சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை

சிங்கப்பூர் இலக்கியத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடலாமா? என் பார்வை.

சுனீல் கிருஷ்ணன் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயமோகனும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு, விளக்கம் அளித்து நண்பரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான சித்துராஜ் பொன்ராஜ் இரண்டு பதிவுகள் எழுதியிருந்தார்.

சிங்கப்பூருக்கு வரும் எந்தத் தமிழக எழுத்தாளரும் சிங்கப்பூர் இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்து, எழுத்தாளர்களை விதந்தோத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. (இதைப்பற்றி 2016ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.) அவ்வாறு செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்களும் நினைக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

சுனீல் மற்றும் ஜெயமோகனின் விமர்சனத்திற்கு ஆட்பட்டுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்களை நான் அறிவேன். Both ends of the spectrum உண்டு. அருமையாக எழுதுபவர்களும் அவ்வாறு எழுதாதவர்களும் என்று இரு துருவங்கள் சிங்கையிலும் உண்டு. நிற்க.

சூர்யரத்னா எழுதுவது இலக்கியம் அன்று, ராணிமுத்துவில் வரும் பத்திக் கதை போன்றது என்ற ஜெயமோகனின் கூற்று அவரளவில் சரியே. ஆனால், சூர்யரத்னா ஜெயகாந்தன் கிடையாது. அவர் எழுதும் சூழல் ஜெயகாந்தன் எழுதிய சூழலை ஒட்டியது அன்று. அன்றாட வாழ்க்கைத் துன்பங்கள் அற்ற சமூகம் சிங்கப்பூர் சமூகம். பிரச்னைகள் அற்ற சமூகத்தில் ஜெயகாந்தன் தர இலக்கியம் எழுவது எங்ஙனம் சாத்தியம்? சூரியரத்னா அவர்களது நடைமுறை வாழ்க்கையை ஒட்டி எழுதுகிறார். அந்த நாட்டின் அளவில் அது அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. ஆகவே அது சிங்கப்பூர் இலக்கியமே.

ஷானவாஸ் உணவுக் கடைகள், உணவு தொடர்பான தொழில் செய்து வருபவர். தனது தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். அவர் தனது தொழில் வழியாகக் காணும் சிங்கப்பூரைத் தனது எழுத்தில் காட்டுகிறார். ஆகவே அதுவும் சிங்கப்பூர் இலக்கியமே.

ஜெயந்தி சங்கர் பாவனைகள் இல்லாமல் எழுதுபவர். மொழிபெயர்ப்புகள் செய்கிறார். சிங்கப்பூர் தொடர்பான சீன மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். சிங்கப்பூர்க் கதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். அவரது பார்வையில் தென்படும் சிங்கப்பூரை அவர் நமக்குக் காட்டுகிறார். சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதுவும் இலக்கியமே.

சித்துராஜ் பொன்ராஜின் வீச்சு அதிகம். அதிகம் வாசிப்பவராகவும், உலக இலக்கியங்களில் பயிற்சி உடையவராகவும், தமிழ், சம்ஸ்க்ருதம், கன்னடம், ஸ்பானிஷ் என்று பல மொழிகளில் தேர்ச்சி உடையவருமான சித்துராஜ் பொன்ராஜ் தனது பார்வையில் சிங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார். பக்தி இலக்கியங்களிலும் ஆர்வம் உடைய அவரது பார்வை விசாலமானது.

மாதங்கி யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிப்பவர். இவரும் ஜெயந்தி சங்கரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கையில் குடியேறியவர்கள். நடுத்தர மக்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இவர்களது எழுத்தைப் பார்க்கிறேன்.

சித்ரா ரமேஷ், குமார், அழகு நிலா என்று பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சித்ரா பெண்ணியம் தொனிக்க எழுத வேண்டும் என்று பிரயத்னப்பட்டு எழுதுகிறார். குமார் கவிதைகள் எழுத முயன்று தனது பார்வையைப் பதிவு செய்கிறார். அழகுநிலாவின் எழுத்துகள் நேர்மையானவை. புனைவு, அபுனைவு என்று இரண்டையும் எழுதும் அவர், தனது கட்டுரைகளுக்குச் செறிவூட்டுவதற்காகப் பெரும் முயற்சி செய்பவர்.

கவிதைகள் எழுதுபவர்கள் பலர் உள்ளனர். நான் கவிதையின் பக்கம் போவதில்லை. பலதும் வேண்டும் என்றே பொய்யுரைப்பதாகத் தோன்றுவதால் அப்படி.

இத்தனை பேர் தான் எழுதுகிறார்களா என்கிற கேள்வி எழலாம். மொத்த நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம். இதில் இந்தியர்கள் 7%. சுமார் 3,85,000 இந்தியர்களில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் இருந்து வந்து தற்போது எழுதுபவர்கள் மேற்சொன்னவர்கள். இன்னும் சிலரும் எழுதுகின்றனர். அவர்களை நான் வாசித்ததில்லை.

எழுதும் பிறர் திருமுறைகள், கம்பன் சார்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் அறிஞர்கள் என்னும் வகையினர்.இலக்கியவாதிகள் அல்லர். பெரியவர் அ.கி.வரதராசன் இவ்வகையைச் சேர்ந்தவர்.

எழுதுபவர்கள் முதலில் வாசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தீவிரமாக வாசித்தபின் எழுத்து வாய்க்கும். மேற்சொன்ன எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீவிர வாசிப்பு வாய்த்தவர்கள், அப்படி வாய்த்தவர்களில் இருந்து கிளர்ந்து எழுந்து எழுதுபவர்கள், எழுதியதைப் புத்தகமாக வெளியிடுபவர்கள் என்று எண்ணிக்கை Drill Down Effectல் குறைந்துகொண்டே வந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 என்று நின்றால் வியப்பதற்கில்லை.

எழுதும் 15 பேரில் யாரும் ஜெயகாந்தன் போல், புதுமைப் பித்தன் போல் எழுதவில்லை, எனவே இலக்கியம் இல்லை என்று சொல்வது சரியா?

அப்படி எழுதும் 15-20 பேரும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு, ஒரு சட்டகத்தின் உள்ளே இருந்தபடியே எழுதுகிறார்கள். சிலதை எழுத இயலாது. உதா: ‘காவி கார்ப்பரேட் மோதி’ என்று கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல் உள்ளது. நெற்றியில் திலகத்துடன் மோதி, கையில் சூலம், அதில் காவிக் கொடி, அதன் மேல் மண்டையோடு. இப்படிப்பட்ட அட்டைப்படத்துடன் தமிழகத்தில் வெளியிட முடியும். சிங்கையில் அதைப் போன்ற நூல்கள் வெளிவர வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பை முன்வைத்துத் தமிழில் நாவல் எழுத முடியும். அங்கு அதைப் போன்று செய்ய வாய்ப்பு குறைவே. சுத்திகரிக்கப்பட்ட கருத்துகளையே எழுத முடியும். ஆக, கற்பனை விரிவது எங்ஙனம்? கற்பனை + நிகழ் அரசியல் விமர்சனங்கள் அற்ற பண்படுத்தப்பட்ட பார்வையுடனேயே எழுத முடியும் எனும் போது இலக்கிய ஆழம் கிடைப்பதெப்படி?

கடல் அளவு கருத்துக்களஞ்சியம் இல்லை. சிறிய, சுத்திகரிக்கப்பட்ட குளத்தின் அளவே உள்ளது. குளமும் ஆழமில்லை, நீர் வரத்து கட்டுப்பாடிற்குள். சுத்தப்படுத்தப்பட்ட நீர். குளத்தில் உள்ள மீன்கள் சுவை குறைவாக இருக்கலாம். ஆனால் அவை மீன்கள் அன்று என்பது சரியா?

