‘1968ல பாலாலயம் பண்ணின கோவில் இன்னி வரைக்கும் முடியல. பெருமாளும் காணல,’ பாலாஜி மூச்சிரைக்கப் பேசினார்.
‘என்ன சொல்றீங்க? 1968? பாலாலயம்? இன்னுமா கோவில் வேலை முடியல?’ இது நான்.
‘ஆமாம். ராஜம் ஐயங்கார், எங்க அப்பாவோட தாத்தா பாலாலயம் பண்ணி பெருமாளை எடுத்து வெளில வெச்சார். இன்னிக்கும் பெருமாள் அங்கயே இருக்கார்.’ புதிராக இருந்தது.
‘கோவில் பழசு. 1000 வருஷம் பழசு. இராமானுஜர் கட்டினது’ சுவாரஸ்யம் அதிகரித்தது. பாலாஜி சக ஊழியர்.
‘என்னது உடையவரா? எப்ப இது?’ ஆச்சரியம் தாளவில்லை.
‘1968. ராஜம் ஐயங்கார் கோபால கிருஷ்ணன் கோவில்ல புனருத்தாரணம் பண்றதுக்கு ஆரம்பிச்சார். HR&CE அப்ரூவல் வாங்கறதுக்கு மனு குடுத்தார். அவா Archeological Survey of India கிட்ட NOC வாங்கிண்டு வாங்கோன்னு அனுப்பிட்டா. இன்னும் தொங்கிண்டிருக்கு’
‘அம்பது வருஷமாவா? சரி. எதுக்கு ASI?’
‘கோவிலுக்கு அடியில புதையல் இருக்குன்னு கிளப்பி விட்டுட்டான்கள். அற நிலையத் துறை பயந்துட்டான். ASIகிட்ட போகச்சொல்லிட்டான்.’
‘அப்புறம் என்ன ஆச்சு?’
‘நின்னு போச்சு. பாலாலயம் பண்ணின மூலவர் கோபால கிருஷ்ணன் வெளில சின்ன மண்டபத்துல இருக்கார். கூடவே ராமானுஜர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார் எல்லா மூலவர் மூர்த்திகளும் அங்கேயே இருக்கா.’
‘உற்சவர்?’
‘உற்சவர் என்ன ஆனார்னு தெரியல்ல. எங்க பாட்டி உற்சவரப் பார்த்திருக்கா. இப்ப அவர் எங்க இருக்கார்னு தெரியல..’
இடி மேல் இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்தேன்.
‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது பகவத் இராமானுசரது கட்டளைகளில் ஒன்று. குடிசையில் வாழ்வது சுகமில்லை என்பதாலோ என்னவோ பலர் திவ்யதேசத்தில் வசிப்பதில்லை. அதனால் கோவிலும் ஊரும் ஆழும் பாழுமாய் ஆகிப்போனது. பல திவ்யதேசங்களில் நித்யப்படி தளிகைக்கே வசதியும் இல்லை, ஆளும் இல்லை என்கிற நிலை.
ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஒரு புதிய விளக்கேற்றி வைத்த இராமானுசர் திருவரங்கத்தின் பெரிய கோவிலில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, உற்சவங்கள் சரிவர நடைபெற வழிவகுத்தார். அவை மற்ற திவ்யதேசங்களிலும் நடைபெற வேண்டி 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து, பல திவ்யதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த ஊர்களில் பணிகள் சரிவர நடைபெற்று வந்தன. தன் காலத்திற்குப் பிறகும் உற்சவாதிகள் சரிவர நடைபெற வேண்டி ‘கோவிலொழுகு’ நூலில் பதிந்தார் என்று தெரிகிறது.
ஸ்ரீரங்கத்தில் கோரதம் அருகில் சிறிய அளவில் கோசாலை வைத்திருந்தார் இராமானுசர். பெருமாளுக்குப் பெரிய அளவில் பால், தயிர், அமுது தேவைகள் இருப்பதால் பெரிய கோசாலை அமைக்க வேண்டி ஸ்ரீரங்கத்துக்கு அருகில் காடுகள் அதிகம் இருந்த சோழங்கநல்லூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு கோசாலை அமைத்துள்ளார். அடிக்கடி அங்கு சென்ற உடையவர் அவ்விடத்தில் சிறிய அளவில் வேணுகோபாலன் கோவிலும், கோசாலையும் அமைத்தார். அதைப்பற்றித் தான் பாலாஜி சொல்லிக்கொண்டிருந்தார்.
‘இராமானுஜர் கட்டின கோவில்னு ஆதாரம் இருக்கா?’
‘கோவிலொழுகுல இருக்கு’ என்ற பாலாஜியின் கண்களில் தீப்பொறி.
‘1968க்கு அப்புறம் என்ன ஆச்சு? கவர்மெண்ட்ல கேட்டீங்களா?’ நான்.
