மாணவர்கள் கவனத்திற்கு என்று இரு வாரங்களாக பேஸ்புக்கில் எழுதிவந்தேன். பல மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்றார்கள். பல பெற்றோர் நன்றி தெரிவித்தார்கள். அவை அனைத்தையும் ஒன்றாக இவ்விடம் எழுதியுள்ளேன். மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
+2 தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் கவனத்திற்கு:
நல்லது நடந்துள்ளது. நல்ல வேளையாக மதிப்பெண் குறைந்துள்ளது. இனி உங்களைப் பொறியியல் படித்தாலே ஆயிற்றுஎன்று யாரும் பெரும்பாலும் தொல்லைகொடுக்க மாட்டார்கள்(அல்லது)தொல்லைகள் குறைய வாய்ப்புள்ளது.
சரி.மேற்கொண்டு என்ன செய்யலாம்?
கணிதத்தில் விருப்பமிருந்தால் பி.எஸ்.ஸி கணிதம் பயிலுங்கள்.அல்லது புள்ளியியல் (Statistics)பயிலுங்கள்.மிகப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.இவற்றுடன் Big Dataதுறையில் பகுதி நேரமாகச் சில பாடங்களை/கணினி மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.பெரும்பாலும் இலவசமானவை தான்.கட்டணம் இருந்தாலும் வெகு சொற்பமே.அத்துடன் இவைமுழுவது ஆன்லைனில் உள்ளன.பெண்கள் இதற்காகவென்று வெளியில் சென்று பயில வேண்டியதில்லை. தேவைஒரு கணினி+இணையத் தொடர்பு+உங்கள் உழைப்பு.அவ்வளவே.
இத்துறையில் தேர்வானால் Data Scientist, Data Engineerஎன்று பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.வங்கி,உயிரியல்,மருந்தியல்,குற்றப் புலனாய்வு என்று பல துறைகளில் இதனால் பணிகள் கிடைக்கின்றன.சுய தொழில் வாய்ப்புக்களும் பெருகியேஉள்ளன.
ஆக,வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்,சொல்கிறேன்.பின்னூட்டம் இடுங்கள்,பதிலளிக்கிறேன்.
கணிதம் விருப்பமில்லைஎன்றால்?நாளைசொல்கிறேன்.
வளமான எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள். நன்றி.
தம்பி, +2 படித்து முடித்த நண்பரே,
நீங்கள் வானத்து நட்சத்திரங்களின் காதலரா? வானியல், அணு முதலியன உங்களை உசுப்பேற்றுகின்றனவா? ப்ளாக் ஹோல் உங்களைப் பரவசப்படுத்துகிறதா ? ஒவ்வொரு விண்வெளி நிகழ்வும் உங்கள் நினைவுகளில் அன்று முழுவதும் கிடந்து உங்களை ஆட்கொள்கிறதா? ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள்’ என்று படித்தால் ‘நம்மாள் அப்பவே அணுபத்தியெல்லாம் சொல்லியிருக்கான்யா’ என்று மனம் ஒரு நிலையில் இல்லாமல் அணு விஞ்ஞானம் பற்றியே பேசுபவரா நீங்கள்?
‘அண்ட பேரண்டமாய் அகிலாண்ட சோதியாய்’ என்று உலக நாயகியைப் போற்றும் போதெல்லாம் மனம் ஒரே தாவலில் அண்டம், பிரபஞ்சம், பேரண்டம் என்று விரியும் மனதுடையவரா நீங்கள்? ‘சாணிலும் உளன், ஓரணுவைச் சத கூரிட்ட கோணிலும் உளன்’ என்று கம்பன் சொன்னதும் மனம் அணுவின் உள் என்ன இருக்கிறது என்று அலைகிறவரா நீங்கள?
அப்படியென்றால் உங்களுக்கு இயற்பியல் இனிக்கிறது என்று உணர்ந்துகொள்கிறேன்.
முதலில் இயற்பியலில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றுவிடுங்கள். அதற்குப் பின்னர் இயற்பியலில் முதுகலையோ அல்லது வானவியல், விண்வெளியியல் முதலியவற்றில் முதுகலையோ பெற்று, விண்வெளி, வான் மண்டல அறிஞராக, ஆராய்ச்சியாளராக முடியும்.
