மனித மனம் கீழ்மையை நாடுகிறது. பிறரது கீழ்மை பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. கீழ்மையை மற்ற மத(ன)ங்களிலும் புகுத்திப் பார்க்கிறது. ஒருவரை அவரது கொள்கை அடிப்படையில் எதிர்ப்பதை இன்னும் கீழே இழுத்துச் சென்று தனி மனித வசைபாடலில் இறங்குகிறது. இதில் பெருமிதமும் கொள்கிறது.
எனது ஒரு பதிவில் சாகரிகா கோஷ் செய்துள்ள பின்னூட்டத்தைப் படித்தவுடன் தோன்றிய உணர்வு இது. நாகரிகத்தின் எல்லைகளை வரையறுக்க முடியாதவர்களாய் நாம் மாறிப்போனோம் என்பது தெரிந்தால் சார்லஸ் டார்வின் தனது கல்லறையில் புரண்டு படுப்பார். பரிணாம வளர்ச்சியில் மனிதன் பின்னேறி குரங்காகிக் கொண்டிருக்கிறான் என்று அறிந்தால் டார்வின் அவசியம் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன்.
காஞ்சி சுவாமிகள் பற்றிய ஊடக நடத்தையும், அதற்கு முந்தைய காவல் துறை / அரசு நடத்தையும் மனிதனின் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சித் தத்துவதத்தை உறுதிப்படுத்துவதாகவே நினைக்கிறேன்.
இன்று காலை ஒரு நிமிடம் ஓடக்கூடிய காணொளி ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். ஒரு கடையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் வியாபாரி, தன் கடைக்குப் பொருள் வாங்க வந்த 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவமதிக்கிறார் (எழுத்தில் வடிக்க இயலவில்லை). ஆணின் மதம் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். நாள் முழுவதும் என்னை மிகவும் பாதித்த காணொளி அது.
இங்கு அந்த ஆணின் உள்ளத்தில் என்ன ஓடியிருக்கும்? அவளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, எனவே என்னவேண்டுமானாலும் செய்யலாம், எவ்விடத்தில் வேண்டுமானாலும் கை வைக்கலாம் என்று தோன்றியிருக்கும் என்பதாக என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. ஒரு நொடி, அவள் அந்தக் கிழவனைக் கடைக்கு வெளியே இழுத்து வந்து அவனது கன்னத்தில் காலணியைக் கழட்டி விளாச மாட்டாளா என்று கற்பனை செய்து பார்த்தது. ஆனால் அந்தப் பெண் தன்னைக் காத்துக் கொள்ள மட்டுமே செய்தாள். தனது அவமானத்தின் சுமையைக் குறைக்கவே அவள் முயன்றாள். அவள் செய்தது சரியா என்று ஒரு பெண்ணாக இருந்து பார்த்தால் மட்டுமே எனக்குப் புரியும் என்று நான் மன அமைதி அடைய முற்பட்டேன்.
இரவு 11 மணிக்கும் உறக்கம் வரவில்லை. மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறேன்.
முடிவுக்கு வந்துவிட்டேன். டார்வின் புரண்டு படுத்திருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.