பால் வளம் உள்ள பசுக்கள் ஆயர்பாடியில் இருந்துள்ளன. அவ்வளவும் சாதாரண பசு மாடுகள் இல்லை என்பதால் ‘பெரும் பசுக்கள்’ என்கிறாள். அவற்றின் உருவத்தைச் சொல்லியிருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

இன்னொரு பாடலில் பசு மாடுகளின் பால் வளம் பற்றி மேலும் சொல்கிறாள்.

‘நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும்..’ என்று சொல்லுமிடத்து, ‘பசு மாடுகள் பால் வழங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே அவற்றின் மடியில் இருந்து பால் மழை போல் பொழிந்து அந்த இடமே சேறாகிறது’ என்கிறாள்.

பிறிதொரு பாடலில், ‘மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்று மீண்டும் பசுமாடுகளின் பால் வளத்தையும், பாலை அவை அளிக்கும் தாராள குணத்தையும் சொல்கிறாள்.

‘கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..’ என்னும் பாடலில் கன்றுகளுடன் கூடிய பசுக்களைப் பால் கறந்து வாழும் வாழ்க்கையை வெகு இயல்பாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

‘கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்..’ என்று பாடுவதன் மூலம் ஆநிரைகள் அதிகமாக உள்ளதை நாம் பார்க்கிறோம்.

பால் வளம் இருந்தது. அதனால் நெய் அபரிமிதமாகக் கிடைத்தது. அதுவரை சரி. ஆனால் சோறு? மண் வளமானதா? நீர் வசதி எப்படி? தற்போது தஞ்சையில் நிலம் நிறைய இருந்தாலும் நீர் இல்லாததால் வேளாண்மை முன்பு போல் நடப்பதில்லை அல்லவா?

அதற்கும் ஆண்டாள் பதில் சொல்கிறாள். ‘திங்கள் மும்மாரி பெய்து’ என்கிறாள். மாதம் தவறாமல் மூன்று முறை மழை பெய்கிறது. ஆக நீர் பிரச்சினை இல்லை. எனவே பயிர்கள் செழித்து வளர்கின்றன.

எப்படி?

‘ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள..’ என்கிறாள்.

நல்ல செம்மை நிறம் பொருந்திய நெற்கதிர்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. அந்த வயல்களில் மீன்கள் ( கயல்) துள்ளி விளையாடுகின்றன என்கிறாள். நெற்பயிரும் செழித்து வளர்ந்துள்ளது; அங்கு வயல்களில் மீன்கள் வாழும் அளவிற்கு நீர் வசதி இருக்கிறது. ஏனெனில் மாதம் மும்மாரி பொழிந்திருக்கிறது.

நெல், பால் இவை எல்லாம் சரி. மற்றபடி செல்வச் செழிப்பு உண்டா?

‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்கிறாள். கதவுகளில் மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. செல்வச் செழிப்பு தென்படுகிறது.

மற்ற சிறுமியரை அழைக்கும் போது, ‘செல்வச் சிறுமீர்காள்’ என்று சொல்கிறாள் ஆண்டாள்.

‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி..’ என்னுமிடத்தில், தாமாக முன்வந்து தானம் செய்தும், தானம் கேட்பவர்களுக்குப் பிச்சை வழங்கியும், மற்ற முடிந்தன எல்லாம் செய்து, பின்னர் இறைவனைச் சென்று சேர்வோம்’ என்னுமிடத்தில் செல்வச்செழிப்பு தெரிகிறது.

எந்தப் பாடலைத் தொட்டாலும் பசு மாடுகள், பால் வளம், பால் நிரம்பி வழிதல் என்றும், நெற்பயிர்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றது.

இது செல்வச் செழிப்பில்லாமல் வேறென்ன?

அது சரி. ‘நீங்காத செல்வம் நிறைந்து’ என்கிறாள். அது என்ன செல்வம்?

மேலும் பார்ப்போம்.

2 responses

  1. S Ranganathan Avatar
    S Ranganathan

    Wonderful. I saw Andal before me

    Like

Leave a reply to Amaruvi Devanathan Cancel reply