நடமாடும் காந்தியுடன் ஓர் உரையாடல் – கப்ஸா டைம்ஸ் – 1

கப்ஸா டைம்ஸ் நாளிதழில் இன்னிக்கி கமல் ஸார் நம்மோட இருக்கார்.  அவர்கிட்ட நம்ம சந்தேகங்களக் கேக்கலாம். 

கே: கடைசில அங்க போய் சேர்ந்துட்டீங்களே..

ப: அங்க, இங்க, எல்லாம் ஒண்ணு தான். அங்கேருந்து பார்த்தா, இங்க அங்க மாதிரி தெரியும். சரி, இங்கேர்ந்து பார்க்கலாம்னு பார்த்தா, அங்க இங்க மாதிரி தெரியும். ஆனா, அங்க, இங்க எல்லாம் திங்க தான்னு புரியும் போது நமக்குள்ள ஏற்படற புரிதல், அதனை அவதானிப்பதால் கிடைக்கும் அற உணர்வு இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தா மட்டுமே தெரியும். கேள்வி கேக்கறது சுலபம். பதில் சொல்றது கஷ்டம். ஆனா, கஷ்டமான கேள்வி கேட்டு, சுலபமான பதில் பெறலாம்னு நினைச்சா, அதைவிடக் கஷ்டமான சுலபம் வேறொண்ணும் இருக்க முடியாதுன்னு நான் எம்.ஜி.ஆர். மடியில ஏறி விளையாடினப்ப அவர் சொன்னார். அது இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு.  

கே: நான் இன்னும் கேள்வி கேக்கவே துவங்கல்லையே..

ப: கேள்வி கேட்டவுடன் மட்டுமே பதில் தர வேண்டும் என்பது ஒற்றை இந்துத்துவ மன நிலைன்னு நண்பரும் எழுத்தாளருமான ஜெயமோகன் சொல்லியிருக்கறத நீங்க படிச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கல்ல, ஆனால் அப்பிடித்தான் நடந்திருக்கும்னு நம்ப வேண்டிய நிலைல இன்னிக்கி நம்ம நாடு இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இதையே ஹென்றி டேவிட் துரோ இப்பிடிச் சொல்றார்..

கே: அது போகட்டுங்க. யாரோ என்னவோ சொல்லிட்டுப் போகட்டும். நீங்க என்ன சொல்றீங்க ?

ப: எதைப் பத்தி ?

கே: அதான், நான் கேள்வி கேக்கறதுக்குள்ளயே நீங்க பதில் சொல்ல ஆரம்பிச்சா எனக்கு கேள்வியே மறந்து போகுது. அதால..

ப: அப்ப, கேள்வி கேட்ட உடனே பதில் சொல்லணும்னு எதிர்பார்ப்பீங்க போல இருக்கே. காந்தி சொன்னதக் கேட்டு காந்தி நடக்கணும்னு சொல்றவங்க கூட்டத்தோட எனக்கு எந்த ஒட்டோ உறவோ கிடையாதுன்னு வெண்முரசு விழாவிலயே நான் சொல்லிட்டேன்னு ராஹுல் காந்தி சொன்னத நீங்க மறந்திருக்கலாம். ஆனா, நான் மறக்கற மாதிரியான சூழ்நிலைல இல்லேங்கறத எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல சொல்லியிருப்பார்னு தெரியாதா உங்களுக்கு ?

கே: சரி, தெரியாம கேட்டுட்டேன். முகநூல்னு சொல்லாம ஃபேஸ்புக்னு சொல்றீங்களே, இதுல குறீயீடு எதாவது..

ப: சபாஷ். எனக்கு நூல் பிடிக்காதுன்னு உலகத் தமிழர்களுக்குக் குறியீடு மூலமா சொல்றதுக்கு வாய்ப்பு குடுத்தீங்க. அதுக்கு நன்றி. நான் எந்த நூல் பத்தி சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். ஒருத்தர் மட்டுமே போட்டுக்கலாம்னு இருக்கற நூல் எனக்குப் பிடிக்கறதில்ல. அதால நூல் எல்லாமே பிடிக்காதுன்னு சொல்ற அளவுக்கு எனக்குப் பரிணாமப் பின்னடைவு ஏற்படாம இருக்கறதுக்கு எங்கப்பா சிவாஜிதான் காரணம்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். 

