நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வை எதிர்ப்பதாகக் கூறுவதில்லை. ஏனெனில் ஜே.ஈ.ஈ. தேர்வின் மூலம் தேர்வானவர்கள் அரசியல் வியாதிகள் நடத்தும் பொறியியல் (பொரியல்?) கல்லூரிகளில் சேர்வதில்லை. எனவே வியாதிகளின் டார்கெட் ஜே.ஈ.ஈ. மாணவர்கள் அன்று.
ஆனால் நீட் அப்படியானதன்று. அடி மடியில் கை வைப்பது. பணம் கொடுத்து சீட் வாங்கும் கூட்டத்தைப் பணம் கொடுக்காமல் தேர்வின் மூலம் சீட் பெறச் செய்தால் வியாபாரம் என்னாவது? எனவே நீட் வேண்டாம் என்று இவ்வளவு முழக்கம்.
நீட் தேர்வு மட்டுமில்லை, பொறியியல் படிப்புக்கும் அகில இந்தியத் தேர்வு தேவை. அதன் அடிப்படையில் தேர்வானவர்கள் பொறியியல் படிக்கலாம் என்று வரப்போகிறது என்கிறார்கள். அப்போது ஓலம் இன்னும் அதிகமாகும். ஏனெனில் முதலீடு என்னாவது? சில ஏக்கர் நிலமும் சில கோடிகளும் இருந்தால் பொறியியல் கல்லூரி திறக்கலாம் என்று ஆட்டுக் கொட்டிலைத் திறந்துவிட்டு, இப்போது கேட் கீப்பர் வருவார் என்றால் எப்படிக் கல்லா கட்டுவது? எனவே ஒப்பாரி அதிகமாகும்.
நீட் தேர்வு சரி. இப்போது எம்.பி.பி.எஸ். தேர்வு முடித்த பின்னரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று சட்டம் வர இருக்கிறது. அப்போது என்ன செய்வது? தமிழகத்திற்கு விலக்கு கோருவார்களோ? செய்தால் அதைவிடக் கேவலம் ஒன்றும் இருக்க முடியாது. என் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவ மாணவர்கள் அகில இந்தியத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்றது அது.
சொந்த அனுபவம் ஒன்று. இந்தியாவில் எம்.டி.எஸ். (MDS) பயின்று 8 ஆண்டுகள் பல் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவத்துடன் உறவினர் சிங்கப்பூரில் என்.யூ.எஸ்.(National University of Singapore) ல் முனைவர் பட்ட மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்டம் ஆராய்ச்சியின் மூலம் பெறப்படுவது. வாரம் தோறும் பி.டி.எஸ். மாணவர்களுக்குச் சில மணி நேரங்கள் வகுப்பெடுக்க வேண்டும். ஆசிரியராகத் தகுதி உள்ளதே என்று ‘நான் பல் மருத்துவராகப் பணியாற்ற அனுமதி உண்டா?’ என்று என்.யூ.எஸ்.ஸிடம் கேட்டு எழுதினார். ‘அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் சிங்கப்பூரில் ஒரு முறை பி.டி.எஸ். பயில வேண்டும்’ என்று பதில் தந்தனர்.
பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்க அனுமதி உண்டு, ஆனால் பல் மருத்துவராகப் பணியாற்ற இயலாது. இப்படி ஒரு சட்டம். இது முரணாக உள்ளது என்பது வெளிப்படை. ஆனாலும் நமது பி.டி.எஸ். ற்கு மதிப்பு அவ்வளவுதான். எம்.பி.பி.எஸ்.ம் அப்படியே என்று அறிகிறேன். ஆனாலும் எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் படித்த மருத்துவ மாணவர்கள் மருத்துவராகப் பணியாற்ற அனுபதி உண்டு என்று கேள்வி. மேற்படிப்பை இங்கிலாந்து, அமெரிக்காவில் படித்திருக்க வேண்டுமோ என்னவோ.
அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு ஏன் உயரவில்லை என்று கேட்டு அரசைப் பதிலளிக்க நிர்ப்பந்தம் செய்தால் அர்த்தம் உண்டு. அதில் சமூக அக்கறையும் நேர்மையும் இருக்கும். ஆனால் அதை நமது அரசியல் வியாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பது நிதர்ஸனம் என்பதை நினத்தால் மனம் கனக்கிறது.
ஆனால் ஒன்று. தேசியக் கல்விக் கொள்கை பற்றி சினிமா நடிகர் கேள்வி எழுப்புவதை முக்கிய நிகழ்வாக நினைக்கும் நமக்கு வேறு எப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் வாய்ப்பர்? #NEET