புதுக்கவிதை என்றால் குதிகால் பின்னந்தலையில் பட ஓடிவிடும் வர்க்கம் நான். கண்றாவியாக எழுதப்படும் வரிகளைக் கவிதை என்று சொல்லிக் கடுப்பேத்தும் கூட்டம் அதிகமானதால் ஓடி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
ஆனால், இன்று மதியம் மதிக்குமாரின் (Mathikumar Thayumanavan) ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. ஒரே சமயத்தில் தாய் மனம், வறுமை, கல்வி, மங்கலம் என்று பல கோணங்களைக் காட்டும் அபாரமான வரிகள். ஒரு க்ஷணத்தில் ஒரே அடியாக உச்சத்தைத் தொட்டு நிற்கும் வரிகள் இவை. நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கன்னத்தில் ஓங்கி அறைந்து எழுப்பும் குழந்தையைப் பார்த்தால் ஒரே சமயத்தில் மனதில் எழும் குதூகலமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வை இந்தக் கவிதை வரிகள் ஏற்படுத்தின.
சொற்சிக்கனம், பொருட்செறிவு, வட்டாரச் சொற்கள் தரும் இயல்புத் தன்மை என்று இவ்வரிகள் வழியாக நாம் அடையும் உணர்வுகள் மிக அணுக்கமானவை . படித்துவிட்டு 5 நிமிடங்கள் விடடத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன்.
இம்மாதிரியான எழுத்துக்களே தமிழில் கவிதை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இக்கவிஞர் வளர வேண்டியவர். தமிழ் முரசு இவரைப் போன்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவருக்கு என் வாழ்த்துக்கள். கவிதையை அனுபவித்துப் பாருங்கள்.
இத்துணூண்டு
வெளக்கமாத்து
குச்சிக தான்
தூந்துபோகாம
காப்பாத்துச்சு
அம்மாவுட்டு காதுகளையும்
அந்த வருசப் படிப்பையும்.