பேஸ்புக்கில் திரு.மகேஷ் அவர்கள் எழுதியுள்ள விமர்சனம்.
நான் இராமானுசன்: ஒரு மிகப்பெரிய சமயத்தில் பலவாறான சித்தாந்தங்களும் தத்துவங்களும் விளங்குவதில் வியப்பதற்கொன்றுமில்லை. ஆனால் அவற்றின் பல கூறுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் வேறுபாடுகளையும் தெளிந்து, நமது அறிவுக்கு ஒப்புதலாகும் கருத்தைப் பின்பற்றி ஆன்மீகத் தேடலைத் தொடர்வதற்கு பெரும் பிரயத்தனம் வேண்டும். அந்தப் பிரயத்தனத்தை மிக எளிமைப்படுத்தி, சரியான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதற்காகவே நூலாசிரியர் திரு.ஆமருவி தேவநாதன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இராமனுசர் போன்ற சமூகசீர்திருத்தவாதிகள் காலத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களெல்லாம் தேவதூதர்களைப் போல கொண்டாடப்படும் இக்காலத்தில் அந்த மகான் உதித்த ஆயிரமாவது ஆண்டில் அவரது முற்போக்கான தத்துவங்கள், அன்றைக்கும் இன்றைக்கும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல கேடுகளைக் களையும்வண்ணம் இருப்பதை விளக்கியிருக்கும் பாங்கிற்கு நன்றிகள். இது ஏதோ ஒரு சமயம் சார்ந்த புத்தகம் என ஒதுக்கிவிடாமல், ஒரு முப்பரிமாண சமூகவியல் புத்தகமாக அனைவரும் படிக்க வேண்டும்.