தொடந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று சிங்கப்பூர் எம்.ஆர்.டி. ரயிலில் நிற்கக் கூட இடம் இல்லை. மழை வேறு. ஊட்ரம் பார்க் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க, நீல விழிகள் கொண்ட ஐரோப்பியப் பெண் கைக்குழந்தையுடன் ஏறினாள். கூட்டத்தில் ‘பிராம்’ வண்டியை நுழைக்க பெரும் முயற்சி தேவைப்பட்டது. வயதானவர்கள் / கர்ப்பிணிப்பெண்கள் அமரும் 2 இருக்கைப் பகுதியில் அமர்ந்தாள்.
‘சமஸ்கிருதத்திற்கான போராட்டம்’ நூலில் ஆழ்ந்திருந்த என் பாதத்தில் எதோ அழுத்தத்தை உணர்ந்தேன். அருகில் நின்றிருந்த சீன முதியவர் – 80 வயது இருக்கலாம் – தன் ஊன்றுகோலை என் காலில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தார். மெதுவாக இறக்கி வைத்தேன். அவருக்குத் தான் அப்படிச் செய்தது கூட தெரியவில்லை. அந்த முதியவரின் ஒரு கால் நிலை இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் கவனித்தேன். அந்தப்பெண் ஒரு இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த பகுதியில் யாரும் நிற்கக்கூட இல்லை எனபதையும் உணர்ந்தேன். ‘ஒரு இடத்தில் அமருங்கள்’ என்று அந்தப் பெரியவரிடம் சொன்னேன். அவர் சீனத்தில் ஏதோ சொன்னார். ‘அடுத்த ஸ்டேஷனில் இறங்கப்போகிறேன்’ என்பதாக இருக்கலாம் என்று ‘சமஸ்கிருதத்திற்கான போராட்ட’த்தில் ஆழ்ந்தேன்.
10 நிமிடங்கள் கழித்துப் பார்த்தேன். பெரியவர் இன்னும் நின்று கொண்டிருந்தார்.அந்தப் பெண் 2 இருக்கைகளில் அமர்ந்திருந்தாள்.
ஒரு இடத்தைக் காலில் செய்யுமாறு சொல்ல, பொறுக்க முடியாமல் ஒரு அடி முன்னேறினேன். பெரியவர் என் கையைப் பிடித்து ஏதோ சொன்னார். சீனம் புரியாததால் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ‘யாரும் ஒன்றும் சொல்லாமல் இப்படி நிற்கிறார்களே’ என்று கோபம் மேலிட, அப்பெண்ணைப் பார்த்தேன்.அவள் பெரிய துணியால் மூடியபடி குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள்.
பெரியவர் இப்போது என் கை பிடித்து மீண்டும் எதோ சொன்னார். கடைசியில் ‘ஸே ஸே’ ( நன்றி) என்றது புரிந்தது. ‘நான் போக வேண்டியவன். நிற்கலாம். குழந்தை வாழ வேண்டியது. அது சௌகர்யமாக உண்ணட்டும்’ என்பதாக ஏதாவது சீன / கிழக்காசிய அறமாக இருக்கலாம் என்று நினைத்துகொண்டேன்.
நான் இறங்கும் இடம் வந்தது. பெண் இன்னமும் இரு இருக்கைகளில் அமர்ந்திருந்தாள். குழந்தை அவள் மடியில் சௌகர்யமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. பெரியவர் ‘ஸே ஸே’ என்றார்.
நடைமேடையில் இறங்கிய பின் பெரியவரைப் பார்த்தேன். பற்கள் இல்லாமல் பளீரென்று சிரித்தார். அவரது ஒரு கால் இன்னமும் ஆடிக்கொண்டிருந்தது.
Leave a comment