‘Data Privacy’ என்கிறார்கள். சிரிப்பு வருகிறது. அப்படி ஒன்று என்றுமே இருந்ததில்லை.
நான் என்றைக்கு வீடு மாற்றினேன், எந்தக் குடியிருப்பில் எவ்வளவு நாள் இருந்தேன், எம்-1 சிம் கார்டைப் பயன்படுத்தி எந்த ஊருக்கெல்லாம், எவ்வளவு, என்ன பேசினேன், எம்-1ல் இருந்து சிங்டெல் ஏன் மாறினேன், பிறகு யாருக்கு, எதற்கெல்லாம் பேசுகிறேன், ஸ்கைய்ப் வீடியோவில் என்ன பேசியிருக்கிறேன், எந்த ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தேன், அலுவலகத்தில் எவ்வளவு நேரம் இருந்தேன், என்னென்ன செய்தேன், கணினி மூலம் என்னென்ன தளங்களைத் துழாவினேன், ரயிலில் எந்த இருக்கையில் அமர்ந்தேன், எந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தேன், கோவிலுக்குள் எந்தெந்த இடங்களில் நின்றேன், சனியன்று காலை முடி திருத்தும் கடையில் எவ்வளவு நேரம் இருந்தேன், என்ன உடை அணிந்திருந்தேன், எவ்வளவு பணம் கொடுத்தேன், சில்லறை எவ்வளவு பெற்றேன், நூலகத்தில் கணியில் என்ன தளங்களைக் கண்டேன், என்னென்ன நூல்கள் எடுத்தேன், என்னென்ன நூல்களுக்கு முன்பதிவு செய்தேன், அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தேன், எந்தக் கடன் அட்டை வழியாகப் பணம் செலுத்தினேன், காப்பிக் கடைக்குள் சென்ற நேரம், அமர்ந்திருந்த இருக்கை, கடன் அட்டை பயன்படுத்தியிருந்தால் என்னென்ன கடைகளில் எந்த வகையான கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறேன், என்ன வாங்குகிறேன், ஊபர் பயன்பாடு எவ்வளவு, எந்தெந்த இடங்களுக்குச் செல்கிறேன், செல்லும் நேரங்கள், கடன் மிதி-வண்டி பயன்படுத்தினால் எங்கிருந்து எங்கு செல்கிறேன்….
சாம்பலாகும் வரை என் நடவடிக்கைகள் நிறுவனங்களிடம் (அ) அரசிடம் உள்ளன அல்லது அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் தவறில்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். என் தனி மனித நடவடிக்கைகளில் அரசுக்கு அக்கறையில்லை ( நான் நல்லவனாக இருக்கும் வரையில்). அரசுக்குத் தேவை: ஒரு தேச விரோதியின் நடவடிக்கைகள். அதை இனம்காண எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதை சிங்கப்பூர் / ஜப்பான் செய்கிறது. ஒவ்வொரு நாடும் செய்ய வேண்டும். பெரும் பொருட்செலவு தான். ஆனால் வேறு வழி இல்லை.
என்ன ஒரு விஷயம் என்றால் – அரசு நல்லதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு மக்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு வேண்டும். ‘மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சுமேரியா கண்டத்தை அகழ்ந்தெடுப்பேன்’, ‘தனி நாடு காண்பேன்’ என்று சவால் விடும் அரை வேக்காடுகளை அரசில் அமர வைத்தால் நிலைமை கவலைக்கிடம் தான்.
என்ன இருந்தாலும் Data Privacy இருந்தே ஆக வேண்டும் என்றால், அது சுமேரியா கண்டத்தில் தான் சாத்தியம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத இடத்தில் மட்டுமே இதனைச் செயல்படுத்த முடியும்.
பேஸ்புக் நமது தகவல்களைக் கேட்டால் கொடுக்கலாம், கூகிள் கேட்டால் தரலாம், ஆப்பிள் ஒரு கணக்கு துவங்கக் கூட கடன் அட்டை விபரங்களைக் கேட்கிறது ஆகவே தரலாம். ஆனால், அரசு நமது விபரங்களைக் கேட்டால் தரவியலாது என்பது என்ன ஒரு எண்ணம்?
கிராமங்களில் ரேஷன் அட்டையைக் கூட அடகு வைக்கும் வழக்கம் உள்ளது. கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் வெளியிலேயே இயற்கை உபாதைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதில் டேட்டா பிரைவசி என்று கூச்சலிடுவது மேட்டுக்குடி நகர்ப்புறம் சார்ந்த நக்ஸல் அரசியல் தவிர வேறென்ன? டெல்லியிலும் சென்னையிலும் குளிர் ஊட்டப்பட்ட ஸ்டூடியோக்களில் அமர்ந்துகொண்டு டேட்டா பிரைவசி பற்றிப் பேசுபவர்கள், அமெரிக்கன் கான்சுலேட்டில் விரல் ரேகையையும், அமெரிக்க விமான நிலையக் குடி நுழைவுகளில் பத்து விரல் ரேகையையும் பதியச் சொல்லும் போது வாய் திறப்பதில்லை என்பது என்ன வகையிலான மேட்டுக்குடி நபும்ஸகத்தனம்?
தேச நலன் என்னும் வேள்வியில் ‘Data Privacy’யை ஆகுதி ஆக்குவது என்ன தவறு?
Truth. The whole truth and simply put!
LikeLike
//டெல்லியிலும் சென்னையிலும் குளிர் ஊட்டப்பட்ட ஸ்டூடியோக்களில் அமர்ந்துகொண்டு டேட்டா பிரைவசி பற்றிப் பேசுபவர்கள், அமெரிக்கன் கான்சுலேட்டில் விரல் ரேகையையும், அமெரிக்க விமான நிலையக் குடி நுழைவுகளில் பத்து விரல் ரேகையையும் பதியச் சொல்லும் போது வாய் திறப்பதில்லை என்பது என்ன வகையிலான மேட்டுக்குடி நபும்ஸகத்தனம்?//
சரியாக சொன்னீர்கள். டேட்டா பிரைவசி பற்றி இவ்வளவு எளிதாக யாராலும் விளக்க முடியாது.
LikeLike