ஒரு விழாவை எப்படி நடத்த வேண்டும், மேடை நிர்வாகம் எப்படி அமைய வேண்டும், நிகழ்ச்சிச் தொகுப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும், அறிவிப்புகளின் கால அளவைகள், நேரக்கட்டுப்பாடு, குறித்த நேரத்திற்குள் நிகழ்வுகள் நடத்தல், முதலில் இருந்து முடிவு வரை தொடர் சங்கிலி போன்ற ஒழுங்கு, நிகழ்வுகளில் ஒரு நிலைத்தன்மை, எப்போதும் ஏமாற்றம் தராத வரிசை அமைப்புகள் – தமிழ்மொழி பண்பாட்டுக்கு கழகத்தின் இன்றைய பாரதியார் விழா ஒரு சான்று.
த.மொ.ப.கழகம் ஆதரவில் நடக்கும் பேச்சாளர் மன்றங்களில் கிடைக்கும் பயிற்சி இதற்குக் காரணம் என்று தெரியும். சொந்த வீடு அல்லவா? புதிய உறுப்பினர்கள் என்றாலும் அவர்களையும் மேடை ஏற்றி, பொறுப்புகள் அளித்து, அவர்களுக்கு ஊக்கம் அளிக்க பெரிய மனம் வேண்டும். அது த.மொ.ப.கழகத்துக்கு அதிகமாகவே இருக்கிறது.
வழக்கம் போல் தலைவர் ஹரி கிருஷ்ணன் வெளிப்படையாகப் பேசினார். இந்த முறை தமிழர்களின் ஒற்றுமை குறித்தும், தமிழர்கள் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். சிங்கையின் தேவை அப்படி. சென்ற முறை தமிழர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இவை அனைத்தும் ஆழ்ந்த பொருளுடையவை. சிந்திப்பவர்களுக்குப் புரியும்.
சிங்கை நிகழ்வுகள் பற்றி தினமலர் பத்திரிக்கையாளர், தமிழ் ஆர்வலர் 80 வயது திரு புருஷோத்தமன் அவர்கள் தொடர்ந்து எழுதி வருபவர். அவருக்கு ‘பாரதியார் விருது’ வழங்கப்பட்டது. நல்ல, தரமான தேர்வு.
சிறப்புப் பேச்சாளர் தமிழகத்தில் இருந்து வந்திருந்த முனைவர் இராஜாராம் அழகாக, ஆணித்தரமாக, உணர்வு பூர்வமாக, பாரதி பற்றி பேசினார்.பாரதியின் பல கோணங்களைப் பற்றிப் பேசிய அவர், சில இடங்களில் உணர்ச்சி மேலிட கண் கலங்கினார். மகத்தான ஒரு யுக புருஷனைப் பற்றிப் பேசும்போது அவ்வாறு நேரிடுவது இயற்கையே. உண்மையான அக்கறையுடனும், ஆழ்ந்த பக்தியுடனும் அவர் பேசியதாக நான் உணர்ந்தேன்.
துவக்கத்தில் மஹாராஜபுரம் சந்தானம் பாடிய ‘போ சம்போ..’ பாடலின் மெட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது வெகு அருமை.
வெகுசில நிகழ்வுகளே மனதிற்கு இதமாக அமைவன. இன்றைய பாரதியார் விழா அப்படிப்பட்ட ஒன்று.