‘2014ல எங்க பெரியப்ப இதை எடுத்துண்டு போனார். அறநிலையத் துறை திரும்பவும் ASIகிட்ட கை காட்டினான். அவனும் வந்து பிரிலிமினரி சர்வே ஒண்ணு பண்ணிட்டுப் போனான். அப்புறம் எங்க அப்பா இதுக்குப் பின்னாடி போனார். ஒண்ணும் புண்ணியமில்ல. ஒரு பதிலும் இல்ல.’
பாலாஜியின் தந்தையார் சமீபத்தில் வைகுந்தம் ஏகினார்.
‘சரி, இதுல ASIக்கு கேஸ் இருக்கா? எதுக்கு அவா வரணும்?’
‘இராமானுஜர் இங்க இன்னொரு ரங்கனாதரை பிரதிஷ்டை பண்ணினார்னு இருக்கு. அவருக்கு கோவில் இருந்திருக்கலாம். அதால கோபால கிருஷ்ணன் கோவிலுக்குப் பக்கத்துல இல்லை அடியில ரங்கனாதர் புதைஞ்சு போயிருப்பார்னு ஒரு பேச்சு இருக்கு. அதால ஆர்க்கியாலஜி வராங்க.’
‘இதுல உண்மை இருக்கா?’
‘இருக்கு. கோவில் ஒழுகுல வரது.’
‘ஸ்ரீரங்கம் மாதிரியே இன்னொரு பெரியபெருமாள் சோழங்கநல்லூர்ல இருந்தார்ங்கறீங்களா?’
‘நான் சொல்லலை. கோவிலொழுகு சொல்றது.’ ஆச்சரியம் மேல் ஆச்சரியம். வாய் பிளந்தபடி அமர்ந்திருந்தேன்.
‘இப்ப அந்தக் கோவில் இருந்த சுவடு ஏதாவது இருக்கா?’
‘தெரியலை. தோண்டிப்பார்த்தா இருக்கலாம். கவர்மெண்ட் முயற்சி எடுக்கணும்.’
‘நிலங்கள் இருக்கா?’
‘அது விஷயமா ஆர்.டி.ஐ. போட்டேன். இழுத்தடிச்சு கடைசில அம்பது செண்ட் இருக்குன்னான். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் வெப்சைட்ல சுமார் 100 ஏக்கர் இருக்கும்னு போட்டிருக்கு.’
ஒவ்வொரு ஊரையும் போலவே அதே அக்கறையற்ற அறம் நிலையாத் துறை தான். தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிவிக்க வக்கில்லாத அலுவலர்கள். அரசாங்கத்தின் இரு பிரிவுகளில் இரு வேறு தகவல்கள். செயல் ஊக்கம் அற்ற ஊழியர்கள், திறமை அற்ற அலுவலர்கள், கிடந்து மடிகின்றன எம் கடவுள்கள்.
‘நம்ம பெரியவாள்ளாம் என்ன பண்றா?’
‘திரிதண்டி ஜீயர் வந்து பார்த்தார். அப்புறம் ஒண்ணும் தெரியல்ல.’
இராமானுஜர் கட்டிய கோவில் பாழ், ஹைதராபாதில் இராமானுஜருக்கு மிகப்பெரிய சிலை. சமீபத்தில் உடையவரின் 1000வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அவரே கட்டிய கோவில் பாழ். பின் என்ன கொண்டாட்டம்?
‘கிஞ்சித்காரம் டிரஸ்ட், டி.வி.எஸ். இவாள்ளாம்?’
‘எப்பிடி அப்ரோச் பண்றதுன்னு தெரியல்ல.’
‘எவ்வளவு செலவாகும் கோவில் கட்ட?’
‘சுமார் 15 லக்ஷம். எங்க குடும்பத்துலயே எடுத்து பண்ணலாம்னு பார்த்தா அற நிலையத்துறை பர்மிஷன் அது இதுன்னு இருக்கு.’
திருப்பணி என்னும் பெயரில் கொள்ளை நடைபெறும் இன்னாளில், நல்ல மனிதர்களுக்கு வந்த துயர நிலை.
அந்தக் கோவில் இன்று சீரும் சிறப்புமாக உள்ளதை ஶ்ரீவைஷ்ணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கோவில் எப்படி உள்ளது என்கிறீர்களா?
நல்ல ஸ்திரமாக உள்ளது. கோவில் மேல் மரங்கள் வளர வேண்டுமென்றால் கோவில் மண்டபம் ஸ்திரமாகத்தானே இருக்க வேண்டும்?
ஆண்டாள் யாரை ‘எம் அண்ணரே’ என்று அழைத்தாளோ, அன்னார் ஆசை ஆசையாய் எழுப்பிய கோவில் இன்று இந்த நிலையில் உள்ளது.
