அமுதம்

பல வருடங்களுக்கு முன் அப்பாவுடன் காவிரிக்கரைக்குச் சென்ற போது நதியில் இருந்து நீர் எடுத்து வாய் கொப்புளித்து அதைக் கையில் வாங்கி நிலத்தில் விட்டார். பிறகு நதியில் கையை நனைத்துக்கொண்டார். குழப்பத்துடன் பார்த்த என்னை,’காவேரி தெய்வம்னா. எச்சல் துப்பலாமோ?’ என்றார்.

குழப்பம் தெளியாமல் அவரையே பார்த்தேன். ‘அப்ப நிலத்துல துப்பலாமேன்னு கேக்கறயா? பூமாதேவின்னா அவோ,’ என்று சிரித்தார்.

நீரிலோ நிலத்திலோ நேரடியாக எச்சில் உமிழக்கூடாது என்னும் பாரம்பரியத்தை நினைத்து 30 ஆண்டுகள் கழித்து இன்றும் மனம் சிலிர்க்கிறது. பஞ்ச பூதங்களைப் பாரத பாரம்பரியம் எப்படிப் பார்த்தது என்பதை நினைக்கும் போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. வீடு முதலானது கட்டும் முன்னர் பூமாதேவியிடம் பணிந்து, அவளது அருள் வேண்டிப் பெற்று பின்னர் துவங்குவது நமது பாரம்பரியம்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது, நீர்நிலைகளை உருவாக்குவது, புனரமைத்து மராமத்து வேலை செய்வது முதலான பணிகள் பேரறம் என்னும் அளவில் நம் பண்டைய சமூகத்தில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் இவ்வகைச் செயல்களால் மற்ற உயிரினங்களும் பயனடைந்தன.

இம்மாதிரியான அறப்பணிகளைச் செய்பவர்களை வாழ்த்தி, வானளாவப் புகழும் கல்வெட்டுகளை நாம் பார்க்கிறோம். இப்பணிகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு காசியில் ஆயிரம் காராம்பசுக்களைக் கொன்ற பாவம் வந்து சேரும் என்றும் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்னும் வேண்டுதல்கள். ஊரின் அடையாளமாக வாளை மீன்கள் சொல்லப்படுகின்றன. நெல் வயலில் குவளை மலர்கள் காட்டுகின்றன என்கிறார் ஆழ்வார். எங்கும் செழிப்பு, செல்வம், மழை, நீர், வளம், சுபிக்ஷம். ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆழி மழைக் கண்ணா‘ என்கிறாள் ஆண்டாள். கண்ணனுக்கு வேறு அடைமொழியே இல்லையா என்ன? மழையை எப்போதும் இணைத்தே பேசுகிறாள் ஆண்டாள். அத்துடன் நிற்காமல் மழை பெய்யும் முறையையும் சொல்கிறாள்.

‘ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி 

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து 

தாழாதே சார்ங்கம் உதைத்த சாரா மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் 

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்’

கருமேகம், இடி, மின்னல், இவற்றை முறையே கண்ணனின் உடல், சங்கின் ஒலி, சக்கரத்தின் ஒளி இவற்றிற்கு உவமையாகச் சொல்கிறாள். மழை, நீர்வளம் முதலியன நிறைந்த வளமான சமுதாயத்தை ஆண்டாள் பிரதிபலிக்கிறாள். அவளின் உவமைகளில் அவள் வாழ்ந்த நிலத்தின், சுற்றுச் சூழலின் நிலை உணர்த்தப்படுகிறது. நம் கண் முன் அபரிமிதமாய்த் தெரியும் ஒன்றையே நாம் உவமையாகவும், தொடர்பு படுத்தும் பொருளாகவும் கொள்வோம். ஆண்டாளின் பாசுர வரிகளின் மூலம் நீர் நிறைந்த ஊர் வளமும் மழைக்கும் நீர் வரத்துக்கும் அவர்கள் அளித்த முக்கியத்துவமும் தெரிகிறது.

கி.பி. 800 – கி.பி.900

திருமங்கையாழ்வார் தேரழுந்தூருக்கு வருகிறார். எங்கும் வேத கோஷம் கேட்கிறது. வானம் முந்திக்கொண்டு மழை பொழிகிறது.

