ஆண்டாளின் திருப்பாவைக்குக் கலைஞர் 1980களில் உரை எழுதினார். Illustrated Weekly ல் அது ஆங்கிலத்தில் வெளிவந்தது. விபரம் தெரியாத நேரத்தில் பள்ளி நூலகத்தில் படித்தபோது துணுக்குற்றேன். இப்படிக்கூட இருக்குமோ என்று குழம்பிய நாட்கள் அவை. புரியத் துவங்கிய நாட்களில் Illustrated Weekly மீதும் கலைஞர் மீதும் பெருங்கோபம் ஏற்பட்டது.
திருப்பாவையை எனக்குச் சரியாகப் புரிய வைத்தவர் என் பெரியப்பா அமரர் டாக்டர். இராமபத்திராச்சாரியார் அவர்கள். பம்பாயில் சயான் கிருஷ்ண சபாவில் அவர் 90களில் ஆற்றிய உபன்யாசங்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. அப்போது எடுத்த்துக்கொண்ட குறிப்புகள் இன்றும் உதவுகின்றன. மார்கழி முதல் நாள் அந்த ஞான குருவை நினைக்கிறேன்.
ஜீவாத்மா பரமாத்மாவைச் சென்று சேரும் பயணத்தைத் திருப்பாவைப் பாடல்கள் குறிக்கின்றன.பாடல்களில் நேரடியான பொருள் என்று இருப்பது போல், அவற்றின் உள்ளீடாக ஒரு பொருள் (ஸ்வாபதேசம்) இருப்பது வியாக்கியானங்கள் வழியாக நமக்குத் தெரிகிறது. பக்தியை விடுத்துப் பார்த்தாலும் திருப்பாவைப் பாடல்களில் சூழியல் பெருமளவில் உணர்த்தப்படுகிறது. இப்படி ஒரு காலத்தில் நாம் இல்லையே என்னும் ஆற்றாமையையும் இப்பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
ஆனால் மார்கழியின் கடைசி சில நாட்கள் சோகமானவை. இப்பாடல்களையும் வியாக்கியானங்களையம் அனுபவிக்கும் 30 நாள் பயணம் முடிவடைவது மனதில் பெரிய வெறுமையை ஏற்படுத்துவது ஒவ்வொரு மார்கழியிலும் ஏற்படும் தவிர்க்கமுடியாத நிகழ்வு.
ஆண்டாளுடன் பயணித்துப் பாருங்கள். உணர்வீர்கள்.