பழைய கோவில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் எப்படி உள்ளன?
ரொம்ப விசேஷமாக, தமிழர்களின் அக்கறையைப் பறை சாற்றுவதாய் உள்ளது.
சரி. பெருமாள் எப்படி இருக்கிறார்?
கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு ஆடியபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான் கோபாலகிருஷ்னன்.

வேறு என்ன மூர்த்திகள் உள்ளனர்?
நம்மாழ்வார், உடையரவர், விஷ்வக்சேனர், கருடன். எல்லாரும் 50 ஆண்டுகளாய் கோவிலை விட்டு வெளியே நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


அர்ச்சகர் யாராவது உண்டா?
ஏன் இல்லை? 85 வயது சேதுராமன் சம்பளம் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தமும் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர். சில ஆண்டுகள் வரை ஒருகால பூஜைக்கு உதவி என்று அரசு அர்ச்சகருக்கு சில பத்து ரூபாய்களை அளித்து வந்தது. இப்போது அதுவும் இல்லை.
கோவிலில் ஏதாவது விசேஷங்கள் உள்ளனவா?
பாஞ்சராத்ர ஆகமக் கோவில் போல் தெரிகிறது. வெளியில் உள்ள த்வஜஸ்தம்பம், பலி பீடம் போன்றவையால் தெரிகிறது. ஆனாலும் குழப்பமே.
கோவிலுக்கு எப்படிச் செல்வது?
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.
சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்பு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.
சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 கிமீ உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும். ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது

ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ன செய்யலாம்?
- யார் சேவாகாலத்திற்குப் போவது
- எவ்வளவு சன்மானம் பெறுவது
- நம்மாழ்வாரை எப்படி அவமதிப்பது
- வேதாந்த தேசிகனை எவ்வாறு தூற்றுவது
- மணவாள மாமுனிகளை எப்படி நிந்திப்பது
- கீழ்த்தரமான தொலைக் காட்சிகளில் தோன்றி தென்கலையா, வடகலையா என்று விவாதிப்பது
- வடகலைக் கோவிலைத் தென்கலைக் கோவிலாக மாற்றுவது
- புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும்
என்பன போன்ற ஸாஸ்த்ர விசாரங்களில் ஶ்ரீவைஷ்ணவ சமூகம் ஈடுபடலாம். இந்த ஸாஸ்த்ர விசாரங்கள் முடிந்தவுடன், அறிவு நிலையில் மிக முந்தியுள்ள ஶ்ரீவைஷ்ணவ சமூகம் இந்தக் கோவில் விஷயமாக ஏதாவது செய்ய முனையலாம்.
அதுவரை உற்சவர் இல்லாமல், தளிகை இல்லாமல், நித்யப்படி ஆராதனைகள் இல்லாமல், கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டிருக்கட்டும்.
உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்ன செய்யலாம்?
பாலாஜி (+65-9083-7505, balajivenkatesan79@yahoo.com) அவர்களைத் தொடர்புகொண்டு பேசலாம். இவருக்கு அற நிலையத் துறையில் பல உதவிகள் தேவைப்படுகின்றன. கோவிலைப் புனருத்தாரணம் செய்ய அனுமதி மட்டும் வேண்டும். அற நிலையத்துறையில் உள்ளவர்கள் இந்தக் கோவில் விஷயத்தில் உதவுங்கள். காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் உற்சவர் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுங்கள். வரலாற்று ஆர்வலர்கள் ஒருமுறை வந்து பார்த்து ஆராய்ந்து உதவுங்கள்.
இந்தப் பதிவைப் படித்துவிட்டு அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால் அர்ச்சகர் சேதுராமன் அவர்களைத் (+91-97875-72556, +91-85084-53768) தொடர்புகொண்டு அவரை அழைத்துக் கொண்டு சென்று வழிபடலாம். வயதானவர். வேறு ஊரில் இருக்கிறார். ஆகவே பார்த்துச் செய்யுங்கள்.
பிறந்த நாளுக்கு அட்டிகை வாங்கினேன், ஐபோன் வாங்கினேன், மரினா பே ஸாண்ஸ்ல டின்னர் போனேன் என்று பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடாமல், இம்மாதிரியான பணிகளில் ஈடுபடலாம்.
இந்த ஸ்ரீஜெயந்திக்கு இதையாவது செய்வோம். கோபாலகிருஷ்ணனைக் கண்டு வந்து காப்பாற்றுவோம்.
கோகுலாஷ்டமி / ஸ்ரீஜயந்தி வாழ்த்துக்கள்.
ஆ..பக்கங்களில் இணைந்திருக்க, https://facebook.com/aapages
Leave a reply to உடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள் – ஆ..பக்கங்கள் Cancel reply