இதற்கு இந்தியாவில் பல சிறந்த பல்கலைக்கழகங்கள்/ ஆராய்ச்சிக் கூடங்கள் உள்ளன. மிகச் சிறந்தவை என்று கொண்டாடப்படுபவை:
Indian Institute of Science, Bangalore
Raman Research Institute, Bangalore
Saha Institute of Nuclear Physics
IITs
Institute of Mathematical Sciences, Chennai
Indian Institute of Space Science and Technology, Thiruvananthapuram
Tata Institute of Fundamental Research
Bhaba Atomic Research Center
இயற்பியலில் ஆராய்ச்சி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவங்கி, நாம் கண்களால் காண முடியாத அணுக்கள் முதலாக, அண்ட பேரண்டங்கள் முடிவாக அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
இணையத்தில் CERN என்று தேடிப்பாருங்கள். ஐரோப்பாவில் உள்ள இந்த நிறுவனம் பன்னாட்டு இயற்பியல், அணு, கணினி விஞ்ஞானிகளால் உருவாகி, Higgs Boson என்னும் நுண்துகள் பற்றிய உண்மையைக் கண்டறிய உதவிய நிறுவனம். அதைப்போன்ற ஒன்று தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் நிறுவப்பட இருந்த ந்யூட்றினோ ஆய்வு மையம். இயற்பியலின் அடிப்படை அறிவு கிஞ்சித்தும் இல்லாத அரசியல் கழிசடைகளால் இம்மாதிரியான ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் தமிழ் நாட்டில் நிறுவப்படாமல் போய்விட்டது. உங்கள் ஆராய்ச்சிக்கு நம்மூரிலேயே அமையவிருந்த ஒரு அறிவியல் அமைப்பையும் நாம் நழுவ விட்டுவிட்டோம்.
இதற்கான காரணம் அரசியல் வியாபாரிகள் மட்டும் அன்று. உங்களைப் போன்ற மாணவர்களும் இயற்பியல் சார்ந்த போதிய தெளிவு இல்லாமல் அவர்கள் பின்னால் சென்றதும் கூட.
போனது போகட்டும். நீங்கள் மேற்சொன்ன இயற்பியல் மையங்களில் படித்து, ஆராய்ச்சி செய்து வந்தால், ஒருவேளை நாளைய தமிழகம் இம்மாதிரியான இருட்டுத் தலைவர்களிடம் சிக்காமல், அறிவியல் பயின்ற, தெளிந்த சிந்தை உடைய உங்களிடம் வந்து சேரும். நீங்களும் அறிவியலையும், நம் நாட்டையும் முன்னேற்றுவீர்கள்.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’
கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.
வாழ்த்துக்கள்
எல்லாம் சரி சார், நான் வணிகவியல் / சோஷ்யாலஜி படிச்சிருக்கேன். எனக்கென்ன இருக்கு?’ என்று கேட்கும் +2 முடித்த மாணவருக்கு:
உனக்கென்ன தங்கச்சி, உலகமே உன் கையில்.
ரொம்ப பிரகாசமான வாழ்க்கை இருக்கிறது உன் முன்னால்.
C.A., ICWA, ACS வழி பற்றித் தெரிந்திருக்கும் உனக்கு. ஆனால் உன்னிடம் சொல்லப்படாத வழியும் ஒன்று உண்டு. அட்டகாசமான வழி அது.
CLAT – Common Law Admission Test – இந்தியா முழுமைக்குமான 19 மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு. ‘ஐயோ, சட்டமா? வேண்டாம்..’ என்று அலறுவது கேட்கிறது. நான் சொல்வது மத்திய சட்டப் பல்கலைக் கழகங்கள். மாநில அல்ல, மத்திய.
19 மாநிலங்களில் மத்திய அரசு சட்டப் பல்கலைக் கழகங்களை நிறுவியுள்ளது. B Com LLB, BA LLB, BBA LLB என்று மூன்று பிரிவுகளில் ஐந்தாண்டுப் படிப்பு. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் மாணவருடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு. பெங்களூரில் உள்ள NLSIU, ஹைதராபாத்தில் உள்ள NALSAR, கொல்கொத்தாவின் NUJS முதலானவை உலகத் தரம் வாய்ந்தவை.
1986ல் துவங்கப்பெற்ற NLSIUவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு பிரமிப்படைந்த சந்திர பாபு நாயுடு, தனது மாநிலத்திலும் அப்படி ஒன்று வேண்டும் என்று அன்றைய மத்திய அரசைக் கேட்டு பெற்றுக் கொண்டது தான் NALSAR. தற்போது தெலங்கானா உதயமானதால், விசாகப்பட்டினத்தில் இன்னொறைத் துவக்கியுள்ளார் (மத்திய அரசை நெருக்கி). தமிழ் நாட்டில் திருச்சியில் ஒன்று உள்ளதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும்.
படித்து முடிக்கும் முன்னே வேலை, அல்லது பின்னர் மேற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்று உலக சுற்றும் வேலைகள் ஏராளம். பாரதத்தில் தான் பணியாற்றுவேன் என்றாலும் மிகச் சிறந்த சட்ட நிறுவனங்களில் வேலை. கை நிறைய சம்பளம், அந்தஸ்து என்று நல்ல வாழ்க்கை.
வழக்காடுதலில் விருப்பமெனில் (Litigation) அதற்கும் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. ஊடகத் துறையிலும் சட்டம் தொடர்பான கட்டுரைகள், பார்வைகள் என்று செயலாற்றவும் வாய்ப்புள்ளது. அரசுசாரா நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் வேலைகள், நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்றால் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி என்று வாய்ப்புக்கள் ஏராளம்.
