மோர்க்குழம்பு, கண்ணமுது, ததியோன்னம் முதலானவை கொண்ட நல்ல சாப்பாட்டில் வெங்காயத்திற்கு இடமில்லை. அது போல் தான் கர்னாடகக் கச்சேரிகளும் நானும். இங்கு நான் = வெங்காயம். அடியேனின் சங்கீத வித்வத் அவ்வளவே.
கல்பனா நாகேஸ்வரன் தனது மகள் குமாரி.ஐஸ்வர்யாவின் கச்சேரிக்கு அழைத்த போது மேலே சொன்ன உதாரணம் என் நினைவில் வந்தது. ஆனால், கல்பனா என்னுடன் படித்தவர். அவரது கணவர் எனது நல்ல நண்பர். ஐஸ்வர்யாவின் பாட்டிற்கு எங்கள் குடும்பமும் அடிமை தான்.
எனவே இன்று (SIFAS – Singapore Indian Fine Arts Society) நடத்திய விழாவில் பங்கேற்றேன்-ஆடியன்ஸில் அமர்ந்திருந்தேன் என்று பொருள் கொள்க. ஒரு மணி நேரம் கான மழை. பொதுவாகவே சிங்கப்பூரில் தினமும் மழை உண்டு. இன்று இசை மழை.
எனக்குத் தெரிந்து ‘செக்கனி ராஜ’ பாடல் மிக நன்றாக இருந்தது. இறுதியில் முருகன் பேரில் பாடிய தில்லானாவும் அபாரம். ‘ஶ்ரீநிவாஸ திருவேங்கடமுடையான்’ பாடியதும் மனம் குளிர்ந்தது. (இருக்காதா பின்னே? கணபதி, முருகன், அம்பாள் எல்லாரும் வந்தாகிவிட்டது, பெருமாள் வராவிட்டால் எப்படி?)
குமாரி.ஐஸ்வர்யா பொறியியல் படிக்கிறாள். சங்கீத ஞானமும் அபாரம். இறையருளுடன் மேலும் நன்றாக வர வேண்டும். அம்பாள் கடாக்ஷம்.
வெளி நாட்டில் பல வருடங்களாகவே இருந்தாலும், பிள்ளைகளை பாரத கலாச்சார முறைப்படி வளர்க்கும் கல்பனா மற்றும் நாகேஸ்வரன் போற்றுதலுக்குரியவர்கள்.
இனி நல்ல தளிகையில் வெங்காயமும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சுவாமி தேசிகன் பொறுத்தருள வேண்டும்.