சிங்கப்பூரில் நான் வசித்த 9.5 ஆண்டுகளில் ஊரில் இருந்த நாட்களில் அனேகமாக எல்லா நாட்களும் நூலகம் சென்று வந்திருந்தேன். இந்த பாக்யம் எத்தனை பேருக்குக் கிட்டியிருக்கும் என்று தெரியவில்லை.
கிளிமெண்டி ரயில் நிலையத்தில் இறங்கி என் வீடு இருந்த வெஸ்ட் கோஸ்ட் டிரைவ் வரை 10 மணித்துளிகள் நடக்க வேண்டும். ரயில் நிலையத்திலேயே நூலகம் உள்ளது. பணி முடிந்து சுமார் 8:30 மணிக்குக் கிளிமெண்டியில் இறங்கினால் நூலகம் மூடும் 9:00 மணி வரை ஏதாவது மேய்ந்துகொண்டிருப்பது வழக்கம்.
‘புதியதாக வந்தவை’, ‘திருப்பப் பட்டவை’ என்று ஏதாவது புதிய நூல் கண்ணில் படும். அப்படி நான் வாசித்த நூல்கள் சுமார் 270 இருக்கும்.
நானாகத் தேடுப் போய்ப் பிடித்துப் படித்த நூல்கள் என்று சுமார் 120 இருக்கும்.
எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்து படித்த நூல்கள் பல உண்டு. அடிக்கடி சென்ற நூலகம் விக்டோரியா தெரு தேசிய நூலகம். அது ஒரு கருவூலம். அவ்வளவுதான்.
வெளிநாட்டுக்காரன் என்பதால் ஒவ்வொரு முறையும் 8 நூல்களே கடன் வாங்க இயலும். நிரந்தரவாசிகளுக்கு 16. சிங்கப்பூரர்கள் 32. பள்ளி விடுமுறை நாட்களில் இவை அப்படியே இரட்டிப்பாகும்.

ஒவ்வொரு வார இறுதியிலும் குடும்பத்துடன் நூலகம் செல்லும் வழக்கமும் இருந்தது. நூலகத்தில் சண்டை. எனக்கு ஒரு நூலே கிடைக்கும். பிள்ளைகளுக்கு 6. மனைவிக்கு 1.பெரியவன் பாரதத்தில் கல்லூரிக்குச் சென்ற பிறகு சண்டை கொஞ்சம் குறைந்தது.
நூல் ஏதாவது தேடிக் கிடைக்கவில்லை என்றால் கிளிமெண்டி நூலக ஊழியர்களிடன் சொல்லிச் செல்வேன். அவர்கள்தொலைபேசியில் அழைத்து எடுத்துத் தருவார்கள். இதை அவர்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் சிங்கப்பூரர்கள் அப்படித்தான். கருமமே கண்ணாயினார்.
சிங்கப்பூரை விட்டு வந்ததில் எனக்கிருக்கும் ஒரே பெரிய வருத்தம் நூலக வசதி மட்டுமே. Library@Clementi Mall