வெள்ளிக்கிழமை என்றால் ஜீன்ஸ் அணிந்து வர வேண்டும் என்பது என்ன கட்டாயம்? ஜீன்ஸ் பேண்ட் இல்லையென்றால் ஐயோ பாவம் போல் பார்க்கிறார்கள்.
ஜீன்ஸ் பேண்ட் மேல் எனக்கொன்றும் கோபமில்லை. ஆனால் இதுவரை அணிந்ததில்லை.
நான் 6 ம் வகுப்பு படிக்கும் போது அப்பா வேலை விஷயமாக டில்லி சென்றார். ‘எல்லாரும் வாங்கினாளேன்னு வாங்கினேன், குளிருக்கு அடக்கமா இருக்குமோன்னோ ‘ என்று எனக்கு ஒரு ஜீன்ஸ் வாங்கி வந்தார். நெய்வேலியில் அவ்வப்போது குளிரும்.
அந்த ஜீன்ஸ் தாராளமாகவே இருந்தது. தரையில் விரித்துப் படுத்துக் கொள்ளலாம். ஜில்லுப்பு ஏறாது. நானும் என் தம்பியும் பக்கத்து வீட்டு ரமேஷும் ஒரே நேரத்தில் அதனுள் புகுந்துகொள்ள அவ்வளவு தாராளமாக இருந்தது ஜீன்ஸ்.
3-4 வருஷங்கள் கழித்து ஜீன்ஸ் ஓரளவுக்கு முன்னேறியிருந்தது. அப்போது ரமேஷ் தேவைப்படவில்லை. நானும் தம்பியும் மட்டும் போதும்.
காலேஜ் போனபோது ஜீன்ஸை விட நான் வளர்ந்து விட்டதால் ஒருவழியாக அது வாசல் மிதியடியாக அம்மாவால் மாற்றி அமைக்கப்பட்டது. கடைசிவரை கிழியவே இல்லை. யாரும் போட்டுக்கொள்ள்வும் இல்லை. பாபு மட்டும் ரொம்ப தூரம் மூச்சிரைக்க ஓடிவிட்டு வந்தால் அதில் படுத்துக்கொள்வான். சிறிது நேரம் வால் ஆட்டிவிட்டுத் தூங்கிவிடுவான்.
டெக்ஸஸில் மாடு பிடிப்பவர்கள் ஜீன்ஸ் அணிவார்களாம். ஆமருவி என்று பெயர் இருப்பதால் நான் ஜீன்ஸ் அணிய வேண்டுமா என்ன? இன்று வரை அணிந்ததில்லை. அது மட்டும் அல்ல. ஜீன்ஸ் தயாரிக்க சாதாரண துணிக்குத் தேவைப்படுவது போல் பல மடங்கு தண்ணீர் தேவையாம். அந்தப் பாவம் வேறு வேண்டுமா என்ன? ஒரு வேளை இந்தக் குற்ற உணர்ச்சியால்தான் அதை அணிபவர்கள் ஜீன்ஸைத் துவைப்பதே இல்லையோ என்பதை முரணியக்கவாதிகள் ஆராயலாம்.
சில நாட்களுக்கு முன் ஒரு நாய்க்குட்டிக்கு ஜீன்ஸ் அணிவித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இருவரில் யாரவது ஒருவர் தான் பூரணமாக உடை அணிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது அரசாணை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.சென்ற வாரம் ஐபோன்-எக்ஸ் ஏந்திய நவநாகரிகப் பெண்மணி ஒருவர் ரயிலில் வந்தார். கையில் லூயி வூட்டன் பை. அதனாலோ என்னவோ பாவம் முழங்கால்களில் கிழிந்த, வெளிறிய ஜீன்ஸ் அணிந்திருந்தார். ஐயோ பாவம், எவ்வளவுதான் செலவு செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஜீன்ஸ் விலை அதிகமாம். கிட்டத்தட்ட ஐபோன் விலையில் பாதி இருக்குமாம். இறைவன் அவருக்கு கிழியாத ஜீன்ஸ் அளிக்கட்டும்.இத்தனை செலவு செய்து கிழிந்த உடையைத் தேர்ந்தெடுப்பது ஏதாவது உளவியல் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லை நான் தான் 16ம் நூற்றாண்டில் இருக்கிறேனோ தெரியவில்லை.பி.கு.: பாபு படுத்துறங்கிய ஜீன்ஸ் கடைசி வரை கிழியவில்லை. பாபுவும் அதைக் கிழிக்கவில்லை.