திருச்சி கல்யாணராமன் – கண்டனம்

தாம்பிராஸ் மீது எனக்கு என்றும் மரியாதை இருந்ததில்லை. நான் அதன் உறுப்பினன் அல்லன். 

அந்தச் சங்கம் நடத்திய கூட்டம் ஒன்றில், உபன்யாசகர் கல்யாணராமன் நாடார்கள் குறித்துப் பேசிய ஒரு நிமிடக் காணொளியைக் கண்டேன். அபத்தம். 

உபன்யாசம் செய்பவர் ஆசாரிய பீடத்தில் இருந்து பேசுகிறார். நொடி நேர ஹாஸ்யம் என்கிற அளவில் கூட அந்தப் பீடம் அவமதிக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உபன்யாசகரது கடமை. 

அப்படியிருக்க, அப்பட்டமான அழுச்சாட்டியத்தை அந்த உபன்யாசகர் பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

பிராம்மணத்துவம் ஒரு உயர்ந்த நிலை. அதை அடைய முயல வேண்டும். பட்டா எழுதிக் கொடுப்பது போல் யாரும் உயர்ந்த பிராம்மணனாகப் பிறப்பதில்லை. இது அடிப்படை அறிவு. 

அந்த உபன்யாசகரை ஆன்மீக விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பதும், அவரது சிஷ்யர்கள் அவரைப் பகிஷ்காரம் செய்வதும் அவசியம். 

அவருக்கு வேண்டியவர்கள் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பின்வரும் பாசுரங்களை அவரிடம் வாசிக்கக் கொடுக்கலாம் :

அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே 

(‘நான்கு வேதங்களை ஓதிய அந்தணர்களில் தலைவராக இருப்பினும், இழி நிலையில் உள்ள உங்களைப் பழித்து ஒரு சொல் சொன்னாலும் அந்த அந்தணரே புலையராக ஆவார் என்று சொன்னீரே அரங்க மாநகர் அப்பனே’)

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே

(‘சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை’)

–ஆமருவி
12-02-2023

Leave a comment