‘முந்தி வானம் மழை பொழிய மூவாவுருவில் மறையாளர்

அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே’

ஊரை வர்ணனை செய்யும்போது அதன் வீதிகளைச் சொல்வது மரபு. ‘மூன்று வேளையும் அக்கினி வழிபாடு ( அக்னிஹோத்ரம்) செய்யும் அந்தணர்களைக் கொண்ட அழகிய வீதிகளை உடையது’ என்பதுடன் நிறுத்தியிருந்திருக்கலாம். ஆனால் ‘அந்த ஊரி வானம் முந்தி மழை பொழிகிறது’ என்கிறார். எல்லா ஊர்களைலும் பெய்வதற்கு முன் தேரழுந்தூரில் பெய்கிறதாம். அப்படிப் பெய்ய வேண்டிய காரணம் என்ன? அதன் பதில் அடுத்த வரியில்: ஏனெனில் அந்தணர்கள் மூன்று வேளையும் அனல் ஓம்பும் சடங்கு செய்கிறார்கள்.

‘அந்தணர்கள் கடமை தவறாது இருந்தால் மழை பெய்யுமா? வேறு சான்றுகள் உண்டா?’ என்று கேட்கலாம்.

வள்ளுவர் சொல்வது : ஒரு நாடு நன்றாக ஆளப்படுகிறது என்பதை அறிய இரு அளவுகோல்கள் உண்டு. நாட்டில் பால் வளம் மற்றும் வேதியர் ஓதும் வேதம். ஆட்சி சரியில்லையெனில் பசுவிலிருந்து பால் வளம் குன்றும், அந்தணர் வேதத்தை மறப்பர் என்பதை,

‘ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் 

காவலன் காவான் எனின்’

இந்தக் கோணத்தில் பார்த்தால் புரியும். அரசு சரி இல்லை என்றால் அந்தணர் வேதம் ஓதுவதை மறப்பர். அதனால் மழை பொய்க்கும். விளைச்சல் இருக்காது. எனவே பசுக்களின் பால் வளம் குறையும்.

ஆண்டாளும் ‘திங்கள் மும்மாரி பெய்து..’ என்கிறாள். அதென்ன மூன்று மழை ?

‘விவேக சிந்தாமணி’ மாதம் மூன்று முறை மழை பெய்வது ஏன் என்று சொல்கிறது:

‘வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே’ 

ஆக மாதம் மூன்று முறை மழை பெய்திருக்கிறது.

மீண்டும் தேரழுந்தூர். அவ்வூரின் வயல்களில் உள்ள வாளை மீன்களை உண்ண குருகு என்னும் பறவைகள் வருகின்றன. உடல் பருத்த வாளை மீன்கள் துள்ளுவதைக் கண்டு குருகினங்கள் அஞ்சுகின்றன. பிறகு சிறிய மீன்களை நாடிச்செல்கின்றன’ என்கிறார்.

‘நீரில் பணைத்த நெடுவாளைக்கு அஞ்சிப்போன குருகு இனங்கள்

ஆரல் கவுளோடு அருகணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே’

வயல்வெளிகளில் சேறாக உள்ளதாம். அந்தச் சேற்றில் தம் குஞ்சுப் பறவைகளுக்கு மீன்களைத் தேடி ஆண் பறவையும் பெண் பறவையும் சென்றனவாம். இதை,

‘புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடிப் போன காதல் பெடையோடும்

அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே’ என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

ஊரில் நெடுவீதிகள். ஊரைச் சுற்றி மீன்கள் துள்ளும் வயல்வெளிகள். வானம் முன்னரே மழை பொழியும் நிலை. ஊர் வர்ணனை நீர் பற்றியே இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

கி.பி. 2004

வெகு நாட்கள் ஆடுகள் மேய்ந்த இடம். பாழ்பட்டுப்போனதால் பாம்புகள் நடமாடிய குளம். ஊருக்குச் சென்ற போதெல்லாம் கிரிக்கெட் விளையாடிய தளம். அத்தனை குப்பைகளும் கொட்டப்பட்ட குளம். இது தான் தர்ச புஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தேரழுந்தூர் ஆமருவியப்பன் திருக்குளம்.

