கம்பன் பார்வைகள் – மலை, மழை கடவுளர்கள்

போங்க சார். ஆத்மாங்கறீங்க. உயிர் உள்ளதுக்கு மட்டும் இல்ல, உயிர் இல்லாததுக்கும் ஆத்மா இருக்குன்னு நம்பணும்கறீங்க. கொஞ்சம் கூட பகுத்தறிவா இல்லையே..

விசிட்டாத்வைதம் சொல்லும் ஜீவாத்ம, பரமாத்ம, ஜடப்பொருள் ஆகிய மூன்றும் உண்மைகளே என்பதை ஒப்புக்கொள்ள சிறிது பண்பாட்டுப் பயிற்சி தேவை. கம்பன் வழியில் முயன்று பார்ப்போம். 

கோசல நாட்டில் மழை வளம் எப்படி உள்ளது என்பதைக் கம்பன் சொல்வது : 

பம்பி மேகம் பரந்தது, பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;

அம்பின் ஆற்றதும் என்று அகன்குன்றின்மேல்

இம்பர் வாரி எழுந்தது போன்றதே

சிவபெருமானுக்கு மாமன் முறை கொண்ட இமயமலை, கதிரவனின் வெப்பக் கதிர்களால் அனல் போல் ஆனது என்று மேகங்கள் கருதின. எனவே இமயமலையைக் குளிர்விக்க எண்ணி, மலையின் மீது கடலைப் போல் விரிந்து நின்றன என்கிறான் கம்பன். 

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை. 

கங்கையைத் தலையில் கொண்டவன் சிவபெருமான். ஆகவே இமயமலை சிவபெருமானின் மாமனார் ( மாமன்) நிலை பெறுகிறது. 

மனைவி மீது உள்ள மோகத்தால், மருமகன் மாமனைத் தாங்கிப் பிடிப்பது என்கிற உலகியல் நிலையின் படி பார்த்தால், இமயமலை சூரியனின் வெப்பத்தால் உஷ்ணம் அடைவதைக் கண்ட மருமகன் சிவபெருமான், உடனே அதைத் தணிக்க எண்ணி இமய மலை மீது வெண்மேகங்கள் உருவில் கடல் போல் விரிந்தான் என்று வியாக்கியானம் விரிகிறது. 

உடல் முழுதும் வெண்ணீறு அணிந்தவன் சிவபெருமான். ஆகவே வெண்மேகங்கள் சிவனைக் குறிக்கின்றன. ஆனால், வெண்மேகங்களால் குளிர்விக்க இயலாது. அவை கரிய நிறம் உடையனவாக வேண்டும். அதாவது நீர் கொண்டனவாக இருக்க வேண்டும். நீர் உண்ட மேகங்கள்  கரிய நிறம் கொண்டு,  திருமாலின் நிறத்தை  ஒத்து நிற்கும். ‘கார் மேனிச் செங்கண்’ ,’ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ – ஆண்டாள் வரிகள் நினைவிற்கு வரலாம்.

அருள் மற்றும் வள்ளல் தன்மை மழை வடிவில் காட்டப்படுகிறது. கருமேகம் மழையாகப் பொழிந்தபின் இல்லாமல் ஆகும். தனக்கென நீரை வைத்துக் கொள்ளாமல் முழுவதும் கொட்டித் தீர்த்துவிடும். நாராயணன் அவ்வகையானவன் என்பதைக் குறிக்கும் விதமாக இருப்பதாக வியாக்கியானம்.

மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பதை ஆண்டாள் ‘ வாழ உலகினில் பெய்திடாய்’ என்று சொல்கிறாள். உலகம் உய்யுமாறு மழை வேண்டும் என்கிறாள் ‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரத்தில். 

அழிக்கும் கடவுள் சிவ பெருமான். அவன் மழையாகப் பொழியாத வெண்மேகமாக உள்ளான். காக்கும் கடவுள் திருமால். அவன் கரிய மேகமாகக் காட்டப்படுகிறான். 

ஆனால், மேகங்கள் ஒன்றே. அவை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உருவம் கொள்கின்றன. வெண்மேகம் கரிய மேகமாக ஆகிறது. அவற்றைப் போன்றே, பரப்பிரும்மம் சிவபெருமான் உருவில் அழித்தல் தொழிலையும், திருமால் உருவில் காத்தல் தொழிலையும் செய்கின்றது. 

‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’ என்னும் ஆதி வாக்கியம் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்னும் ஆழ்வார் பாசுரத்தையும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கின் சுவை பெருகும். 

முதல் வரியை மீண்டும் வாசியுங்கள்.

Leave a comment