இவை எல்லாவற்றையும் விட, IAS முதலான தேர்வுகளில் சட்டத்தைப் பாடமாகக் கொண்டு எழுதினால் வெற்றி பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.
பாரதத்தின் பொருளியல் வலுவடைவதால் உலக நாடுகளின் நிறுவங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன. ஆகவே இவற்றிலும் சட்ட ஆலோசகர் முதலான வேலை வாய்ப்புக்கள் என்று எதிர்காலம் ஒளிப்பிரவாகம். இதற்காகவென்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள GNLUவில் சீன, ஜெர்மன் மொழிகளைக் கூடக் கற்றுத் தருகிறார்கள்.
CLAT மதிப்பெண்ணைக் கொண்டு, பல தனியார் சட்டப் பல்கலைக் கழகங்களும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். CLAT-PG என்று ஒன்று உள்ளது. இது சட்டத்தில் மேற்படிப்புக்கானது. இதில் வாங்கும் மதிப்பெண்ணைக் கொண்டு BHEL, ONGC, OIL முதலிய மத்திய அரச நிறுவனங்கள் தங்களுக்கான சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
2019ல் இருந்து CLAT தேர்வை அனைத்து இந்தியத் தேர்வுகளுக்கான ஆணையம் நடத்தவிருக்கிறது. இணையத்தில் CLAT என்று தேடிப் பாருங்கள். உங்களுக்கான புதிய வாழ்வின் கதவுகள் திறக்கும்.
NLU = IIT for Law. முயற்சி திருவினையாக்கும். மறவாதே.
வாழ்த்துக்கள்.
+ 2 / 10வது முடித்த நண்பர்களே, இன்றைய பெரிய தேவைகள் என்னென்ன தெரியுமா?
எலக்ட்ரீஷியன்களும், பிளம்பர்களும்.
இரண்டும் தெரிந்திருந்தால் உங்களைப் பிடிக்க ஆளில்லை. எப்போதுமே வேலைக்கான அழைப்புமணி ஒலித்துக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் Vocational Stream என்னும் பிரிவில் இம்மாதிரியான படிப்புக்களைச் சொல்லித் தருகிறார்கள்.
என் நண்பன் சிங்கப்பூரில் இருந்து கொண்டே சென்னையில் ஒரு Maintenance Company நடத்தி வந்தான். NRIக்களின் சென்னை வீடுகளைப் பராமரித்தல், மின் வேலைகள் செய்து கொடுத்தல், பிளம்பிங் வேலைகள் செய்தல் என்று ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தான். இதற்காக கிராமப்புறங்களில் இருந்து ITI படித்த பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைப் பணியில் அமர்த்தினான். ஒன்றரை ஆண்டில் அவனது நிறுவனம் போலவே பல நிறுவனங்கள் தோன்றத் துவங்கின. துவக்கியது யாரென்கிறீர்கள்? இவனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பிள்ளைகளே.
நான்கு வருடம் பொறியியல் படித்து வேலை கிடைக்கவில்லை என்று கால் செண்டர் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர்கள் இருக்கும் ஊரில், அடிப்படை மின் வேலைகள், பிளம்பிங் தெரிந்த பிள்ளைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
தற்போது சூரிய மின்சக்தி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், சூரிய மின் தகடுகள் நிறுவ, பராமரிக்க என்று மிதமான வேலை வாய்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் வீடுகள் / பணிமனைகளில் இம்மாதிரியான மின் வேலைகள் / பராமரிப்புப் பணிகளைத் தமிழகத்தைச் சேர்ந்த உழைப்பாளர்கள் செய்துவருகிறார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் டிப்ளமா / ஐடிஐ படிப்புக்களை முடித்தவர்களே என்று தெரிகிறது.
+2 படித்திருந்தாலும் பரவாயில்லை என்று டிப்ளமா முதலிய வகுப்புகளில் சேர்ந்து கையில் இம்மாதிரியான திறமைகளை வளர்த்துக் கொண்டால் வேலைக்குப் பஞ்சமில்லை. வேலை தொடர்பான கவர்ச்சித் தன்மை குறைவு, ஆனால் வேலை உறுதி.
கொஞ்சம் மாற்றிச் சிந்தித்தால் பல வழிகள் புலப்படும்.
வாழ்த்துக்கள்.
மாணவர்களே, +1 படிக்கும் ஒரு மாணவியின் தாயாரின் கேள்வி.
‘என் மகள் 11ம் வகுப்பில் ISC போர்டில் கணிதம், புள்ளியியல் (Statistics), வேதியியல், இயற்பியல் எடுத்துப் படித்து வருகிறாள். புள்ளியியல் மிகவும் கடினமாக உள்ளது. இதனைப் படித்தே ஆக வேண்டுமா? அவளுக்கு உயிரியலில் ஈடுபாடு இல்லை என்பதால் புள்ளியியல். என்ன செய்வது?’
