கம்பன் பார்வைகள் – கதையின் தரிசனம்

ஒரு நூல் எழுதும் போது, அதன் தரிசனம், பார்வை, அது அளிக்கும் இலக்கு யாது என்பதை அதை எழுதுபவன் உணர்ந்திருக்க வேண்டும். கதையின் ஓட்டத்தில் அதை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். நாவல் வடிவில் இருந்தாலும், கிளைக்கதைகள் இருப்பினும், முதன்மைக் கதையின் தரிசனம் கெடாமல் இருக்க வேண்டும்.

அனேகமாக, அந்த மைய தரிசனம் கதையின் முதலில் வலியுறுத்தப்பட்டிருக்கும். ஏதோ ஒரு நிகழ்வின் மூலமாகவோ, அந்த மைய தரிசனத்திற்கு முரணான பார்வைகளின் மூலமாகவோ சொல்லப்பட்டு, அதன் பின்னர் அத்தரிசனம் நோக்கிய தள்ளல் இருந்திருக்கும்.

கம்பராமாயணத்தில் தன் கதையின் மைய ஓட்டத்தைக் கம்பன் பாலகண்டம் ஆற்றுப் படலத்தின் முதலாவது பாடலில் சொல்கிறான்.

பாடல் இதோ :

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

13, ஆற்றுப்படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்

மனிதர்கள் தவறு செய்வதற்கு ஐம்புலன்கள் காரணம். ஐம்புலங்கள் வழியாக ஏற்படும் நுகர்ச்சி, அதீத ஆசைகள் என்பனவால் தவறுகள் நிகழ்கின்றன. ஆனால், கோசல நாட்டில் ஓடும் சரயு நதிக்கரையில் அவ்வாறு நிகழ்வதில்லையாம்.

மனிதர்களின் ஐம்புல நுகர்ச்சி வழியான குற்ற எண்ணங்கள் என்னும் அம்புகள் இல்லாததால் கோசல நாட்டில் வாழ்ந்த, குற்றமற்றவர்களும், அணிகலன்களை அணிந்தவர்களுமான பெண்கள் மீதான தவறான பார்வை இல்லாதவர்களாக ஆண்கள் வாழ்ந்தனர். அவ்வகையான எண்ணங்கள் யார்க்குமே இல்லை என்பதால், கோசல நாடே தடம் புரண்டு போகாத நிலையில் இருந்தது.

மக்களின் எண்ணங்கள் சரியாக இருக்குமெனில், நாட்டின் போக்கும் சரியாகவே இருக்கும்.

மக்களின் எண்ணங்கள் சரியாக இருந்ததெப்படி ?

பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்ட இராமன் பிறக்கப்போகிற நாடாக இருப்பதால், கோசல நாட்டின் நிலை ‘பூசலம்பு நெறியின் புறம் செலாக் கோசலம்’ என்கிறார் கம்பர். தசரதனுக்குப் பல மனைவியர் இருந்தனர் எனினும், கம்பன் இராமனையே தன் உதாரண புருஷனாகக் கொண்டு இராமாவதாரம் இயற்றினான் என்பதால், இராமனின் இரு-மாந்தரை-நோக்காக் கொள்கை கொண்டே இந்தப் பாடல் இயற்றினான் என்று கொள்ள வாய்ப்புள்ளது.

‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பதை ஒப்பு நோக்கலாம்.

ஐம்புலன்கள் வழியாகவே துன்பம், தீய எண்ணங்கள் தோன்றும், அவற்றில் இருந்து என்னைக் காப்பாற்று என்று திருமங்கையாழ்வாரும் சொல்கிறார்.

‘உடனின்று ஐவர் என்னுள் புகுந்து, ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்’,

‘பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்’

அவ்வப்போது கம்பனின் மற்ற பாடல்களையும் அனுபவிப்போம்.

-ஆமருவி

Leave a comment