அவசரமில்லாமல் டீயோ காபியோ பருகும் போது, அந்த டீ மற்றும் காபியின் பூர்வீகம் பற்றி எண்ணுவதுண்டு.
அந்த ஒரு கோப்பை டீயின் பின்னால் நமது மூதாதையின் குருதி இருப்பது போல் தோன்றும். 200 வருஷங்களாகத் தங்களை அடிமைகளாய் விற்றுக்கொண்டு மலேயா, இலங்கை என்று தங்களையே மாய்த்துக்கொண்ட அந்தத் தியாகிகளை நினைக்கும் போது, மனம் வெதும்பி, அப்படியாவது அந்த பானத்தைக் குடிக்கத்தான் வேண்டுமா என்று தோன்றும்.
நினைவடுக்குகளில் ஆழப்புதைந்த நினைவுகள் ஒன்றிலிருந்து ஒன்றாக வெளிக்கிளம்பும். பக்கிங்ஹாம் கால்வாய் கட்டப்பட்ட கதை, அதன் பின்னால் இருந்த வெள்ளை வாணிபம், அதற்காக நீட்டிக்கப்பட்ட பஞ்சம், அப்போது மலேய டீ / ரப்பர் வேலை செய்யச் சென்ற நம்மவர்கள் என்று நினைவுகள் விரிந்து குடிக்கும் டீ கசக்கத் துவங்கும்.
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த போது இந்தக் கதையைத் துவங்கினேன். நண்பர் பேசவில்லை. நான் சொல்லி முடித்தவுடன் அவர் சொன்னது,’ ஆமாம் சார். நீங்க சொன்னது எங்க பாட்டி தாத்தா கதை தான். அவங்க கூர்கில் சிந்தின ரத்தம் ஞாபகம் வந்தது .அவர்கள் தோட்டத் தொழிலாளிகளாக இருந்தவர்கள் ‘ என்றார் நெகிழ்ச்சியுடன்.
அடுத்த முறை டீ குடிக்கும் போது சற்று நிதானமாகச் சிந்தியுங்கள். பல வரலாறுகள் புலப்படும்.
Leave a comment