புள்ளியியலை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே என்று பெருமையாக உள்ளது. இப்படி ஒரு பாடப் பிரிவை அளிக்கும் ISC போர்டுக்கு வாழ்த்துக்கள். CBSEயைக் காட்டிலும் நல்லது என்று படிக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள். பாடங்களின் கடுமையும் கொஞ்சம் அதிகமே. பாட நூல்களைப் பார்த்ததில் தெரிந்தது இது.
புள்ளியியல் இன்றைய பல துறைகளுக்கு அடிப்படையானது. பொருளியல் படிப்பு முதல், உயிரியல் ஆராய்ச்சி வரை புள்ளியியல் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. Econometrics என்னும் பாடப்பிரிவு பொருளாதாரம் சார்ந்த படிப்புக்களில் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அத்துடன் Big Data எனப்படும் பிரிவில் புள்ளியியலின் தேவை மிக மிக அதிகம். இத்துறையில் Machine Learning, Deep Learning, Artificial Intelligence என்று பல புதிய பிரிவுகளிலும் புள்ளியியல் பெரும் பங்கு வகிக்கிறது.
புள்ளியியலில் வல்லுனராக இருப்பின் குற்றப் புலனாய்வு, வங்கித் துறை, வான சாத்திரவியல், தகவல் தொழில் நுட்பம், வானிலை முன்னறிவிப்பு, இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு, மருந்தியல், கள்ளப் பணப் பரிவர்த்தனையைத் தடுத்தல் மற்றும் ஆராய்ச்சி முதலியவை உள்ளடக்கிய பல நூறு துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேலை வாய்ப்புக்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
புள்ளியியலில் மிகச் சிறந்த கல்விக் கழகம் கொல்கொத்தாவில் உள்ள ISI – Indian Statistical Institue – இந்தியப் புள்ளியியல் கழகம். இதற்கான நுழைவுத்தேர்வே மிகவும் கடுமையான ஒன்று. B.Stat., M.Stat., என்பதான படிப்புகளும், அதற்கும் மேல் முனைவர் பட்டப் படிப்புக்களும் உண்டு. இது தவிர, பல உலகப் பல்கலைக் கழகங்கள் Economics + Statistics சார்ந்து பட்டங்களை வழங்குகின்றன.
ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகள், உலக மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள், போலீஸ் துறை, பருவநிலை ஆய்வுக் கழகம் முதலான பலவற்றிலும் புள்ளியியல் துறையினர் அதிக அளவில் தேவைப் படுகின்றனர். வளமான எதிர்காலம் உண்டு. நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.
யூடியூபில் Statistics Lectures / Statistics IIT / NPTEL Statistics என்று தேடிப் பாருங்கள். பல வகுப்புக்கள் கிடைக்கின்றன.
எனவே, உங்கள் மகள் புள்ளியியலுடன் சேர்த்துக் கணிதம், இயற்பியல், வேதியியல் முதலியன படிக்கிறாள் என்பது நல்ல செய்தியே.
உங்கள் பெண்ணிற்கு வாழ்த்துக்கள்
மாணவர்களே, 2 நாட்களுக்கு முன் நடந்தது இது. மொழிப் பாடங்கள் பற்றியது.
‘எப்டி சார் என் பொண்ண தமிழ் படிக்கச் சொன்னீங்க? எனக்கு ஆறவே இல்லை’ என்றார் திருமதி.சுமதி, தொலைபேசியில். இவர் என் நண்பரின் மனைவி. இந்தியாவில் இருக்கிறார்.
‘அதுலதனே அதிக மார்க் வாங்கியிருக்கா? அவளுக்கும் அதுல தானே இன்றஸ்ட்னு சொன்னா?’ என்றேன்.
‘சரிதான். இண்ட்றஸ்ட் இருக்கட்டும். படிக்கறாள்னே வெச்சுப்போம். எங்க போய் படிக்கறது? படிச்சப்புறம் என்ன பண்றது?’
‘தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், தியாகராசர் தமிழ்க் கல்லூரி.. இப்டி சிலது தெரியும். மத்ததெல்லாம் எல்லா பல்கலைக் கழகங்கள்லயும் தமிழ்ப் பிரிவு இருக்குமே, அங்க படிக்கட்டும்,’ என்றேன்.
‘தெரிஞ்சு தான் சொல்றீங்களா? தமிழ்த் துறைல படிக்கற சூழல் இருக்கா? எந்த மாதிரியான மாணவர்கள் அங்க படிக்கறாங்கன்னு தெரியுமா? நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?’ என்று நகைப்பாய்க் கேட்டார் சுமதி.
அவர் மேலும் சொன்னது: ‘வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காததால் தமிழ் படிக்கிறார்கள். எனவே அங்கு தரம் தாழ்ந்தே இருக்கும். மாணவர்களும் படிப்பதற்கு வருவதில்லை…’
இது எந்த அளவு நிதர்சனம் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்படி ஒரு நிலை இருக்குமானால் அது தமிழுக்குத் தலைக்குனிவே.
