சிங்கப்பூர் வாசக நண்பர்களே,
அடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.
கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.
பொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.
சங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.
எனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.
நான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.
பல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
பாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.
என்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.
வாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.
தங்களின் அறிமுகம் கிடைத்தற்கு நான் மகிழ்கிறேன். தங்களும் எளிமையும், உரையாடல்களுக்குத் தயார் செய்து வரும் பொறுப்பும் கண்டு வியந்திருக்கிறேன். இந்திய வாழ்க்கை தங்கள் மனம் கவர்ந்த திருப்பாதங்களைத் தரிசிப்பதை இன்னும் எளிதாக்கும். சென்று வருக.
LikeLike
நன்றி ஐயா.
LikeLike
பயணங்கள் தொடரட்டும் 🙂
LikeLike
I felt the same way in 2011 when I left after 3 year stint with Indian Bank, Singapore. Great city.It
envelops you with comfort, peace, cleanlines, world vision and western outlook with eastern ethos.
LikeLike
உண்மையே. நிலைத்து நிற்பதற்குச் சாத்தியமே இல்லாத நாடு சிங்கப்பூர். ஆனாலும் தலை நிமிர்ந்து நிற்கிறது. காரணம் அறிவார்ந்த முன்னோடிகள், சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள்.
LikeLike
அருமை ஆமரவி, இது திடுக்கிட வைக்கும் செய்தி. மிகை இல்லாமல் சொல்கிறேன், உங்களின் ஆழமான அறிவை நுகர்ந்து பார்க்கும் வாய்ப்பை இழக்கப் போகிறோம். உங்கள் சொல்லாடல்கள், அரசியல் ஆழ் கருத்துகள், விஷய ஞானம், இலக்கியச் செறிவு, சொல்ல வேண்டிய பொருளை சொடுக்கிச் சொல்லும் முறை, வைணவ இலக்கியங்களில் பண்பட்ட தெளிவு, இந்த வயதில் இத்தனை ஆற்றலை அள்ளித் தந்த இறைவனை பலமுறை நினைத்துக் கொள்வேன். உங்கள் ஆற்றல் மிக்க ஆங்கிலம் எனக்கு இன்னமும் புரியாத ஒன்று. பலமுறை படித்தால் தான் என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு, அதன் அடி மரத்தையாவது தொட முடிந்தது. அத்தனை லாவகங்கள், உயர் நடை….பொருள் பொதிப்பு, நீங்கள் நம்பும் நாராயணன் உங்களுக்கு அத்தனையும் கொட்டிக் கொட்டிக் கொடுத்திருக்கிறான். நான் எழுதுவதில் எதுவும் புகழ்ச்சிக்காக அல்லவே அல்ல. நீங்கள் ஒரு அழகுத் திக்கலுடன் பேசுவதிலும் , நான் ஒரு மேதாவித் தனத்தை அனுபவித்தவன்.
எங்கு சென்றாலும் எல்லா ஷேமங்களுடன் மனைவி, குழந்தைகளுடன் வாழ பெருமானை வேண்டுகிறேன். ஆசீர்வாதம்.
LikeLike
நன்றி ஐயா. தங்களின் வழிகாட்டுதல், தங்கள் மூலம் இன்னும் பலருடைய வழிகாட்டுதல்களால் பயன் பெற்றேன். வணங்கி விடைபெறுகிறேன்.
LikeLike
தாயக வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!
நான் முதலில் மேடையேறிப்பேசியது உங்கள் ராமானுசன் நூல் வெளியீட்டு விழாவில்தான். என்றும் நினைவில் தங்கும் ஆளுமை உங்களுடையது.
மீண்டும் சந்திப்போம்😊
LikeLike