பேஸ்புக்கில் திரு.ராம் ராமச்சந்திரன் அவர்கள் ‘வைஷ்ணவ எழுத்தாளர்கள் பிரபந்தம், வைஷ்ணவம் பற்றியே எழுதுகிறார்கள்’ என்றது எனக்குப் புதிய பார்வையை அளித்தது. ( நவீன எழுத்தில் ‘புதிய திறப்பை உருவாக்கியது, புதிய புரிதலை ஏற்படுத்தியது’ என்றெழுத வேண்டும்)
அது என்ன பார்வை என்று நோக்கும் முன், கொஞ்சம் பின்னோக்கிப் பயணம்.
ஆழ்வார்கள், நாதமுனிகள், உடையவர், பிரபந்த உரையாசிரியர்கள், தேசிகன், மாமுனிகள், பின்னர் வந்த தாசர்கள் வரை எல்லாரும் வலியுறுத்தியதை இந்த ஸ்லோகத்தில் சுருக்கலாம் :
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்
அவன் பெயரைக் கேட்பது, அவன் பெயரைப் பாடுவது, அவனையே நினைத்திருப்பது, அவன் திருவடிக்குச் சேவை செய்வது, பூக்களால் அர்ச்சிப்பது, அவனுக்கு தாசனாய் இருப்பது, அவனுக்கே தன்னை அர்ப்பணிப்பது என்பதாக நவ-வித வழிபாடுகளையே சொல்கிறார்கள்.
குறிப்பாக, தற்போது ஆண்டாளைப் பேசுவதே சிறப்பாதலால் அவள் சொல்வதும் இவற்றை ஒட்டியே வருகின்றன –
- ‘தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்’
- ‘நாட்காலே நீராடி வந்தோம்’
- ‘தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித் தொழுது’
- ‘அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து’
- ’கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தி’
- ’பாடிப் பறை கொண்டு’
- ’தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்’
- ‘நாமம் பலவும் நவின்று’
- ‘நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்’
- ‘முகில் வண்ணன் பேர் பாட’
- ‘மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’
- ‘கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்’
- ‘பங்கயக் கண்ணானைப் பாடேலோ’
- ‘மாயனைப் பாடேலோ’
- ‘உன் மைத்துனன் பேர் பாட’
- ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’
- ‘அருத்தித்து வந்தோம்’
- ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’
- ‘சிறு பேர் அழைத்தனவும்’
- ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
மதுரகவிகளும் ‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே’ என்று பெருமாளைச் சொல்லாவிட்டாலும் நம்மாழ்வாரைச் சொல்கிறார்.
ஆனால், ஒருவரும் எழுதி வழிபடச் சொல்லவில்லை. ‘புதிய ஏற்பாடாகத் தற்கால வைஷ்ணவர்கள் பிரபந்தம் பற்றியும், வைஷ்ணவம் பற்றியும் எழுதி எழுதியே வழிபடுகிறார்களோ?’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. காஞ்சி பரமாச்சார்யரும் ‘ஶ்ரீராமஜெயம்’ எழுதச் சொன்னார் என்பதும் இதனுடன் ஒன்றி வருகிறது போல் உணர்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
Leave a comment