கே: மன்னிச்சுக்குங்க. காந்தி பத்தி சொல்ல ஆரம்பிச்சு நூல்ல போய் முடிஞ்சுடுச்சு. காந்தி..

ப: காந்திக்கு நூலுக்கும் சம்பந்தம் இருக்கே. நானே பம்மல் கே சம்பந்தம்னு படத்துல நடிச்சிருக்கேனே. ஆனா, அதே நேரத்துல காந்தி பத்தியும் ஹே ராம் படம் எடுத்து, இந்தியாவோட முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான்னு சொல்ல வர்றதுக்கு முன்னாடி, பெங்காலி, மராத்தி, ஹிந்தி, தமிழ், இங்கிலீஷ்னு படம் முழுக்க பேசி சொல்ல வந்தத சொல்லாம விட்டுட்டேன்னு எனக்கு வருத்தம் உண்டுங்கறது காந்தியோட கொள்ளுப்பேரன் கோபாலகிருஷ்ண காந்திக்குத் தெரியும்னு எத்தனை பேருக்குத் தெரியும்கறதப்பத்தி நான் கவலைப்படமாட்டேன்னு நீங்க நினைக்காம இருக்கறது தான் காந்தி காட்டின வழின்னு எனக்குத் தெரியும்.

கே: கொஞ்ச நேரமா எதோ பேசறோம்னு தெரியுது. ஆனா, என்ன கேள்வி, என்ன பதில், எந்தக் கேள்விக்கு எந்த பதில், கேள்வி யார் கேக்கறாங்க, பதில் யார் சொல்றாங்கன்னு புரியறதுல ஒரு குழப்பம் இருக்கும் போல தெரியுதுன்னு தோணுது.. சே, உங்கள மாதிரியே பேசத் துவங்கிட்டேன்…

ப: ஆங். அதுதான் காந்தியோட மகிமை. காந்தி பத்திப் பேசறவங்க எல்லாருமே காந்தி தான். காந்தி கையெழுத்து புரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, காந்தி பத்தி பேசறவங்க என்ன பேசறாங்கன்ன்னு கேக்கறவங்களுக்கும் புரியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க, பேசறவங்களுக்கும் புரியாதுன்னு எனக்குப் புரிஞ்சதாலதான், நானுமே கூட காந்திதான்னு நினைக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்க இடம் இருக்கற மாதிரி இந்த நாட்டு ஒற்றை இந்துத்துவா வழில பயணப்பட யத்தனிக்குதுன்னு நீங்க நினைக்கலாம். 

கே: சாரிங்க. நான் அப்படியெல்லாம் புரியாம நினைக்கறதில்லை. ஆனா, அடுத்த கேள்வி என்ன கேக்கறதுன்னு தெரியல..

ப: இதுக்கு என்ன பதில் சொல்லச் சொல்றீங்க? பதிலே இல்லாத கேள்விகள் இந்த நாட்டுல இருக்குங்கற சமூகக் கோவம் எனக்கு உண்டுங்கற மாதிரி, கேள்வியே இல்லாத பதில்களும் கூட இந்தச் சமூகத்துல உலவி வருதுன்னு நினைக்கவேண்டிய காலகட்டம் வந்துட்டதேன்னுதான் பெரியார் வேதனைப்பட்டார்னு எனக்குத் தெரியும். ஆனா, அதே வேதனை காந்தியும் பட்டார்னு உங்களுக்குத் தெரியுமா ? 

கே: ஒரு டீ குடிச்சுட்டு வந்துடறேன். தலையெல்லாம் கிர்ருனு சுத்துது..

ப: குடிப்பினும் குடியாத் தகையவே குடியால் குடிக்கப்படாத குடின்னு மலையாளத்துல எழுத்தச்சன் எழுதி வெச்சிருக்காருன்னு நேத்துதேன் பினரயி விஜயன் சொன்னார். எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க. ஆனா, அந்த டீ குடிக்கறேன்னீங்களே, அதுக்குப் பின்னால இருக்கற மனிதக் கழிவிரகத்தின் ஒட்டுமொத்த வினியோகஸ்த உரிமை யார் கிட்ட இருக்குன்னு நினைச்சுப் பார்த்துட்டு, பின்னால டீ குடிச்சுட்டு வாங்க.

