அஸ்தி கரைத்தல் என்பது நமது நீத்தார் கடன்களில் தலையாய ஒன்று. உலக வாழ்வை நீத்தவரது ஸ்தூல சரீர எச்சங்கள் இயற்கையின் கூர்களோடு ஒன்றி இரண்டறக் கலப்பது என்பதிலும், அஸ்தி ( மீதம் இருப்பது ) என்பது ( ஜடப் பொருள் ), இயற்கையில் உள்ள ஜடப்பொருட்களுடன் கலப்பது என்பதிலும் இருந்து எழுந்து வரும் கருத்தாக்கம்.
பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியும் அப்படியானதே. முன்னர் நேரு, காந்தி, இந்திரா காந்தி முதலானவர்களின் அஸ்தி தேசத்தின் பல இடங்களில் தேசத்தின் நீர் / மண் இவற்றுடன் ஒன்றாக்கப்பட்டது.
காந்திஜியின் அஸ்தி சிங்கப்பூர் வரை எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டது. சீனப் பெரும்பான்மையான சிங்கப்பூரில் ஒரு மஹாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டதை எந்த மதத்தினரும் / நாகரீகத்தினரும் எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டில் ஒரு மஹானின் அஸ்தி கரைந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதற்காக புல்லர்டன் ஹோட்டல் அருகில் உள்ள க்ளிப்போர்டு பியர் பகுதியில் நினைவகமும் ஏற்படுத்தியுள்ளனர்.
கிழக்கத்திய சம்பிரதாயங்கள் இந்திய சீன ஜப்பானிய தேசங்களை உள்ளடக்கியவை. பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் ஆத்மா குறித்த நம்பிக்கைகள், பல உருக்களில் உள்ள இறை ஒருமை, தத்துவ வளர்ச்சி மற்றும் கட்டமைத்தல் முதலியவற்றில் ஒன்றுபட்டே உள்ளன.