‘போகட்டும் வேலை வாய்ப்பு…’ மேலும் தொடர்ந்தார் சுமதி.
‘நல்ல தமிழ் ஆசிரியர்களுக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. “நல்ல” என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். ஊடகத் துறையில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. சிங்கப்பூரில் முனைவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கள் பலர் பள்ளிகளில் வகுப்பெடுக்கிறார்கள். தரம் அதிகரிக்க வேண்டும் என்னும் முனைப்பில் அப்படி ஒரு செயல்பாடு உள்ளது. நாளை தமிழகத்திலும் வரலாம்.
‘கல்வெட்டுக்களைப் படிபதற்கான பயிற்சிகளும் உள்ளன. இதனால் தொல்பொருள் துறையில் ஆய்வு செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
‘உங்கள் மகளுக்கு மொழியில் ஆர்வம் உள்ளது என்கிறாள். ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண்ணே பெற்றுள்ளாள். ஆக இயற்கையிலெயே மொழி சார்ந்த திறன் இருக்கலாம். ஒரே ஒரு வெளி நாட்டு மொழி ( சீனம், ஜப்பானிய மொழி, ஜெர்மன்) என்று கற்றால், மொழிபெயர்ப்பாளராக ஆவதற்கு அவளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய பாரதப் பொருளியல் வளர்ச்சியில் இந்நாட்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.
‘நான் ஜப்பானிய நிறுவனத்தில் வேலையில் இருந்த காலத்தில், ஒரு பக்கம் மொழிபெயர்ப்பதற்கு இவ்வளவு என்று பணம் உண்டு. இப்போது இன்னமும் அதிகரித்திருக்கலாம்.
‘ஒரு மொழியில் நல்ல பயிற்சி இருப்பின், பிறிதொரு மொழியை எளிதில் கற்பது எளிது. தாம்பரத்தில் கூட ஜப்பானிய மொழி கற்க வாய்ப்புக்கள் கூடிவிட்டன.
‘CIEFL – Central Institute of English and Foreign Languages’ என்னும் நிறுவனம் ஹைதராபாத்தில் பல காலமாகச் செயல்படுகிறது. மற்ற நாட்டு மொழிகளைக் கற்கவும் இங்கு வாய்ப்புக்கள் உள்ளன. பூனாவிலும் இப்படியான வாய்ப்புக்கள் அதிகமே. தில்லிப் பல்கலைக் கழகமும், ஜவகர்லால் நேரு பலலைக் கழகமும் (JNU) இவ்வாறான வாய்ப்புக்களை அளிக்கின்றன.
‘‘வெளி நாட்டுப் பல்கலைகளில் கிழக்கத்திய / இந்திய மரபுகள் துறை என்று உள்ளது. Oriental Studies, Indological Studies, Comparative Religion என்றெல்லாம் பிரிவுகள் உள்ளன. இவற்றில் பணியாற்றவும், ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்புக்கள் மேற்படிப்புக்குப் பின் கிடைக்கலாம். உதாரணமாக – ஹார்வார்டில் உள்ள தத்துவத் துறையின் தலைவைர் (அமெரிக்கர்), தமிழ், சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் என்று அனைத்திலும் நிபுணராக இருக்கிறார். ஒருமுறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருடன் உரையாடும் போது அவருக்கு ஆழ்வார் பாசுரங்களில் உள்ள பாண்டித்யம் கண்டு வியந்தேன். கனடா, ஜெர்மனி முதலான நாடுகளிலும் இப்படியான வாய்ப்புக்கள் உள்ளன.
‘ஆக, மொழி பயில்வது நல்லதொரு வழியே. என்றுமே தரமான ஆசிரியர்களுக்கு என்று ஆதரவு பெருகியே இருக்கிறது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
‘இன்னொரு வழி, வரலாறு படிப்பது. இதனால் இந்திய ஆட்சிப் பணி முதலான தேர்வுகளைக் கொஞ்சம் எளிதாக எழுத வழியுண்டு. தொல்லியல் துறையும் கைகொடுக்கும்,’ என்றேன்.
‘நீங்க சொல்றது கேக்க நல்லா இருக்கு. யோசிக்கறேன்,’ என்றார் சுமதி.
மாணவர்களே, மொழி, மொழியியல் முதலான துறைகள் தனித்தன்மையுடன் கூடிய நல்ல வாய்ப்புக்களை அளிக்கவல்லன. மொழி பயில்வதில் ஏளனமெல்லாம் தேவை இல்லை. தற்போது நல்ல மொழியாளர்களும், நல்ல எண்ணங்கள் கொண்ட ஊடகவியலாளர்களும் மிக அதிக அளவில் தேவைப் படுகின்றனர். தமிழுடன் சம்ஸ்க்ருதமும் பயில முடிந்தால் இருமொழி வல்லுனர்களாக வழியுள்ளது. மொழிகள் என்றும் தனித்து இயங்கியதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று சொற்களையும், அறிவுப்புலத்தையும் கடன் வாங்கிக் கொண்டே செயல்பட்டு வந்துள்ளன.