கே: வேணாம் கமல் சார். டீயே வேணாம். அடுத்த கேள்வி.. ஈரோடு இடைத் தேர்தல்..

ப: என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். நீங்க ஏன் ஷாமியானால இருந்தீங்கன்னு தானே ? அதான் இல்ல. ஈரோடு எனக்கு தாத்தா வீடு இல்லியா ? எங்க பகலவன் வீட்டுத் திண்ணை இருக்க, ஷாமியானா நமக்கு எடுபடுமா ? அதுவும் நாம யாருக்காக போனோம் ? தாத்தாவோட பேரன் எனக்கு அண்ணன். அந்த அண்ணனோட தம்பியா அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாதா என்ன ? அதான் போனேன். இதப் பொறுக்காத ஃபாசிஸ ஒற்றைப்படை ஆட்சியாளர்கள் இருக்கற வரைக்கும் நான் நூல் எதிரியாகவே தான் இருப்பேன்னு மீண்டும் உங்கள் வழியா அறிவிக்க வைக்காதீங்கன்னு கேட்டுக்கறேன். 

கே: நம்ம கட்சி என்ன ஆச்சு ? எங்க இருக்கு ?

ப: காந்தி எந்தக் கட்சியோ அதுவே நம்ம கட்சி. ஏன்னா, நானே காந்தி தானே ? நீங்க கூட காந்தி தான். இந்த நாட்டுல எல்லாருமே காந்தி தான். ஆனா ஒரே ஒரு கோட்சே தான். அது யாருன்னு உங்களுக்கும் தெரியும்னு எனக்குத் தெரியும். காந்திக் கட்சி நம்ம கட்சி. 

கே: ஆனா, காந்திக் கட்சி காங்கிரஸ் கட்சி இல்லையா ? மக்கள் நீதி மய்யம் என்ன ஆச்சு கமல் சார் ?

ப : உங்க கேள்வியில விஷமம் இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்க. நீதி மய்யம் போய் அதுக்கு சுய்யன், அதிர்ஸம், எள்ளுருண்டை எல்லாம் பண்ணி அனுப்பி வெச்சாச்சுன்னு உங்களுக்குத் தெரியாத மாதிரியே கேக்கறீங்க பாருங்க, அது தான் ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு அரசியல்ல எங்களோட நிலைப்பாடுன்னு தெரியாத வரைக்கும் காந்தியார் இருந்த தேசத்துகு நல்லதில்லை. புரிஞ்சுதா ? 

கே: ஆஹா. பிரமாதமா புரிஞ்சுட்டுது. அடுத்த உங்க பயணம் எங்க ?

ப: அடுத்து, காந்தி அழைச்சிருக்கார். பாரத் சோடோ யாத்ரான்னு வெளி நாடுகள்ல இருக்கற இந்தியர்கள் மத்தியில நடை பயணம் போகலாம்னு. 

கே: அப்ப, காந்தி காந்தின்னு சொன்னதெல்லாம் ராஹுல் காந்தியத் தானா ?

ப: நான் தான் முன்னாலேயே சொன்னேனே. . நாம எல்லாருமே காந்தி தான். அந்த ஒரு கோட்சேவத் தவிர எல்லாருமே காந்தி தான். அதுனால யாரோ ஒரு காந்தி கூட்ட்பிட்ட உடனே போயிடறேன். ஒரு ரகசியம் சொல்றேன். கூப்பிட்ட உடனே இல்ல. கூப்பிட மாட்டாங்களான்னு போயிருவேன். ஈரோடுக்குப் போகல்லியா ? கூப்பிட்டா போனேன் ?

கே: அப்ப, மக்கள் நீதி மய்யம் ?

ப: இல்லாத கடவுள நம்பாறதில்லைன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, மக்கள் நீதி மய்யம் இல்லைன்னு அர்த்தமில்ல. இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன். 

கே: அதுக்கு என்ன அர்த்தம் ?

ப: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது. 

கே: என்னது ? மக்கள் நீதி மய்யம் பழசாயிருச்சா ?

