மாணவர்களே,
பம்பாயில் வேலைக்குச் சேர்ந்த போது இந்தி பேசினால் ஓரளவு புரியும். எழுதப் படிக்கத் தெரியும்.
Voltasல் பணிமனை(Workshop)ல் முதல் சுற்று. TATA கம்பெனிகளில் அனைத்து பொறியாளர்களும் எல்லாத் துறைகளிலும் சிறிது காலம் பணியாற்ற வேண்டும். மின் பொறியியலாளனான என்னை மின் தூக்கி/ மின் மாற்றி (Transformer/Switchgear) உற்பத்தி செய்யும் பணிமனைக்கு அனுப்பினார்கள்.
பூராவும் மராத்திய தொழிலாளர்கள். சிவ சேனை யூனியன் அங்கத்தினர்கள். தென்னிந்தியா என்றால் அப்போது அவ்வளவாக ஆகாது. இவர்களை நான் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காக அவர்களுடன் நான் பேசியே ஆக வேண்டும். அங்குள்ள சூபர்வைசர்கள் டிப்ளமா படித்தவர்கள். ஓரளவு ஆங்கிலம் புரியும். பெரும்பாலும் மராத்தி, இந்தி, கொஞ்சம் குஜராத்தி.
ஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறு ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புரியவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது?
சூபர்வைசர் சாளுங்கே என்னும் மராத்தியரிடம் சென்று ‘எனக்கு மராத்தி தெரியாது. இந்தியில் சொல்லுங்கள்’ என்பதை மராத்தியில் எப்படிச் சொல்வது என்று கேட்டுக்கொண்டேன். ஆச்சரியம் அவருக்கு. ‘எனக்கு மராத்தி தெரியாது’ என்பதை மராத்தியிலேயே சொன்னதால் ஊழியர்கள் ஆச்சர்யத்துக்குள்ளானார்கள். இந்த வழிமுறை ஊழியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இன்னொரு உத்தியையும் கையாண்டேன்.
மதிய உணவை ஊழியர்களுடன் சேர்ந்து உண்டேன். மேனேஜர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அங்கெல்லாம் சாதி வேறுபாடு உண்டு. எனக்குக் கவலை இல்லை. ஒரு மாதம் இப்படிச் சென்றது.
ஒரு மாதத்தில் மராத்தியில் அடிக்கடி பயன்படும் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பயன் படுத்துவதற்கன்று. அவையே அதிகமாகப் புழங்கியவை.
இரண்டு மாதங்களில் ஊழியர்கள் சகஜமாகப் பழகத் துவங்கினார்கள். அடிக்கடி OT – Overtime – கேட்பார்கள். ஓரிரு முறை கொடுப்பேன். பின்னர் மறுக்கத்துவங்கினேன். ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் போது மற்ற ஊழியர்களுடன் அவர்களது பேருந்திலேயே சென்று வந்தேன். முடிந்தவரை மராத்தியிலேயே பேச முயன்றேன். மொழி ஓரளவு கைகூடியது.
மதிய உணவு இடைவேளையில் அவர்களுடன் அமர்ந்து சிவ சேனையின் பத்திரிக்கையான சாம்னா படிக்கத் துவங்கினேன். அப்போது பால் தாக்கரே தலையங்கம் எழுதுவார். பெரும்பாலும் எளிமையாகவே இருக்கும். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் எனக்காகவென்று சாம்னா எடுத்து வந்தார்கள். நானும் சாம்னா படிக்கிறேன் என்பதால் இன்னமும் ஒன்றிப்போனார்கள்.
வந்த புதிதில் அவர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டது ‘யெ மதராஸி சாப் நஹி, சாம்ப் ஹை’ ( இவன் மதராசி ஆபீசர் இல்லை, மதராசிப் பாம்பு). அதே ஊழியர்கள் 2-3 மாதங்களில் சொன்னது ‘இக்கட யே மதராஸி சாஹேப். துமி அத்த மராதி மானுஸ் ஆஹெ. துமி ஃக்த பஸா. அமி காம் கர்தோ, துமி பகா’ ( இங்க வாங்க மதராசி ஆபீசர். இப்ப நீங்க மராத்தி மனிதர், சகோதரர், இங்க வெறுமெனே உக்காருங்க, நாங்க வேலை செய்யறோம், நீங்க பாருங்க’ ).
இத்தனைக்கும் நான் அவர்களுக்கு ஒன்றும் அதிகப்படியாகச் செய்யவில்லை. அவர்களின் மொழியைப் படித்தேன். அவ்வளவு தான்.
இரண்டு ஊழியர்கள் மிகவும் நெருக்கமானார்கள். தங்கள் வீடுகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள். அதில் ஒருவர் பின்னாளில் சிவசேனை சார்பில் ஏதோ அரசுப் பதவியும் பெற்றார் என்று தெரிந்துகொண்டேன்.
6 மாதங்களில் வேறு பணிமனைக்கு மாற்றினார்கள். ஊழியர்கள் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.
சிவசேனை அலுவலகங்கள் (ஷாகா) எனப்டும். அனேகமாக பேட்டைக்கு இரண்டு இருக்கும். விடுமுறை நாட்களில் அங்கும் சென்று பேச்சுக் கொடுப்பேன் – மொழியறிவு பெற வேண்டி. ‘மி நாதுராம் கோட்ஸே போதோயே’ என்ற மராத்திய நாடகம் பார்த்தேன். பிரமிப்பு தான். தமிழ் நாடகம் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.
நான் பம்பாயில் பணியாற்றியது மூன்றாண்டுகளே. இந்தி சரளமாகவும், மராத்தி சமாளிக்கக் கூடிய அளவிலும், குஜராத்தி ரொம்பவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடிய அளவிலும் கற்றுக் கொண்டேன். தற்போது குஜராத்தி மறந்துவிட்டது. ஆனாலும் மராத்தி நினைவில் உள்ளது. ‘அஸ்து’ என்னும் மராத்தி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமும் எழுதியிருக்கிறேன். சிங்கப்பூரிலும் மராத்திய நண்பர்களிடம் திக்கித் திணறி மராத்தியில் பேச முயல்கிறேன். அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மராத்தி கற்றுக் கொண்டதால் தமிழ் மறந்துவிடவில்லை. குறுஞ்செய்திகள் முதற்கொண்டு தமிழிலேயே அனுப்புகிறேன். எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழியைப் பயன்படுத்த முடியுமே அங்கங்கே அவற்றைப் பயன் படுத்துகிறேன். மிக அதிகமாகத் தமிழ் உபன்யாசங்களைப் பம்பாயிலேயே கேட்டிருக்கிறேன்.
எந்த மொழியுமே அழகானது தான். அதன் இலக்கண அமைப்பு என்னை வசீகரப்படுத்தியே உள்ளது. ஒன்றினது அமைப்பைப் பிறிதொரு மொழியுடன் பொருத்திப் பார்த்தால் போதும். மொழி கைகூடிவிடும்.
மாணவர்களே, மொழிகளைக் காதலியுங்கள். அவை உங்களைக் கைவிடா.
ஜப்பானிய மொழி கற்றுக் கொண்ட விஷயத்தைப் பின்னர் ஒருமுறை சொல்கிறேன்.
” ஆங்கு இனிதே,தேரின், கோள் நட்புத் திசைக்கு.”
செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது
இனியவை நாற்பதில் சொன்ன மாதிரி நட்பு வளர்க்க மொழியை உபயோக படுத்தி இருக்கிறிர்கள்
LikeLike