அறம் நிலையாத் துறை ஒழிய வேண்டியது ஏன் ?

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை இந்து அறங்கெட்ட துறையில் சில ஊழியர்கள் நாசமாகப் போவார்கள் என்று சாபம் இட்டு எழுதியிருந்தேன். பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இன்று எழுதுகிறேன்.

அறங்கெட்ட துறை ஒழிய வேண்டும் என்பது ஏனோ இன்று நேற்று கொடுக்கப்படும் சாபம் அன்று. பல கோவில்களில் துறை செயல்படும் விதம் பற்றி அறிந்தவன் என்பதாலும், இரண்டு கோவில்களின் குடமுழுக்கு, திருத்தேர்ப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் பயணித்தவன் என்பதாலும் பல விஷயங்கள் நேரடியாகத் தெரியும்.

முதல் பத்தியில் உள்ள கோபம் குறித்து :

1000 ஆண்டுகால, சிறிய கோவில் அழிந்த நிலையில் இருந்தது. திருப்பணி செய்ய வேண்டும் என்று ஒரு குடும்பம் 40 ஆண்டுகளாக முயன்றது. ஆரம்பித்த பெரியவர் மறைந்தார். அவரது தம்பி மேற்கொண்டு முயன்றார். தொல்லியல், அ.நி.து. என்று அலைந்து, அவரும் மறைந்தார். கோவில் அப்படியே இருந்தது.

அவரது மகன் ராமு. தன் அப்பாவும், பெரியப்பாவும் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்தார். 6 ஆண்டுகள் முயற்சி. ஒரு வழியாக அ.நி.து. ஒப்புதல் அளித்தது.

பெரும் சிரமத்துடன் பணிகளைத் துவங்கிய அவர், பாலாலயம் செய்ய உத்தரவு கேட்டார். அ நி.து. தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

கோவில் உள்ள மாவட்ட அ.நி.து. ஒப்புதல் அளித்தது. மேற்கொண்டு உத்தரவு வழங்க சென்னைக்கு அனுப்பியது. சென்னைத் துறையின் உறக்கம் கலையவில்லை. மூல மூர்த்தியை நகர்த்தி வைக்க வேண்டும் என்பதால் சென்னை உத்தரவு தேவை.

ராமு பாலாலய வேலைகளுக்கு நாள் குறித்தார். சென்னை அலுவலகத்துக்கு நடக்கத் தொடங்கினார்.

நாள் நெருங்கிவிட்டது. உத்தரவு வரவில்லை.

ராமு பாலாலய ஏற்பாடுகளுக்காக ஊருக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார். முழு நேர வேலையில் இருப்பவர் ராமு.

நாளை பாலாலயம். இன்று பந்தல் முதற்கொண்டு போட்டாகிவிட்டது. ஆட்கள் வந்துவிட்டனர். பாலாலயத்துக்கான பொருட்கள் வந்து இறங்கிவிட்டன.

ராமு சென்னையில், அ.நி.து. அலுவலகத்தில்.

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கமிஷனர் உத்தரவு வேண்டும், உங்கள் கடிதம் வந்து 15 நாட்கள் தான் ஆனது, எனவே மேலும் அவகாசம் தேவை என்று அலுவலர்கள் முகத்தில் அறைவது போல் சொல்கின்றனர்.

மாலை 5:00 மணி. உத்தரவு இல்லை.

மாலை 6:30. மாவட்ட அ.நி.து. அதிகாரியைத் தொடர்பு கொண்டு கெஞ்சுகிறார் ராமு. ‘நாளைக்குக் கார்த்தால ஊர்ல பாலாலயம். எப்படியாவது உத்தரவு வாங்கிக் கொடுங்க’ என்கிறார்.

மாவட்ட அதிகாரியும் சென்னையைத் தொடர்பு கொள்கிறார்.

மேலும் அவமானங்கள், இழுத்தடிப்புகள் என்று சுமார் எட்டரை மணி வரை போகிறது. இடையில் ராமு என்னிடம் உதவி கேட்க, நான் சில அலுவலர்களைத் தொடர்புகொண்டேன். பலனில்லை.

இரவு சுமார் 9:00 மனிக்கு ‘அனுமதி இல்லை’ என்று அறிவிக்கிறார்கள். பாலாலயம் நின்றுபோகிறது.

அந்த நிலையில் தான் நான் ‘அவரகள் நாசமாகப் போவார்கள்’ என்று எழுதியிருந்தேன்.

ராமு மீண்டும் அனுமதி கோருகிறார். ஒரு மாத அவகாசத்தில் அனுமதி கிடைக்கிறது. 40 நாட்கள் கழித்து பாலாலயம் நடக்கிறது.

வாங்கும் சம்பளத்திற்குக் கூட வேலை செய்யாத அரசு அலுவலர்களுக்கு நல்லது எப்படி நடக்கும் ? இவர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளுக்கு என்ன நல்லது நடந்துவிடும் ? அவர்கள் மேல் உள்ள அரசியல்வாதிகளுக்கு ?

ஆகவே, இந்து அறம் நிலையாத் துறை கோவில்களில் இருந்து ஒழிய வேண்டும் என்பது சாபம் மட்டுமல்ல, நிதர்சனத் தேவையும் கூட. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ‘ஆடிட்’ வேலையை மட்டும் செய்யட்டும்.

மேலும் பேசுவோம்.

–ஆமருவி

19-02-2023

ராமு – பெயர் மாற்றம்.

One thought on “அறம் நிலையாத் துறை ஒழிய வேண்டியது ஏன் ?

Leave a comment