திவ்யப்பிரபந்தத்தில் பகவத் கீதை இருக்கிறதா?
இப்படி ஒரு தமிழறிஞர் கேட்டிருந்தார் கம்ப ராமாயணத்திலோ திருமுறைகளிலோ ஒரு சொல்லைச் சொன்னால் அதன் தொடர்புடைய பல செய்திகளை அரை மணி நேரம் பேசுவார். 80 வயது. எப்போது எங்கு சந்தித்தாலும் இப்படி ஏதாவது கேள்வி கேட்டுச் செல்வார். முனைவர். பேராசிரியர். அவர்தான் இந்தக் கேள்வியைக் கேட்டவர்.
‘இருக்கிறது ஐயா’ என்றேன். ‘நேரடியாக இல்லை. ஆனால் கீதையின் பேசுபொருளான சரணாகதி தத்துவம் ஆண்டாள் பாசுரத்தில் தெரிகிறது’ என்றேன். முக மலர்வுடன் அருகில் வந்தார்,’ அதானே பார்த்தேன். நீங்க ஆண்டாளை விட மாட்டீங்களே’ என்று அருகில் அமர்ந்தார். ஐயா அமர்ந்ததும் இன்னும் இரு ஆசிரியர்கள் வந்து அமர்ந்தனர்.
‘ஆண்டாளின் முதல் திருப்பாவைப் பாசுரம் ,’ மார்கழித்திங்கள்..’. அதில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்கிறாள். நாராயணன் நமக்குத் பறை தருவான் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ‘நாராயணனே’ என்று ஒரு ‘ஏகாரம்’ விகுதியாய் வருகிறது. அதாவது நானே, நான் மட்டுமே உனக்கு மோக்ஷம் அளிப்பேன் என்பதாக ஆண்டாள் சொல்கிறாள்,’ ஏன்றேன்.
‘ஆமாம். பாசுரம் சரி. கீதை?’ என்றார் இன்னொரு ஆசிரியர்.
‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்கிற வரி இதையே உணர்த்திடுகிறது இல்லையா. எனவே கீதையின் சரணாகதி தத்துவ சாரம் ஆண்டாள் பாசுரமான திருப்பாவைப் பாசுரம்,’ என்று நிறுத்தினேன்.
‘நல்ல விளக்கம். ஒரு இன்பரன்ஸ் மாதிரி இருக்கு.. அதுசரி’ என்று சொன்னவர் ‘நேரடியா எங்கியாவது இருக்கா?’ என்று வினவினார். ‘பார்த்த்துச் சொல்கிறேன் ஐயா’ என்று விடைபெற்றேன்.
சிங்கையில் மரபு சார்ந்த இலக்கிய அறிஞர் உலக நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் கிடைக்கும் ஓரிரு சந்தோஷங்கள் இம்மாதிரியான பெரியவர்களுடன் கலந்துரையாடுவது, ‘நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம்’ என்பதை நான் அவ்வப்போது உணர்ந்துகொண்டே இருப்பது.
அந்தத் தமிழறிஞர் பேராசிரியர் முனைவர். சுப. திண்ணப்பன் அவர்கள்.