img_0461-2

அந்தக் குளத்தில் நீர் நின்று நான் பார்த்ததில்லை. மழைக்காலத்தில் சில மணி நேரங்கள் மட்டும் நீர் நிற்கும் குளமாக இருந்தது தர்ச புஷ்கரணி. திருமங்கையாழ்வார் பார்த்த புஷ்கரணியில் பாம்பும் ஆடும் விளையாடின.

img_0460-2

கி.பி. 2008 –  திருப்பணிகள் துவக்கம்

2008ல் இக்குளத்தைப் புனரமைக்கும் பணியில் மூன்று ஓய்வு பெற்ற பெரியவர்கள் இறங்கினர். இரவு பகல் வேலை. குளத்தைச் சீரமைக்க வேண்டிய, அதுவரை வாளாவிருந்த அற நிலையத் துறை ஒரு சில முனகல்களோடு அனுமதியளிக்க இசைந்தது.

திருக்குளம் 2008
திருக்குளம் 2008

 

வேலைகள் துவங்கிய நேரத்தில் அப்பா ஒருமுறை கடும் வெயிலில் நின்றவாறு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். சென்னையில் இருந்து வந்த ஒரு வசதி மிக்க மனிதர்,’நாங்கள் ஒரு அரசு சாரா இயக்கம் நடத்துகிறோம். கோவில் குளங்களைச் சீரமைத்துத் தருகிறோம்,’ என்று சொன்னார். அவரை நம்பி, பல முறை சென்னைக்கு அலைந்தத்து தான் மிச்சம். அவரால் ஒரு செங்கல் கூட தர முடியவில்லை. ஆனால் கோவில் குளத்தை சீரமைப்பதாக தினசரிகளில் போட்டுக்கொண்டார்கள்.

அப்பாவும் மற்ற இரு பெரியவர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கி, பணம் வசூல் செய்யலாம் என்று முயன்றனர். ‘கொடையாளர் தயவு’ என்னும் ஷரத்தின் படி தான் செய்ய வேண்டும் என்றும், பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அற நிலையத் துறை கூறியது. பின்னர் கொடையாளர்களை நோக்கிய பயணம் துவங்கியது.

சில பத்து முறைகள் சென்னையில் இருக்கும் அற நிலையத் துறை அலுவலகத்துக்கும், பல பத்து முறைகள் இப்பணியை ஒப்பந்த முறையில் கொடையாகச் செய்ய வேண்டி பல நிறுவனங்களுக்கும் நடையாய் நடந்து, ஓட்டமாய் ஓடி, சோறு தண்ணீர் மறந்து அந்த மூவரும் செயல்பட்டனர்.

ஒரு நிறுவனத்தின் கொடையாக ஜெ.சி.பி. என்னும் இராட்சத இயந்திரம் அனுப்பிவைக்கப் பட்டது. சில நூறு பணியாளர்கள் களத்தில் , குளத்தில் இறங்கினர். நல்ல கோடை வெயிலில் வேலை மும்முரமாக நடந்தது. சில அடிகள் அகழ்ந்ததும் ஓராயிரம் வருடப் பழமையான நீர் வரத்து வழி தென்பட்டது. சில மைல்கள் தள்ளியுள்ள காவிரியின் கால்வாய் ஒன்றுடன் இணைத்து நிலத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த கல் வழி அது. ஆனால் அதனால் தற்போது பயன் இருக்காது என்றும், அதன் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் தெரிந்தது.

எப்படியாவது பண்டைய வழியில் நீர் கொணர்வது எப்படி என்று நிபுணர் குழு ஆராய்ந்தது. சில முயற்சிகளுக்குப் பின் அந்தப் பாதை கைவிடப்பட்டது. அந்த நிலத்தடி வழி தவிர மற்ற அனைத்து பண்டைய நீர் வரத்து வழிகளும் புனரமைக்கப்பட்டன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு முன்யோசனையுடன் நம் முன்னோர்கள் செயல்பட்டுள்ளனர் என்பதை நினைத்து பெருமையாக இருந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த நம்மால் முடியவில்லையே என்பதை நினைத்து வருத்தம் தான் ஏற்பட்டது.

பெரியவர்கள் மூவரும் கூடிப் பேசினர். 500 மீட்டர் தள்ளி, கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து மோட்டார் பம்ப் இறக்கலாம் என்றும் அங்கிருந்து தண்ணீரைக் கொண்டுவரலாம் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டது. பி.வி.சி. அல்லது கான்கிரீட் குழாய்  பதிக்க வேண்டும் என்று முடிவாகியது. அவ்வளவு தூரம் குழாய் பதிப்பதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று கணக்கிட்டனர்.

