காலத்தைக் கடிகாரம் கொண்டு அளவிட முடியுமா?
கடிகார முள் வினாடிக்கு ஒரூ முறை என்று துடிக்கிறதே, அப்படித்தான் காலமும் நகர்கிறதா? அது ஏன் வினாடிக்கு ஒன்று என்று துடிக்க வேண்டும்? 1-24 வரை தான் காலம் என்று எப்படி எடுத்துக் கொள்வது? நம்முடைய ஒரு நாள் என்று உறங்கி எழுவதில் இருந்து மீண்டும் உறங்கும் வரை இருக்கும் நேரத்தைக் குறிக்க நாம் பயன் படுத்தும் ஒரு கருவியைக் கொண்டு காலத்தை அளவிடுவது எப்படி?
சரி. விஷயத்திற்கு வருவோம்.
நம்மால் அளவிட முடியாதது, அறிந்துகொள்ள முடியாதது காலம். ஆனால் நமது புலன்களுக்கு ஏற்பக் காலத்தை அனுமானிக்க நாம் பயன்படுத்தும் கருவி கடிகாரம். மணல் கடிகாரம், முள் கடிகாரம், சாவி கொடுக்கும் கடிகாரம், டிஜிட்டல் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்று பலதையும் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எதற்கு? நம்மால் அளவிட, அனுமானிக்க, அறிந்துகொள்ள முடியாத காலத்தை, நம்மால் அனுமானிக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களின் மூலமாக அறிந்துகொள்ள, அளவிட முயல்வதற்காக.
இப்போது கடிகாரம் என்பதற்குப் பதில் விக்ரஹம், சிலை என்று வைத்துப் பாருங்கள்.
நம்மால் அளவிட முடியாத, அறிந்துகொள்ளத் திராணியற்ற மனித மூளைக்கு ஏற்றாற்போல், அந்த மூளையால், மனத்தால் புரிந்துகொள்ளக்கூடிய வடிவம் இறை உருக்கள். சாவி கொடுக்கும் கடிகாரம், ஆட்டொமாட்டிக் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்பவை போல் சிவன், விஷ்ணு, தேவி, இன்னபிற தெய்வங்கள் என்று அவைகளுக்கான உருவங்கள். அவ்வளவு தான் ஆன்மிகம்.
மூலம் முக்கியமே தவிர, மூலத்தை அறிந்துகொள்ளப் பயன்படும் கருவியில் வேற்றுமைகள், உயர்வு தாழ்வுகள் தேவையில்லை.
பி.கு.: இல்லை, அப்ரைசல் நேரமெல்லாம் இல்லை. மனதில் தோன்றியது. அவ்வளவுதான். செய்தி உபவாசம் + நெடுநேரம் தனியான நடைப்பயிற்சி + வாரத்திற்கு 3 நூல்கள் வாசிப்பு = மேற்காணும் எண்ணங்கள்.