மாணவர்களே, பம்பாயில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அங்கு ஜப்பானியக் கம்பெனிக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம்.
எதைப் பார்த்து மென்பொருள் எழுதுவது? Functional Specifications என்று ஒரு ஆவணம் கொடுப்பார்கள். அதில் உள்ள தேவைகளின் படி மென்பொருள் எழுத வேண்டும். ஒரு விஷயம் மட்டுமே கடினமாக இருக்கும். அந்த ஆவணம் ஜப்பானிய மொழியில் இருக்கும்.
ஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.
ஆகவே ஜப்பானிய மொழி பயிலத் துவங்கினேன்.
முழுவதும் பயில இயலவில்லை. ஓரளவிற்கு அடிப்படையாகப் பேச வந்தது. ஜப்பானிய நிறுவனத்தார் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பக்க அளவிற்கு எழுத முடிந்தது ( தவறுகள் இருந்தன என்பது வேறு விஷயம்).
சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜப்பான் சென்றேன். அங்கு சாட்சிக்குக் கூட ஆங்கிலம் இல்லை. மேலாளர் ஜப்பானிய மொழியிலேயே பேசுவார். மொழி மாற்றிக் கருவி கொடுத்தார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் சரளமாகப் பேச முடியவில்லை.
ஜப்பானில் பகுதி நேரமாக சிறு பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2 மாதங்களில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் தாய்மொழியில் அவர்கள் பேசும் போது அவர்கள் அளவிற்கு என்னால் பேச முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அதிக அளவு புரியத் துவங்கியது.
பணி அழுத்தம் காரணமாக மேலும் ஜப்பானியம் பயில முடியவில்லை. ஆனால், சாதாரணமாகப் பேசும் போது ஜப்பானிய மொழியில் 4 வரிகள் பேசிவிட்டு, அவர்கள் ஆச்சரியம் அடந்தவுடன் ஆங்கிலத்திற்கு மாறுவது என்று ஒரு உத்தியைக் கையாண்டேன். தங்களது மொழியில் அன்னியன் பேச முயல்வதை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவறுகளைத் திருத்தினார்கள். ‘நீ பேசுவது குழந்தை பேசுவது போல் உள்ளது’ என்று சொன்னார்கள். (கொதமோதாச்சி)
ஜப்பானிய மொழி எனக்குத் திறந்துவிட்ட கதவுகள் பல.
தற்போது 12 ஆண்டுகளாக அம்மொழியுடன் தொடர்பில் இல்லை. ஆகையால் தற்போது மொழி என்னைவிட்டு விலகிவிட்டது. மேலோட்டமாகவே புரிகிறது. மீண்டும் பயிலலாமா என்று யோசித்து வருகிறேன். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இலக்கண முறையில் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. யாராவது மொழியியலாளர்கள் ஆராயலாம்.
இதற்கிடையில் சிங்கப்பூரில் சீனம் பயில முயன்று தோற்றேன். கடினமான மொழி. எனக்கு வயதும் ஆகிவிட்டது என்று புரிந்தது.
ஜப்பானியத்தாலும் எனது தமிழறிவு அழியவில்லை. மேலும் மெருகேறியது என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு மொழியும் சிறந்த அனுபவங்களுக்கான கதவே. நாம் தட்ட வேண்டும். உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
அதிகக் கதவுகளைத் தட்டுங்கள். உலகெங்கிலுமிருந்து தென்றல் உங்களைத் தழுவட்டும்.
வாழ்த்துக்கள். #மொழி
பி.கு.: சென்னையில் ஜப்பானிய மொழி பயில ABK AOTS DOSOKAI என்று தேடிப்பாருங்கள்.