‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – சிங்கப்பூர் கிளை’ என்று போட்டிருக்கலாம் என்று தமிழக எழுத்தாளரொருவர் ஒட்டுமொத்த சிங்கப்பூர் இலக்கியக் கழகங்களின் தரத்தையும் சேதப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளதை நண்பர் ஒருவரின் பதிவில் கண்டேன். தமிழக எழுத்தாளரின் பதிவில் என்னால் எழுத இயலவில்லை. எனக்கு அனுமதியில்லை. ஆகவே தனிப்பதிவு.
முதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ஒன்று சிங்கப்பூரில் இல்லை என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தை சிங்கப்பூரில் உள்ள எவ்வளவு பேர் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. இரட்டைப் படையில் இருக்கலாம். ( நான் வாசித்தேன், ஆய்வுக் கட்டுரை எழுதினேன் என்பது எனது தனிப்பட்ட அனுபவம்). சில பகுதிகளைத் தவிர, விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதையே தெரிவித்திருந்தேன்.
மாலன் ஒருமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது சிங்கப்பூர் இலக்கியம் வளரவும், சிங்கப்பூரில் இருந்து இன்னமும் சிறப்பான சிறுகதைகள் வரவும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார். காரணம் இலக்கியம் என்பது வாழ்வாதாரத்தை வேண்டி மக்கள் அல்லல் படும் போது எழுவது. சிங்கப்பூரில் அம்மாதிரியாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த அல்லலுற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே அவர்கள் அத்தேவைக்கான போராட்டத்தை இலக்கியமாக வடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லியிருந்தார். 2010ம் ஆண்டு என்று நினைவு. தேசிய நூலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இதைத் தெரிவித்திருந்தார். நான் அப்போதே இதைப் பதிவும் செய்திருந்தேன்.
பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் அதனால் ஏற்படும் அல்லல்கள், எம்.ஆர்.டி. வண்டி தினமும் காலதாமதமாக வருவதால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகள், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் பல மைல்கள் நடந்தே சென்று குடிநீர் கொணர்வது, பெண்கள் இரவில் தனியாக வரும் போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதி ரீதியிலான கொடுமைகள், அரசாங்க அதிகாரிகளின் மெத்தனம் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கடை நிலையில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவன் போதிய நிதி வசதி இல்லாததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருந்தால் அதை வைத்து இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று ஒப்பாரிக் காவியம் செய்யலாம். விருதுகள் வாங்கலாம்.
ஆனால், மேற்சொன்ன எதுவும் நடக்கவில்லையென்றால் என்னதான் இலக்கியம் படைப்பது? தினமும் எம்.ஆர்.டி. ரயில் குறித்த நேரத்தில் இயங்குகிறது, ஒரு வேளை ஒரு மணி நேரம் பழுதானால் நிறுவனத்தின் தலைவருக்கு வேலை போய்விடுகிறது அல்லது நிறுவனம் பெருத்த தண்டனைக்கு உள்ளாகிறது, மின் தட்டுப்பாடு இல்லை, ஒரு மின் நிறுவனத்தின் மீது அதிருப்தி என்றால் அடுத்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம், வானில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது, அமைச்சர்களையும், எம்.பி.க்களையும் எளிதில் சந்தித்துப் பேசலாம், அரசு நிறுவனங்களில் ஊழல் இல்லை, அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வேலைகள் நடைபெறும் என்று இருந்தால் எப்படித்தான் இலக்கியம் செய்வது?
இருக்க வீடில்லை என்று குடிசைகளில் வாழ வேண்டிய பிரஜைகள் இல்லை. அனைவருக்கும் வீடுகள் கொடுத்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு அரசுப் பள்ளிக் கல்வி அனேகமாக இலவசமாக உள்ளது. போராட்டம் கரகாட்டம் என்று ஜல்லியடிக்க நேரமில்லை, வழியுமில்லை, தேவையுமில்லை. அப்புறம் இலக்கியம் என்று உலகத் தரத்தில் ஒப்பாரிக் காவியம் படைக்க மக்களால் எப்படித்தான் இயலும்?
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தைத் ‘தமிழ் மொழி மாதம்’ என்று வகுத்து, அம்மாதம் முழுவதும் தமிழ் மொழி வளர்வதற்கான நிகழ்வுகள் அனைத்தையும் செய்து வரும் தேசம் சிங்கப்பூர். தீவு முழுவதும் தமிழ் விழாக்கள், வாசிப்புப் பட்டறைகள், பயிலரங்குகள் என்று ஊரே விழாக் கோலம். விழா என்றதும் போஸ்டரெல்லாம் கிடையாது, வெறும் அறிவிப்புகள், பள்ளி கல்லூரிகளில் பரப்புரைகள், உணவகங்களில் அறிவிப்புப் பதாகைகள், ஒளிவழியில் ஓரிரு அறிவிப்புகள், இலக்கிய வட்டங்களில் செய்திகள். அவ்வளவே.
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ என்று இருந்தால் அப்புறம் இலக்கியம் வழியாக எதற்கான தீர்வைத் தேடுவது?
‘தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் நாடு செய்ய வேண்டியதனைத்தையும் சிங்கப்பூர் செய்துவருகிறது. எங்களால் இதற்கு மேல் செய்ய முடியாது. முடிந்தவரை தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத சிங்கப்பூர்ப் பேராசிரியர் ஒருவர்.
யூனிகோட் முறையில் இணையத்தில் / கணினியில் தமிழில் எழுதுபவர்கள் / வாசிப்பவர்கள் சிங்கப்பூருக்கு நெஞ்சார நன்றி கூற வேண்டும். யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துரு உருவாகப் பெரிய காரணம் சிங்கப்பூர். infitt என்று தேடிப்பாருங்கள். இணையவழித் தமிழுக்குச் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து செய்துள்ள உதவிகள் தெரியவரும். இத்தனைக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக உள்ள தேசம்.