தமிழ் பயில வாய்ப்பிருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், முனைவர் பட்டம் வரை செல்லுங்கள். இடையில் நிறுத்த வேண்டாம்.
உங்கள் மொழிப்பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
—————————————–
மாணவர்களே, Steven Pinker என்பவர் தற்காலத்தின் மிகச்சிறந்த அறிவாளி என்று அறியப்படுபவர்.
ஹார்வார்டு பல்கலையின் சைக்காலஜி பேராசிரியர் என்று சொன்னால் எளிமையாகப் புரியும். ஆனால் இவரது முக்கியமான செயல்பாடுகள் Cognitive Science, Evolutionary Psychology, Psycho Linguistics முதலிய துறைகளிலானவை. நம்மளவில் இம்மாதிரியான சொற்களையே கேட்டிருக்க மாட்டோம்.
மனித மனம், மூளை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் சொற்கள் பற்றிய அறிவும், பிள்ளைகளின் மொழி அறிவு வளர்ச்சி / வளர்ச்சியின்மை சார்ந்த மூளைச் செயல்பாடுகள் என்பதான நுண் அறிவியல் சார்ந்து செயலாற்றிவரும் இப்பேராசிரியர் பல நூல்கள் எழுதியுள்ளார். பெரும்பாலும் நரம்பியல், மூளைச் செயல்பாடுகள், மனித மனம், மொழிகள், எண்ண ஓட்டங்கள், மனித உணர்வு நிலைகள் சார்ந்து இவரது நூல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் 2-3 சாஹித்ய அகாதெமிப் பரிசு பெறும் அளவுக்கானது.
இவரது சில நூல்கள்:
The Language Instinct
How the Mind Works
Words and Rules
The Blank Slate
The Better Angels of Our Nature
Enlightenment Now
இவர் எனக்கு The Sense of Style என்னும் நூலின் மூலம் அறிமுகமானார். ஆங்கில எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. சொற்களின் பின்னால் உள்ள உளவியல் குறித்தும், தெளிவாக எழுதுவது குறித்தும் அமைந்துள்ள இந்த நூலைப் படித்து வியந்தேன். இவரது The Better Angels of Our Nature என்னும் நூலைப் பாதியே படிக்க முடிந்தது.
தீவிரமான ஆங்கில நடை, அறிவியல் ( நரம்பியல் /உளவியல்) சார்ந்த கடுமையான ஆராய்ச்சி என்று இவரது நூல்கள் ஒவ்வொருமுறை வெளிவரும் போதும் அறிவார்ந்த வெளிகளில் பெரிய சர்ச்சையையும், தாக்கத்தையும் ஏற்படுத்துபவை.
இவரது இளங்கலைப் படிப்பு ‘சைக்காலஜி’ (உளவியல்). ஆனால், இவர் தனது ஆராய்ச்சி, மேற்படிப்பு இவற்றின் மூலம் தலையாய விஞ்ஞானியாகவே கருதப்படுகிறார். இன்றும் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் ஸ்டீவன், தனது ஆராய்ச்சியின் மூலம் பல புதிய தரவுகளை அளித்துக் கொண்டே இருக்கிறார்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ், நோம் சோம்ஸ்கி முதலான அறிவியல் மற்றும் சமூகவியல் சான்றோருடன் ஒப்பிட்டுப் பேசும் அளவில் இன்றும் திகழும் பேரா.ஸ்டீவன் பிங்கர் சைக்க்காலஜி படிக்கும் மாணவர்களுக்கும் மருத்தும், மொழியியல் துறையார்க்கும் ஒரு மாபெரும் வழிகாட்டி.
சைக்காலஜி படித்தால் இவ்வளவு தூரம் செல்ல முடியும். தேவை ஆர்வம், உழைப்பு, திறந்த மனம். அவ்வளவே.
உங்களது தேர்வும் இத்துறையேயானால், நீங்களும் இம்மாதிரி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
மாணவர்களே, நீங்கள் போராட வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால், இந்த விஷயம் குறித்து நீங்கள் போராட வேண்டும் என்பேன். குறைந்தது கேள்வியாவது கேட்க வேண்டும் என்பேன். உங்கள் ஆசிரியர்களை, பள்ளித் தலைமை ஆசிரியரை, பெற்றோரை, உங்கள் கல்வி அமைச்சரை, எம்.எல்.ஏ.யைக் கேளுங்கள்.
ஏன், உங்கள் முதல் அமைச்சரையும் கேட்கலாம். மின் அஞ்சல் அனுப்புங்கள்.
