சோலியை முடித்தல்
கடைசியில் சோலியை முடித்தேவிட்டார்கள். ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.
பெற்றொரை இழந்த, இரண்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையைத் தத்தெடுக்க வழிகள் யாவை என்று நண்பர் கேட்டிருந்தார். அவருக்காக ஒரு சிறு பதிவை எழுதியிருந்தேன்.
‘அதெப்படி பிராமணன் பெண் குழந்தையைத் தத்தெடுக்கலாம். அதுவும் நீ இப்படி வழி சொல்லலாமா? சாஸ்திரம் என்னாவது? பெண்ணைத் தத்தெடுக்க வழியே இல்லையே? அவள் என்ன கோத்திரம் என்று எப்படி தெரிந்துகொள்வது? வர்ணம், ஜாதி என்னவென்று அறிந்துகொள்வது எப்படி? பிராமணக் குலத்தை வேரறுக்க வந்த கோடாரிக் காம்பே..’ என்பதாகச் சிலர் பொங்கி வழிந்தனர்.
இந்தப் பதிவு பரவலாகப் பகிரப்பட்டது. ஒரு கிறித்தவக் குழுவில் அந்தப் பதிவும் அதற்கான பதில்களும் பகிரப்பட்டுப் பேசப்பட்டன. மதம் மாற்ற உண்டான வழிகளை இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் அவ்விடத்தில் பேசிக்கொண்டனர். எனவே பதிவை நீக்கினேன்.
பின்னர் பொதுவாக இந்த விஷயத்தில் என்னதான் வழி? தற்போது கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்கு என்ன வழி உள்ளது? சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உள்ளனவா? இல்லையெனில், வேறு என்னதான் வழி? சாஸ்திர வல்லுநர்களும் மடாதீசர்களும் சேர்ந்து ஒரு முடிவைத் தெரிவியுங்கள் என்று பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தேன்.
பல நூறு பின்னூட்டங்கள், சில நூறு பகிரல்கள் என்று துவங்கிய பரவல், அச்சில் ஏற முடியாத சொற்களைக் கொண்டு விமர்சிக்கப்படது. தனிமனிதத் தாக்குதல்கள், ஜாதி வெறி, இடையிடையே திக சீண்டல்கள் என்று சென்றுகொண்டே இருந்தது. நல்ல எண்ணத்தில் கேட்ட பேள்விக்குக் கிடைத்த பரிசு இவை.
எழுத்தாளர்கள் கொஞ்சம் கொந்தளிப்பிலேயே இருப்பார்கள். ஆனால், கொந்தளிப்பில்லாமல் சில கேள்விகளுக்குப் பதிலும் அளித்து வந்தேன். (இதில் இருந்தே நான் எழுத்தாளன் அல்லன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்). நல்ல பலன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில். ஆனால் கிட்டியதோ வசவுகள்.
பின்னர் யாரோ சிலர் ஃபேஸ்புக்கிடம் புகாரளிக்க, என் ப்ரொஃபைல் பக்கம் முடக்கம்.
தற்போது சுதந்திரப் பறவை.
சுபம்.
