இன்று நண்பரின் இல்லத்தில் சத்யநாராயண பூஜையில் கலந்து கொண்டேன். சிவாச்சாரியார் பண்ணி வைத்தார். புதிய முகமாக இருந்தது. விசாரித்தேன். மாயூரம் அருகில் இருந்து வந்திருந்தார். ‘அட நம்மூரு’ என்று தேரழுந்தூரில் உள்ள பாடல் பெற்ற சிவாலயத்திற்கு நிரந்தர சிவாச்சாரியார் இல்லையே என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது:
‘சுவாமி, இப்ப யாரோ ஒருத்தர் வந்திண்டிருக்கார். ஆனால் பல ஊர்கள்ல சிவாச்சாரியார், பண்டாரம் யாருமே கிடையாது. ஒருத்தரே ஒரு நாளைக்கு சுமார் 10 ஊருக்குப் போய் விளக்கேத்தி, நைவேத்யம் பண்ணிட்டு, பூட்டிண்டு வந்துடறா. நான் இருந்த வரைக்கும் ஒரு நாளைக்கு 15 கோவில் பார்த்துண்டேன்,’ என்றார்.
‘பூட்டிண்டு வந்துட்டா தரிசனம் எப்பிடி பண்றது?’ என்றேன்.
‘சரிதான். ஆனா, விளக்கேத்தறச்சே யார் வாராளோ அவா தரிசனம் பண்ணலாம். மறுபடியும் அடுத்த நாள் தான். ஆள் பத்தாக்குறை’ என்றார்.
‘வருமானம் எப்படி?’ என்றேன்.
‘சிவனுக்கும் எங்களுக்கும் ஒரே வருமானம் தான். அவனுக்கு சொத்து இருக்கு, வருமானம் இல்லை. எனக்கு அதுவும் இல்லை. எதோ தர்மத்துக்குக் கட்டுப்பட்டு, ஈஸ்வர பூஜை நிக்கப்படாதேன்னு பண்ணிண்டிருக்கோம்,’ என்றவரின் நா தழுதழுத்தது. மேலும் பேசினால் ஆழுதுவிடுவார் போல் இருந்தது.
‘ஈஸ்வரனையும் அந்த ஈஸ்வரன் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன்.