இதெல்லாம் போகட்டும். பேட்டைக்குப் பேட்டை நூலகம் வைத்துள்ளார்கள். எந்த நூலகத்திலும் இரவு 9 மணி வரை நூல் எடுக்கலாம். நாள் முழுவதும் திரும்ப ஒப்படைக்கலாம். அதிகாரத்துவ நான்கு மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. விடுமுறை என்றால் மட்டும் என்றில்லாமல், வேலை நாட்களிலும் மாலை நேரங்களில் நூலகத்தில் பிள்ளைகளைக் காணலாம். தனியாகச் செயலி கொண்டு நூல்களைப் படிக்கவும் உதவுகிறது நூலக வாரியம். அதன் சேவைகளை முழுவதும் பயன்படுத்தியவன் இதை எழுதிக்கொண்டிருக்கிறான்.
மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், தமிழில் நல்ல நூல்கள் வெளியாக வேண்டும், தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் வாசகர்கள் / எழுத்தாளர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழில் பேசவே தேவை இல்லாத சூழலில், பேசாமலே இருந்தால் மொழியின் பயன்பாடு குறைந்து விடுமே என்கிற அக்கறையில் ‘தாய் மொழிச் சேவைகள்’ என்று தனியாக ஒரு பிரிவையும் நூலக வாரியம் நடத்துகிறது.
இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?
உண்மையில், தமிழகத்தில் இருந்து வெளியாகும் போராட்ட இலக்கியம், அழுகாச்சி இலக்கியம், எதிர்மறை இலக்கியம், இடது சாரி இலக்கியம் முதலியவைகளால் நவீன சிங்கப்பூரர்களை உள்ளிழுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வில் இந்த அழுகாச்சிகளை எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுவும் மில்லினியல்ஸ் எனப்படும் இணைய இளையர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் அதிர்ச்சி + அழுகை இலக்கியம் எடுபடவில்லை. இது நான் கண்டது.
எனவே தமிழக எழுத்தாளரின் கவலை நியாயமானதே. சிங்கப்பூரின் இலக்கியத் தரம் அதலபாதாளத்திலேயே உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் அழுமூஞ்சி இலக்கியங்கள் அங்கு எடுபடவில்லை. சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தில் தமிழகத்தின் தாக்கம் இருப்பதால் அவ்வெழுத்தில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனாலும் அவ்வகையான தாக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, மீண்டு, சிங்கப்பூருக்கேயான எழுத்தைப் பல எழுத்தாள நண்பர்கள் செய்துகொண்டெ இருக்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ், மாதங்கி, ஜெயந்தி சங்கர், அழகுநிலா, ஷாநவாஸ் போன்ற, சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதும் தற்கால எழுத்தாளர்களால் சிங்கைத் தமிழ் இலக்கியம் சிறப்புறும். இவர்களைத்தவிர இன்னும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தற்கால வாசகனைப் பூரணமாகச் சென்றடைய முடியவில்லை என்பதையும் நான் கண்டுள்ளேன்.
ஆக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றொரு இயக்கம் உள்ளது. அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கான வாசகர்கள் உள்ளூரில் உள்ளனர். சிங்கப்பூரைக் கருவாகக் கொண்ட எழுத்துக்களை அவ்வாசகர்கள் வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாரி இலக்கியம் தேவையில்லை. சிங்கப்பூரின் இலக்கியம் அங்கிருந்தே உருவாகட்டும். மற்ற நாட்டு மாரடிக்கும் அழுகைகள் அங்கு வேண்டாம். அதற்கான தேவையும் அங்கு இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். தேடிப்பிடித்து வாசிக்கும் தேர்ந்த வாசகர்களும் உள்ளனர். நான் அறிந்தவரையில் இவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டு வாசிப்பும் நடத்துவதுண்டு. ஜெயமோகனின் மஹாபாரதத்தைக் கூட்டு வாசிப்பு முறையில் அனுபவித்தவர்களை நான் அறிவேன்.
சில மாதங்களுக்கு முன் வாரந்தோறும் நூலகம் செல்லும் (பள்ளிக்குச் செல்லும்) என் மகனிடம் அவன் தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லையே என்று வருத்தப்பட்டேன். ‘Show me a Harry Potter equivalent, Rick Riordan equivalent in Tamil’ என்றான்.
இதைத் தமிழக எழுத்தாளரின் நையாண்டிக்கான பதிலாக எடுத்துக் கொண்டேன்.
உண்மை. கதை உருவாவதற்கான களம் இங்கு இல்லை (ஜெயமோகன் இதை சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்). நிறைய மேடு பள்ளங்களை கடந்து போகும் வாழ்க்கையில் இருந்து, செறிவான அனுபவங்களில் இருந்து உருவாவதுதான் கதை என்று நினைக்கிறேன். சிங்கப்பூரர்கள் ஒரே சீரான, சராசரியான ஒரே நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் கதைக்கான களம் உருவாவதில்லை என்று நினைக்கிறேன்.
LikeLike
… வெளிநாடுகளில் இருந்து வந்து சேர்ந்தவர்களால் தான் சிங்கப்பூர் இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அதில் தவறும் இல்லை.
இங்கேயே பிறந்து வளர்ந்து, வெளிநாடுகளை எட்டிக் கூட பார்க்காதவர்கள், நிறைய படித்து கற்பனையால் அந்நிலத்தை அனுபவித்தால் மட்டுமே கதை எழுதுவதற்கான வாய்ப்புண்டு.
LikeLike