இந்த விபரத்தைப் பாருங்கள். 2017ல் IIT-JEE தேர்வு பற்றியது.
2017 IIT-JEE Stats for TN Students:
Appeared for JEE(Mains) = 49,695
Qualified thru JEE(Advanced) = 1,184
Admission Offered (CBSE stream) = 221
Admission Offered (State Board) = 19
உங்கள் கல்வி உங்களை JEE தேர்வில் தேறச் செய்வதில்லையே ஏன்? பயிற்சி வகுப்புகள் இருந்தும் கூட உங்களில் வெறும் 19 பேர் மட்டுமே தேர்வாக முடிந்துள்ளது. நீங்கள் CBSEல் படித்திருந்தால், அல்லது உங்கள் தமிழக அரசுப் பாடத் திட்டம் குறைந்தது CBSE அளவுக்காவது இருந்திருந்தால் உங்களில் பலர் IITக்களில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை மிகக் குறைந்த செலவில் பெற்றிருக்க முடியும். நிறைய கல்வி ஊக்கத் தொகைகளும் உள்ளன.
தவறு உங்களிடம் இல்லை. உங்கள் பாடத்திட்டத்தின் தரம் உயர வேண்டும். மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறை மாற வேண்டும். இதற்காக நீங்கள் முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் குறைந்த பட்சம் மின் அஞ்சலாவது அனுப்புங்கள்.
உங்களுக்கான கல்வித்தரத்தை நீங்கள் கேட்டுப் பெறுங்கள். வாழ்த்துக்கள்
மாணவர்களே, Data Journalism பற்றிச் சொல்கிறேன்.
செய்தியாளர்கள் வளவளவென்று, நிறைய சொற்கள் கொண்ட செய்திக் கட்டுரைகளை எழுதினால் தற்காலத்தில் படிப்பதற்கும் யாருமில்லை. யாருக்கும் நேரமில்லை. அது எவ்வளவு அதிகமான தகவல்கள் கொண்டிருந்தாலும் அப்படியே.
எனவே, எழுதுவதைச் சுருக்கமாகவும், கண்ணைக் கவரும் விதத்திலும் செய்தால் மக்கள் கவனத்தைப் பெறலாம். இதற்கு Info-graphics என்னும் எண்கள்-படங்கள் உத்தி கையாளப்படுகிறது. இது Data வழியாக செய்தியைத் தருதல் என்னும் வழியில் உள்ள உத்தி.
Data Journalism எவ்வாறு செயல்படுகிறது?
உதாரணமாக, மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் உயர வேண்டும் என்று அரசிடம் கோரிக்க வைக்க வேண்டும் என்றால், அதற்கான சரியான தரவுகளை அவர்களிடம் அளிக்க வேண்டும். ஆக, மாநிலப் பாடத்திட்டம் முன்னேற வேண்டும் என்று காட்ட என்ன செய்வது?
State Board vs CBSE
இரு பாடத் திட்டங்களுக்கும் பொதுவான ஒரு தளம் / உரைகல் வேண்டும். இரு பாடத் திட்டத்தில் இருந்தும் வெளியேறும் மாணவர்களில் எத்துணை பேர் அந்த உரைகல்லில் மிளிர்கிறார்கள் என்று பார்ப்பதன் மூலம் இரு திட்டங்களுக்குமான தரத்தை நிர்ணயம் செய்யலாம்.
இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரைகல் : IIT-JEE தேர்வு.
அத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் யாவர்? எந்தப் பாடத் திட்டம் அதிக வெற்றியாளர்களை அளிக்கிறது? என்று ஒரு ஆய்வு செய்து, கடந்த சில ஆண்டுகளுக்கான எண்ணிக்கையைப் பெற்று, அதனை ஒரு Info-graphicsல் கொணர்ந்தால், உங்கள் Data Journalism சார்ந்த கட்டுரை தயார்.
உங்களை யாராலும் மறுக்கவியலாது. ஏனெனில் நீங்கள் தரவுகளின் அடிப்படையிலேயே கட்டுரையை எழுதியுள்ளீர்கள். அரசும் தரவுகளின் அடிப்படையிலானதை உதாசீனப்படுத்த வழியில்லை. மாநிலப் பாடத் திட்டத்தை மேம்மடுத்த அரசு முயலும்.
IIT-JEE என்றில்லை. SAT என்னும் உலக அளவிலான தேர்வையும் உரைகல்லாகக் கொள்ளலாம். NEET, CUCET என்று எதையும் எடுத்துக் கொள்ளலாம்.
அதைப் போலவே, ஆசிரியர்கள் எத்தனை பேர் SET தேர்வில் வெற்றி பெற்றூள்ளார்கள், அவர்களில் எத்தனை பேர் SLET/NET/JRF தேர்வில் வென்றுள்ளார்கள் என்றும் ஆராயலாம். புதிய பார்வைகளை அளிக்கவல்லவை இம்மாதிரியான அணுகுமுறைகள்.