வெயில் தகித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரம் ஹார்டுவேர் வியாபாரி ஒருவர் வந்தார். ‘ஊர்ல ஏதோ தீர்த்த கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று காதில் பட்டது. எந்த ஊராக இருந்தாலும் தீர்த்த கைங்கர்யம் செய்வது எங்கள் குடும்பத்தில் ஒரு வேண்டுதல் போல் செய்து வருகிறோம். இந்த ஊரிலும் நாங்கள் செய்யலாமா?’ என்றார்.

குளத்திற்கு அருகிலும் போர் போட்டு நீர் எடுக்கப்பட்டு குளத்தில் நிரப்பப்பட்டது.  குளத்தைச் சுற்றி வடிகால்கள் அமைக்கப்பட்டு மழை நீர் குளத்துக்குள் வர வழி செய்யப்பட்டது. குளத்தைச் சுற்றி விழும் ஒரு மழைத்துளியும் வீணாகாமல் குளத்திற்குள் விழ வழி செய்யப்பட்டது.

குளம் ஆழப்படுத்தப் பட்டது. குளக்கரைகள் புதியதாக எழுப்பப்பட்டு, வலுப்படுத்தப்பட்டன. கரையைச் சுற்றி மரங்கள், வாழை முதலியன நடப்பட்டன. முதல் மழையில் நீர் நிரம்பியது. நிரம்பிய நீர் நிலத்தடிக்குச் சென்றது. மேலும் மழை பெய்ய, நீர் வற்றாமல் நிற்கத் துவங்கியது.

இன்று எல்லா நாட்களிலும் தண்ணீர் தளும்பி நிற்கிறது. தெப்ப உற்சவம் கொண்டாடும் அளவிற்குத் திருக்குளத்தில் நீர். குளத்தின் நீரால் அக்கம்பக்க வீடுகளில் எல்லாம் நல்ல கிணற்று நீர் ஊற்று. 30 ஆண்டுகள் பாழாய் இருந்த குளம் 4-5 வருடங்களாக நீரால் நிரம்பி வழிகிறது.

தற்போது வருடம்தோறும் திருக்குளத்தில் தீர்ததவாரி உற்சவம் நடைபெறுகிறது. ஆமருவியப்பனின் திருவாராதனத்திற்குக் குளத்து நீர் பயன்பாட்டில் உள்ளது.

குளத்தில் மீன்களின் கூட்டம் அதிகமாகி, அற நிலையத்துறை மீன் ஏலம் விடும் அளவிற்கு முன்னேறிய ஒரு நாளில், ‘ஒருவேளை 9ம் நூற்றாண்டு வாளை மீனின் சந்ததியாக இருக்கலாம்,’ என்றார் அப்பா.

திருமங்கையாழ்வார் திரும்பி வந்தால் சந்தோஷப்படுவார்.

DSC01624

 

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “அமுதம்”

  1. அருமையோ அருமை. இன்று மத்திய மாநில அரசுகள் ஏரி குளம் போன்றவற்றை கைவிட்டுவிட்டது. நதிகள் இணைப்புக்கு மக்கள் மனநிலையை தயார் செய்து கொண்டு வருகிறது. பேரழிவிற்கு வழிவகுக்கிரார்கள். உள்ளூர் நீராதாரங்களை பெருக்கி சீரமைப்பதே இன்றைய அவசிய அவசர பணி.. வாழ்க மூவர் பணி.. ஆமருவியப்பன் என்றும் அருள் செய்க.

    Like

  2. ஒரு நல்ல வெற்றிகரமான முயற்சி. இனி மக்கள்தான் செய்யவேண்டும். அரசை நம்பி பயணில்லை.

    Like

  3. பெருமை அனைத்தும் உங்கள் தந்தையுடன் இணைந்து அலைந்த இரு பெரியவர்களுடன் அந்த ஹார்ட்வேர் வியாபாரிக்கும் செல்லும் . பெருமாள் அருள் அந்த நால்வருக்கும் அவர் தம் சந்ததிகளுக்கும் பூரணமாக உண்டு.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: