கேரள நம்பூதிரிகளின் சமூகத்தில் ‘ஸ்மார்த்த விசாரம்’ என்று ஒரு கொடுமை இருந்ததை ஜெயமோஹன் தளத்தில் வாசித்திருந்தேன்.
அதைப் பற்றிய கதை ஒன்றைப் ‘பரிணயம்’ (പരിണയം) என்று திரைப்படமாக எழுத்துள்ளார்கள். எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதை அந்தர்ஜனம் என்னும் நம்பூதிரிப் பெண்களின் காணச்சகிக்க முடியாத கண்றாவியான விதவை வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்துகிறது.
நம்பூதிரிக் கிழவருக்கு நான்காவது தாரமாக இளம் மோஹினி வாழ்க்கைப் படுகிறாள். நம்பூதிரி இறக்க, மோனிகா விதவையாகி, பின்னர் கருவுருகிறாள். கருவிற்குக் காரணம் யாரென்று தெரிந்துகொள்ள நடைபெறும் விசாரணைக்குப் பெயர் ‘ஸ்மார்த்த விசாரம்’.
பெண்ணைத் தனியரையில் அடைத்து ஒரு நம்பூதிரிக் கூட்டம் விசாரிக்கிறது. விசாரணை கொடுமை. அதனினும் கொடுமை, விசாரிக்கிறேன் பேர்வழி என்று வந்த கூட்டம், விருந்து, கேளிக்கை என்று நேரம் கழிப்பது. விசாரிக்கும் நம்பூதிரியாகத் தோன்றும் திலகன் நடிப்பு அபாரம். நெடுமுடி வேணு கேட்கவே வேண்டாம். விடுதலைக்கு முன்பான சமூகச் சூழல், நம்பூதிரி சமூகத்தில் ஏற்படும் ஆரம்ப கட்ட முற்போக்குச் சிந்தனை இயக்கம் பற்றிய குறிப்பும் திரைப்படத்தில் உள்ளது. பிராமணர்களுக்கான ‘ஊட்டுப்புரை’ சங்கதியும் தொட்டுக் காட்டப் படுகிறது.
கதையின் வசன அமைப்பில் சங்கிலித் தொடர் போன்ற ஒட்டு வெளிப்படை. குரியெடத்து தாத்ரியின் ஸ்மார்த்த விசாரம் என்னும் நிகழ்வு புகழ் பெற்றது. தாத்ரியின் தொடர்பில் இருந்தவர்கள் எண்ணில் அடங்காமல் போக, ராஜா அதனை நிறுத்த வேண்டி இருந்தது என்பது வரலாறு. அந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தோன்றும் விதமாக வசனம் உள்ளது. தாத்ரியின் விஷயத்தில் பல குற்றவாளிகள் வெளிவருவர். மோஹினி தனது கோழைக் காதலனை நிராகரித்து, இறுதியில் அவன் ஏற்ற பாத்திரங்களையே தனது கணவர்களாகக் கூறுவது தாத்ரியின் வழக்குடன் ஒப்பிட வழிகோலுகிறது.தனது காதலனை நிராகரிக்கும் மோஹினி, காந்தியடிகளின் கதராடை இயக்கத்தில் ஈடுபடுவது போல் திரைப்படம் நிறைவுறுகிறது.
பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் கதராடை இயக்கத்தின் பங்கு தொட்டுக் காட்டப்படுவது நிறைவாக உள்ளது. மனதை வருத்தும் நிகழ்வுகள், கொடுஞ்சொற்கள், பெண்களின் நிலை என்று பல தளங்களில் மனதைப் பாதிக்கும் திரைப்படம் ‘பரிணயம்’.