இம்மாதிரி ஆராய்வது அறிவியல் பூர்வமானது. ஆராய்ச்சியின் விளைவை நல்ல Graphics மூலம் காட்சிப் படுத்தி (Visualization/Presentation), அதன் அடிப்படையில் கட்டுரை எழுதினால் படிப்போரின் கவனத்தையும் கருத்தையும் கவர்வனவாகவும், உடனடியாக அதிகாரிகளைச் செயலாற்றத் தூண்டுவனவாகவும் அமையும்.
இதற்கான பல இலவசக் கருவிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை : Google Big Table, Google Docs, Google Sheets, Tableau, Qlik View முதலியன.
சமீபத்தில் ‘மெர்சல்’ என்னும் திரைப் படத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரியையும் சிங்கப்பூர் பற்றியும் நடிகர் ஜோசப் விஜய் மொண்ணைத்தனமாகப் பேசினார். அதை அடுத்து உலக வங்கியின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளையும் ஒப்பிட்டு நான் ஒரு Data Journalism சார்ந்த கட்டுரை எழுதியிருந்தேன். ‘Data Journalism Mersal’ என்று இணையத்தில் தேடிப்பாருங்கள். உதவும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
மாணவர்களே, இப்படி ஒரு கேள்வி:
‘என் மகன் +2வில் பொருளாதாரம், வணிகவியல், சைக்காலஜி, கணக்கியல் படித்துள்ளான். இதழியல் (Journalism) பயில விரும்புகிறான். எங்கு, எப்படிப் பயிலலாம்?’ -திருமதி.வித்யா ரகுராம்.
உங்கள் மகன் மிகத் திறமையாகவே பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதழியலில் ஜொலிக்க வாய்ப்புக்கள் அதிகம்.
சைக்காலஜி, எகனாமிக்ஸ் – இரு பாடங்களும் புதிய திறப்புகளை அளிக்கின்றன. எகனாமிக்ஸில் பிஹேவியரல் எகனாமிக்ஸ்(Behavioural Economics) என்னும் துறை ஆழ்ந்த அறிவு சார்ந்த பிரிவு. இதில் கரை கண்டவர்கள் பெரும்பாலும் பெரும் வங்கிகளிலும், பன்னட்டு நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சிப் பிரிவுகளிலும் பணியில் இருப்பர். நிற்க.
உங்கள் மகன் படித்துள்ள பாடங்களின் அடிப்படையில், அவர் முதலில் பொருளியல் / சைக்காலஜி சார்ந்த துறைகளில் இளங்கலை(Bachelor)ப் பட்டம் பெற்று, பின்னர் இதழியலில் முதுகலையில் நுழையலாம். பொருளியல் சார்ந்த படிப்பு இருப்பதால், பொருளாதார இதழாளராகப் பரிமளிக்க வாய்ப்புள்ளது.
இதழியலில் முதுகலைப் பட்டத்தை அனேகமாக அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களும் அளிக்கின்றன. குறிப்பாக
IIMC – Indian Institute of Mass Communication
JNU – Center for Media Studies
இவை தவிர, பல பல்கலைகள் P.G.Diploma அளிக்கின்றன.
சென்னையில் ACJ – Asian College of Journalism என்பது ஹிந்து நாளிதழ் குழுமத் தொடர்புடன் நடந்துவருகிறது. இங்கும் முதுகலைப் பட்டம் பெற வாய்ப்புள்ளது.
ஆனால், உலக அளவில் மிக மதிப்பு வாய்ந்த இதழியல் படிப்பு வேண்டுமென்றால் Columbia School of Journalism தான். மிகவும் பெருமை வாய்ந்த படிப்பு.
இளங்கலையிலேயே இதழியல் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தத் துறையிலும் தேர்ச்சி இல்லாமல் செய்தித் துறை மட்டுமே படிப்பது எனக்குச் சரியெனப் படவில்லை. தற்போது லயோலா கல்லூரியில் Mass Communication என்னும் பிரிவு உள்ளது. அங்கு படித்து வெளிவரும் மாணவர்களின் பணி என்னை இப்படி எழுத வைக்கிறது.
இவை தவிரவும் பல தனியார் பல்கலைகளில் இதழியல் உள்ளது. இவை பெரும்பாலும் பங்களூர், புனே என்று அமைந்துள்ளன.
என் மகனுக்கு இந்தப் படிப்பை நான் அளிக்க விரும்பினால் இப்படிச் செய்வேன்:
வழிமுறை:
1. டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் இளங்கலை (பொருளாதாரம், வணிகவியல், ஆங்கிலம்)
2. தில்லி ஜெ.என்.யூ.வில் இதழியல்
3. கொலம்பியாவில் இதழியல் மேற்படிப்பு.
உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.
பேஸ்புக்கில் பின் தொடர :
https://www.facebook.com/amaruvidevanathan
நல்ல கட்டுரை நன்றி
– கண்ணன் கோவை
LikeLike