ப: ஹிந்து மதம் கூடதான் பழசு. ஆனா நீங்க இன்னும் இந்து மதத்த வெச்சுக்கலியா ? அதுபோலதான், மய்யம் பழசானாலும் புதுசானாலும் அது எப்பவும் இருக்கும். இதயத்துல அதுக்கு எடம் உண்டு.

கே: இதயத்துல எடமா ? யாரோட இதயத்துல ? 

ப: காந்தியோட இதயத்துல. ஏன்னா நீங்க, நான் எல்லாருமே காந்தி தானே ? 

கே: எத்தனை நாளா இப்பிடி ஆகியிருச்சு ? ஏன் இப்பிடி ஒரு மாதிரி பேசறீங்க ?

ப: ஒரு நிமிஷம். கெஜ்ரிவால் அழைக்கறார். சொல்லுங்க ஜி. வந்துடறேன். காந்தி குல்லா இருந்தா போதும். அதப் போட்டுக்கிட்டு எதப் பேசினாலும் எடுபடும். நம்ம ஹிந்து ராம் கூட வருவாரு. அவரு குல்லா போட்டுக்க மாட்டார். வாசகர்களுக்கு மட்டும் தான் போடுவார். நாங்க ரெண்டு பேரும் வந்து உங்க கட்சி கூட்டத்த நடத்திக் கொடுக்கறோம். பாவம் சிசோடியா வேற உள்ள இருக்காரு. உங்ககிட்ட கட்சி இருக்கு. எங்க கட்சில நான் மட்டும் இருக்கேன். பொருத்தம் நல்லா வருது. எதுக்கும் வைகோவையும் கேட்டுப் பார்க்கறேன்.. 

கே: கெஜ்ரிவால் பேசினாரா ? என்ன விஷயம் ?

ப: அவர் கட்சில எல்லாரும் உள்ள போயிட்டாங்களாம். எங்க கட்சில எல்லாரும் வெளில போயிட்டாங்க. வாங்களேன், காத்தாட நடந்துட்டு வரலாம்னு சொன்னாரு. அதான் போயிட்டு வரலாம்னு பார்க்கறேன்.

கே: அப்ப பாரத் சோடோ யாத்ரா ?

ப: காந்தி கூப்பிட்டா நான் போயிருவேன். இப்ப கெஜ்ரிவால் எனக்கு காந்தி. யார் மூலமா எனக்கு காந்தி வருதோ, அவங்கள்ளாம் எனக்குக் காந்தி தான். இப்ப நீங்க எனக்கு அம்பது காந்தி கொடுத்தீங்கன்னா, நீங்களும் எனக்கு காந்தி தான். ஹா ஹா..  

கே: ரொம்ப தேங்க்ஸ்ங்க. நேரம் ஆயிட்டுது. கடைசியா ஒரே ஒரு கேள்வி. உங்க தேர்தல் செலவுக் கணக்கு என்ன ஆச்சுது ? 2021 தேர்தல் முடிஞ்ச உடனே முதல்வரப் பார்த்தீங்களே, கணக்கு வழக்கு எல்லாம் சரியா சொன்னீங்களா ?

ப: கணக்கா ? அதுவும் காந்தி தான். காந்தி பத்தின கணக்கு தானே ? அதான் காந்தின்னு சொன்னேன். காந்தி கணக்கு. புரிஞ்சுதா?   

கே: ரொம்ப சாரி சார். தலை சுத்துது. பக்கத்துல எதாவது நல்ல ஆஸ்பத்திரி இருக்கா ?

ப: கீழ்ப்பாக்கத்துக்குப் போகணும்னா கொஞ்ச தூரம் போகணும். முடியல்லேன்னா பக்கத்துல இங்க எங்கியோதான் மய்யம் கட்சி ஆஃபீஸ் இருக்கு. ஒரு தரம் போய்ப் பாருங்களேன். நானே போய் ரொம்ப நாளாச்சு. அங்க யாராச்சு இருந்தா வந்து பார்க்கச் சொல்லுங்க.

அடுத்த முறை, இன்னொரு பிரபலத்துடன் நமது கப்ஸா டைம்ஸ் நாழிதழ் நேரகாணலில் சந்திப்போம்.

—ஆமருவி

Leave a comment