மாணவர்களே, இன்று கொஞ்சம் சுய சரிதை. பயன்படும் என்று எண்ணுகிறேன்.
1988ல் நடுவணரசுப் பாடத்திட்டத்தில் (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்தேன். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று போட்டோவெல்லாம் வந்தது. பேட்டியெடுத்தார்கள். தூர்தர்ஷன் பேட்டி கண்டது. (இப்ப நிறுத்தறியா இல்லியா என்று சொல்வது புரிகிறது. நிறுத்திக்குவோம்).
விஷயம் இதுவன்று.
தினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.
தூக்கிவாரிப் போட்டது. “ஏன் இங்கிலீஷ்க்கு தர மாட்டாங்களா? நான் தமிழ் மாணவன் தானே? இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா?” 16 வயதில் உலகம் புரியாமல் கேட்டேன்.
நான் தெரிந்துகொண்டது: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தால் மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். வேறு எந்த மொழியில் இந்திய அளவில் முதலிடம் வகித்தாலும், தமிழ் நாட்டு மாணவனேயாகிலும் மாநில அரசு கண்டுகொள்ளாது. அதைப் போலவே மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பலன்கள் அதிகம். மற்ற மொழிப் பாடங்களில் கிடையாது.
இது என்ன கொடுமை என்று எண்ணியபோது ராஜீவ் காந்தி ஆபத்பாந்தவனாக வந்தார். டில்லிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மத்திய மந்திரி தினேஷ் சிங் விருது வழங்கினார். CBSE என் கல்லூரிப் படிப்பு வரை ஊக்கத்தொகை வழங்கியது. ஹிந்து நாளிதழ் ரூ 1000 அளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈராண்டுகளுக்கு மாதம் ரூ 110 அளித்தது. அன்னாட்களில் அவை மிகப்பெரிய தொகை.
பின்னர் தெரிந்துகொண்டது : அகில இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்றது சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். என்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தார்.
இப்ப என்ன சொல்ல வர்ற ? அதானே கேட்கிறீர்கள்?
நான் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றையும் பயின்றேன். எந்தவொரு மொழியினாலும் பிறிதொரு மொழி பாதிப்படையவில்லை. ஹிந்தியால் தமிழோ, தமிழால் ஆங்கிலமோ கெடவில்லை. மாறாக ஒரு மொழி இன்னொன்றுக்கு உதவியது என்றே சொல்வேன். ஒரு மொழியின் வாயிலாகவே பிறிதொரு மொழியை நாம் அறிந்துகொள்ள முடியும். நான்காவதாக சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பிருந்திருந்தால் அதையும் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.
இளம் வயதில் எத்தனை மொழிகளைக் கற்க வாய்ப்புள்ளதோ அத்தனையையும் கற்றுக் கொள்ளுங்கள்.
பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து பம்பாயில் Voltas கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட மொழிகள் பற்றி இன்னொரு தரம் சொல்கிறேன்.
(தொடரும்) #மொழி