மாணவர்களே, இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் சிங்கப்பூர்ல் Changi City Point, Singapore என்னும் இடம். கட்டாந்தரையாக இருந்த நிலம். இன்று இயற்கையும் செயற்கையும் கொஞ்சும் இடமாக உள்ளது.

செயற்கையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் ஒரு ரயில் நிலையம், வானளாவ நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழியர்கள் அமைதியாக நடந்து சென்று வேலை செய்ய ஏதுவான நிலை, எப்போதும் கொட்டும் தண்ணீர், எப்போதுமே போகாத மின்சாரம். இவை ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அன்று. ஆட்சியாளர்களாலும் கடுமையாக உழைக்கும் அறிவுடை மாந்தர்களாலும் உருவாக்கப்பட்டவை.

ஏன் நிலத்தை அபகரிக்கிறார்களே, நிலத்தில் குழாய் பதிக்கிறார்களே, கட்டடம் எழுப்புகிறார்களே என்று யாரும் ஓலமிடுவதில்லை. அரசு நல்லது செய்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

தடையில்லா மின்சாரம் வேண்டும், குழாய் திறந்தால் நீர் வேண்டும், இருக்க இடம் வேண்டும், நள்ளிரவிலும் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது, மக்களின் ஒத்துழைப்பும் தேவை.

சிங்கப்பூரை விட பல ஆயிரம் மடங்குகள் பெரிய அளவுள்ள அருகாமை நாடுகள் ‘சிங்கப்பூர் செய்வதை நம்மால் ஏன் செய்ய முடிவதில்லை? சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது? அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது? தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது?’ என்று யோசிக்கின்றன. காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சிங்கப்பூர் செய்துகாட்டியுள்ளது. மூன்றாம் தர நாடாக இருந்து, 30 ஆண்டுகளில் முதல்தர நாடாக முன்னேறியுள்ளது.
உலகில் Per Capita Income மிக அதிக அளவில் உள்ள ஒரு நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.
காரணம்: போராட்டங்கள் இல்லை, வெற்று வாய்ச்சவடால்கள் இல்லை, வன்முறை இல்லை. இவற்றில் எல்லாம் ஈடுபட மகக்ளுக்கு நேரமோ தேவையோ இல்லை.
அடுத்த முறை உங்களைப் போராட்டத்துக்கு யாரேனும் அழைத்தால் மேற்சொன்ன கேள்விகளைக் கேளுங்கள்.
சிங்கப்பூர் விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவும் விடுதலை பெற்றது. அப்போதே உலக அளவில் சர்க்கரை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது கியூபா. இலங்கை 1948ல் விடுதலை பெற்றது. தற்போது இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
சில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
காரணம்: மனித முயற்சியால், ஊழல் அற்ற அரசியலால், மக்களின் கடின உழைப்பால் இரண்டு தலைமுறைகளுக்குள் செழிப்பாக வளர்ந்த தேசம் சிங்கப்பூர் மட்டுமே.
சிந்தித்துப் பாருங்கள். வெற்றுப் போராட்டங்கள் வீணாக முடியும். தேச நலன் பேண, உங்களை வாழ்வில் முன்னேற்றிக் கொள்ள, அரசியல்வாதிகள் அறிவிக்கும் போராட்டங்களைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
நாளைய உலகம் உங்கள் கையில். தொடர்ந்து பேசுவோம். வாழ்த்துக்கள்.