‘கம்பன் காட்டும் கணைகள்’ என்னும் அ.கி.வரதராஜனின் நூல் ஆய்வுடன் இன்றைய சங்கப்பலகை நிகழ்வு துவங்கியது. திருமதி.சிவசங்கரி செல்வராஜ் வாலமீகி ராமாயணத்தையும் கம்பனையும் வரதராஜனாரின் நூல் வழியாக ஒப்பிட்டுப் பேசினார். சிவசங்கரி துளசி ராமாயணத்தையும் உள்ளிழுத்து, வாலி வதம் குறித்த ஒப்புமைப் பார்வையை முன்வைத்தார். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் உடைய இந்தப் பேச்சாளர் அமைதியாகவும், ஆழமாகவும் பேசியது மனதிற்கு நிறைவாக இருந்தது.
பின்னர் பேசிய தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் பிராமி கல்வெட்டெழுத்துக்கள் வழியாக நீண்ட தமிழக வரலாற்றைப் பற்றி உரையாற்றினார். பிராமி எழுத்துக்கள் ‘கிராஃபிட்டி என்கிற குறியீட்டுக் காலத்திற்கு அடுத்த, மொழி வளர்ச்சியின் அடி நாதம்என்று சொல்லத்தகுந்த காலகட்டத்தை உணர்த்தியதை உணர முடிந்தது. தமிழ் வட்டெழுத்து வருவதற்கு முந்தைய காலகட்டத்தை பிராமி எழுத்துக்கள் காட்டி நின்றன. இந்த எழுத்துக்கள் வழியாக சமண, பௌத்த, ஆஜீவக சமயங்கள் திகழ்ந்த தமிழக நிலபகுதிகள் யாவை என்று படங்களின் ஊடாக திரு சாந்தலிங்கம் விளக்கியது நம்மை பிராமி எழுத்துக் காலத்தில் சில நிமிடங்கள் கொண்டு சென்றது.
எத்தனை சமணப் பள்ளிகள்? அப்பள்ளிகளுக்கு எத்தனை தமிழ் மன்னர்கள் கொடை அளித்திருக்கிறார்கள்? சமணத் துறவிகளுக்கான கல் படுக்கைகள் எங்குள்ளன? அவற்றில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் மூலம் நாம் அறியும் செய்திகள் யாவை? பிராமி எழுத்துக்களை எப்படிப் படிப்பது ? என்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திரு.சாந்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை, தமிழர்களுக்கு மிக முக்கியமான உரை என்பதில் ஐயமில்லை. சித்தன்னவாசல், பல குடைவரைக் கோவில்கள் என்று பயணித்து, பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் சிலையில் கொண்டு முடித்தார் திரு.சாந்தலிங்கம். ஆஜீவக, சமண மரபுகள் பற்றிய பிராமி எழுத்துக்கள் என்று துவங்கிய அவரது பேச்சு, திருப்பரங்குன்றத்தில் தவ்வை வழிபாடு வரை பயணித்து, மிக செறிவான தொல்லியல் சார்ந்த வரலாற்று, சமய, வாழ்வியல் செய்திகளை ஆதாரத்துடன் நிறுவுவதாக இருந்தது.
இறுதியாகப் பேசிய முனைவர்.கௌசல்யா ‘சிலம்பு காட்டும் பெண்கள்’ என்பது பற்றி ஆழ்ந்த, செறிவானதொரு உரையை நிகழ்த்தினார். சிலம்பு வழியாக அக்காலத்துப் பெண்களின் வாழ்வியல், குலங்கள் சார்ந்த பெண்களின் குணாதிசியங்கள், பெண்களுக்கான பொதுவான நிலைகள், அறங்கள் என்று பன்முகத்தன்மை கொண்ட பார்வையாக இருந்தது அவரது உரை. பெண்களை ஆய மகளிர், அந்தண மகளிர், மறவர் மகளிர், கணிகையர் என்று பிரித்துக்கொண்டு அவர்களது தனித்தன்மைகளையும், பிரிக்காமல் பொதுவாக மகளிர் சார்ந்த பார்வை என்பதாக அவர்களுக்கான பொது இயல்புகள் என்று சிலம்பு என்ன காட்டுகிறது என்பதை கௌசல்யா கூறியது, தேர்ந்த இன்னொரு ஆய்வாளர் ஒருவர் சிங்கை தமிழாய்வுத் துறையில் இருக்கிறார் என்பதை உணர்த்தியது. கண்ணகி குறித்த ‘பேசா மடந்தை’ என்னும் தொடர் பற்றிய இவரது பார்வை போற்றுதலுக்குரியது.
திடீரெனப் பேச வந்த ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், எந்த தயாரிப்பும் இன்றி சிலம்பைப் பொழிந்தார். ‘தேரா மன்னா..’பாடல் கூறி, ” கண்ணகி பேசா மடந்தை அல்லள்” என்று நிறுவினார் முத்துக்கிருஷ்ணன்.
வாசகர் ராகவன் கம்ப ராமாயணத்தில் வாலி வாதம் பற்றிய பரிணாமப் பார்வை அளித்தார். வரதராஜனின் நூல் அனைவருக்கும் அளிக்கப்பட்ட்து. அத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
அறிவுத்தீனி இடும் அருமையான நிகழ்வு. மேலும் வளர அடியேனின் பிரார்த்தனைகள். நன்றி…
LikeLike
Thanks Raghavan
LikeLike