சிங்கை அரசு எப்போது விழிப்புடன் இருக்கின்றது. சமூக நல்லிணக்கம், மொழி, இன வேறுபாடுகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுதல், தீவிரவாதம் தலையெடுக்காமல் கண்காணிப்பு, மதங்களுக்கிடையே சமரசப் போக்கையே முன்னிறுத்துதல் என்று எந்தப் பிளவும் நிகழா வண்ணம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது. சுருக்கமாக ஒரு No-Nonsense அரசு. ஏனெனில் சமூக நல்லிணக்கம் தானாக நிகழந்ததன்று என்பதை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ள அரசு அந்நாட்டரசு. தமிழகத்தில் உள்ளதைப் போல எந்தக் குப்பையையும் எழுதலாம், எந்த இனத்தாரையும், மொழியாரையும் கேவலப்படுத்தலாம் என்பதற்கான சூழல் அங்கு இல்லை. இனங்களுக்கு இடையேயான பிளவுகளைப் பயன்படுத்தி ஒப்பாரிக் காவியம் படைக்க வழியில்லை. எனவே ‘உயர்ந்த’ இலக்கியம் உருவாக வழியில்லை ( உயர்ந்த என்றால் என்ன என்பது தனியாக ஒரு கட்டுரைக்கான பொருள்).

உதரணமாக: தமிழகத்தில் தீப்பொறி பறக்கப் பேசும் பேச்சாளர்கள் சிங்கை சென்றால் வழவழவென்று ‘ஒற்றுமை’, ‘நல்லிணக்கம்’ என்றே ஜல்லியடிக்கவே வேண்டும். அது தான் சிங்கை. மீண்டும் தமிழகம் வந்து ‘சுடுகாடாக மாறும், ஆயுதம் ஏந்துவோம்’ என்று முழக்கம் இடுவர். அது தான் தமிழகம்.

உண்மையை ஒப்புக்கொள்வோம். சிங்கப்பூரில் தமிழ் இல்லாமல் தினமும் வாழ்ந்துவிட முடியும். அன்றாட வாழ்க்கைக்குத் தமிழின் தேவை இல்லை. பெருவாரியான சிங்கைத் தமிழர்கள் சிங்லிஷ் கொண்டே வாழ்ந்துவிட முடியும். பள்ளிகளிலும் தமிழை -Functional Tamil – என்கிற அளவிலேயே கற்பிக்கிறார்கள். Higher Tamil உண்டு. அதை விருப்பப்பட்டு எடுத்துப் பயில வேண்டும். அத்துடன் தமிழுடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. இதைத் தவிர்க்கவும், தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கவும் சிங்கைத் தமிழர்களும் அரசும் முனைந்து இலக்கியத்திற்கான பரிசுகள், கோப்பைகள், ஊக்கத் தொகைகள் என்று வழங்கித் தமிழைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதுவே சிங்கையில் தமிழின் நிலை. இதில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலியோர் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. இதுவே நிதர்ஸனம்.

இன்னும் 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் தமிழில்  பேசுவார்களா என்கிற கேள்வி அம்மக்களின் நினைவுகளில் என்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அவர்கள் இருக்கிறார்களே தவிர, இலக்கியத்தை ஜெயகாந்தன் அளவிற்கு மேம்படுத்த அவர்கள் முயற்சிப்பதில்லை. அதற்கான சூழலும், தேவையும் அங்கு இல்லை.

இதெப்படி உனக்குத் தெரியும் என்று வினவலாம். சிங்கையில் 10 ஆண்டுகள் வசித்துள்ளேன். அங்குள்ள குறிப்பிடத்தக்க பெரியோருடன் பழகியுள்ளேன். அளந்தே பேசும் அப்பெரியோர் மனதில் ‘தமிழை வாழும் மொழியாக்குவதெப்படி? சிங்கையின் 100வது விடுதலை ஆண்டில் தமிழில் பேசுவோர் இருப்பரா? தமிழ் சிங்கையில் தொடர்ந்து திகழ வேறென்ன செய்ய வேண்டும்?’ என்ற எண்ணமே ஓடுகின்றது.

இந்த நிலையில் சிங்கப்பூரின் இலக்கியத் தரத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு. ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது சரியன்று.

பி.கு.: ‘நீ என்ன இலக்கியவாதியா? உன்னை யார் கேட்டார்கள்?’ என்போர் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லவும். ஜெயமோஹன் 2016ல் சிங்கை வந்திருந்த போது செய்திருந்த சில இலக்கிய விமர்சனங்கள் பற்றி அப்போது நான் எழுதியது இங்கே.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: