‘வேற ஒண்ணும் கேக்க வேண்டாம். ஒலி 96.8 கேட்டால் என்ன? நான் சொல்றதுக்காகவாவது கேட்கலாமோன்னோ?’ என்கிற ஆஞ்ஞைக்கிணங்க நேற்று இரவு நடையின் போது சிங்கை வானொலி கேட்டேன். பழைய பாடல்களாக ஒலிபரப்பினார்கள். நிற்க.
‘இப்ப அரியலூர் மாவட்டதிலேருந்து ஜோதிலட்சுமி பேசறாங்க’ என்றார் அறிவிப்பாளர். அரியலூரா? ஐ.எஸ்.டி. கால் எகிறிடுமே என்று நான் கலங்கியவனாய் நின்றேன். ‘என் பேர் ஜோதிலட்சுமி, என்னை டயானான்னும் கூப்புடுவாங்க,’ என்று ரொம்ப சந்தோஷத்துடன் பேசினார் அந்தப் பெண். ‘தினமும் பேஸ்புக் வழியா ஒலி 96.8 கேப்பேன். இன்னிக்கி பேசணும்னு விடாம டிரை பண்ணி பேசிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு,’ என்றவர் தான் ஏர் டெல் சேவையைப் பயன்படுத்திப் பேசுவதாகக் கூறினார். மொத்தம் 4 நிமிடங்கள் பேசியிருப்பார். எப்படியும் ரூ.500 ஆகியிருக்கும்.
சிங்கப்பூர் வானொலிப் படைப்பாளரிடம் பேச இவ்வளவு செலவு தேவையா என்று நினைத்துக் கொண்டிருந்த போது, சிங்கையில் இருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘இன்னிக்கி எப்படியாவுது பேசணும்னு முயற்சி பண்ணினேன்,’ என்றார். தத்துவப் பாடல்கள் வேண்டும், ‘எத்தனை கோடி பணம் இருந்தாலும்..’ என்னும் பழைய பாடல் வேண்டும் என்றார். விடாமல் பேசியவர் ‘எனக்கு கால் இல்லை. நடக்க முடியாது. வீட்டுக்குள்ளயே நடமாடுவேன். தினமும் வானொலில ஒலி 96.8 கேட்பேன். வானொலி தான் எனக்குத் துணை,’ என்றார். அறிவிப்பாளர் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேவை இருக்கிறது. வானொலியை நாம் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் அது பலருக்குப் பல விதங்களில் உதவுகிறது. மனிதர்கள் கடல் தாண்டி இருந்தாலும் இந்த ஒரு அலைவரிசையில் இன்பம் பெறுகிறார்கள்.
ஒரு வகையில் வானொலியும் பிரும்மம் போலவே தெரிகிறது. இருப்பது ஒன்று தான். அதனை நோக்கிய பயணம் பலரிடம் பலவகையில் இருக்கிறது. கடல் கடந்து பேசும் ஜோதிலட்சுமிக்கு என்ன கவலைகளோ. ஆனால் அவர் ஒலி 96.8 மூலம் அதனை மறக்கிறார். பணம் செலவழித்துப் பேசினாலும் அவருக்கு ஒரு இன்பம் கிடைக்கிறது. சிங்கப்பூரின் அழைப்பாளரும் தனது உடற்குறையை மறந்து ஒரு மணி நேரம் இன்பமாக இருக்க அதே ஒலி வானொலியை நாடுகிறார்.
‘அடுத்த பாடல்’ என்றார் அறிவிப்பாளர். உன்னிப்பாகக் கவனித்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் இருந்து ‘நான் அசைந்தால், அசையும் உலகம் எல்லாமே’.
பிரும்மம் ஒன்று. அதைப் பார்ப்பவர்கள் பலவாறாகப் பார்க்கிறார்கள் / பேசுகிறார்கள். ‘ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி’ என்கிற உபநிஷத வாக்கியம் நினைவிற்கு வர மேலும் நடந்தேன்.