ஜடேரி – அனுபவங்கள்

‘நற்போதுபோக்கு’ என்று வைஷ்ணவர்கள் சொல்வதுண்டு. காலக்ஷேபம் கேட்பது, பெருமாளைச் சேவிப்பது, பாகவத கைங்கர்யம் என்று பலதும் இதில் அடங்கும். அவ்வகையில் நேற்று ஜடேரி சென்று வந்தோம்.

நண்பர்கள் வீரராகவன் சம்பத் மற்றும் பிரசன்னாவுடன் ‘ஆடியாடி அகம் கரைந்து’ என்னுமாபோலே ஒருவழியாக ஜடேரி சென்று சேர்ந்தோம். நுழைந்தவுடன் அன்புப் பிரவாகமாக ஊர் மக்கள் சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணர் பஜனை மடத்தில் அமர்ந்து பேசத்துவங்கினோம்.

‘இவர் தான் ஜடேரி பத்தி முதல்ல எழுதினார். அதுக்கப்புறம் நான் வந்தேன், இன்னும் பலர் வந்தாங்க’ என்று மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஊர் மக்கள் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்தனர். ‘உங்க மூலமா பெருமாள் எங்களுக்கு உதவினார்’ என்று கள்ளம் கபடம் அற்ற சகோதரர்கள் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஜடேரி பற்றிய அடியேனின் கட்டுரைக்குப் பின் ஹிந்து நாளிதழ், புதிய தலைமுறை என்று பலரும் வந்து பேட்டி கண்டு சென்றுள்ளனர் என்றார் பெரியவர் தெய்வசிகாமணி. நல்ல எண்ணத்தில், மன வருத்தத்துடன் எழுதியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது பெருமாள் அனுக்ரஹம் தான். நாம் வெறும் கருவி தான். செய்வது யாரோ.

திருமண் கல்
ஒரு டிராக்டர் மண் – பெரியவர் தெய்வசிகாமணி

பெரியவர் தெய்வசிகாமணி ‘நான் இன்னிக்கி நல்லா இருக்கறதுக்கு இந்த திருமண், எம்பெருமான் தான் காரணம்’ என்றார்.

IMG_1488
செக்கில் பொடியாகும் திருமண் கல்

பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமண் செய்முறையைக் காட்டினார்.

IMG_1493
குழியில் திருமண் வடிகட்டுதல்

ஒரு டிராக்டர் மண் ரூ.4000. அருகில் உள்ள ஊரில் இருந்து எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த மண்ணையும் கல்லையும் உடைத்து, செக்கில் வைத்துப் பொடியாக்குகின்றனர். அந்தப் பொடியை மண்ணில் உள்ள குழியில் கொட்டி, 24 லிட்டர் நீர் ஊற்றிக் கலக்குகின்றனர்.

IMG_1491
பல முறை சுத்திகரிப்பு

பின்னர் அழுக்குகளை நீக்க 2-3 முறைகள் வடிகட்ட வேண்டி இன்னொரு குழியில் இறைக்கின்றனர். முதுகு ஒடியும் வேலை. ஓரிரு நாட்கள் வடியவிட்டு, ஈர மண்ணை எடுத்துக் காயவைத்து, பின்னர் சிறிய கட்டை கொண்டு திருமண் கட்டிகளை உருவாக்குகின்றனர். இதில் செயற்கை விஷயங்கள் எதுவும் இல்லை.

IMG_1494
ஈரத் திருமண் , இறுதி வடிவம்

வெளி இடங்களில் உள்ளது போல் ரசாயனக் கலவைகள் எதுவும் சேர்ப்பதில்லை. எனவே திருமண் பளீரென்று வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையான திருமண் பளீர் வெள்ளை நிறத்ததன்று.

இம்மாதிரியாக உருவாக்கிய திருமண்ணை வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். போக்குவரத்தில் இவை உடைந்து போகின்றன. ஆகவே, ஸ்ரீசூர்ணம், அதற்கான ஓலைப்பெட்டி என்று அனைத்தையுமே ஜடேரியிலேயே உற்பத்தி செய்தால் விற்பதற்கும், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கும் வசதியாக இருக்கும்.

திருமண் தயாரிப்பில் எவ்விடங்களில் இயந்திரங்களைப் பயன் படுத்தலாம், ஓலைப் பெட்டிகள் தயாரித்தல் என்று ஏதாவது உதவ முடியுமா என்று ஆராய்வதற்கென்று திரு. பிரசன்னா வந்திருந்தார். ஸ்ரீசூர்ணம் தயாரிக்க உதவவும், திருமண்ணின் தரத்தை உயர்த்த வழிகளை ஆராயவும் வீரராகவன் சம்பத் வந்திருந்தார்.

பின்னர் அருகில் இருந்த காலனிக்குச் சென்று, அங்கிருந்த கோவிலில் விழுந்து சேவித்து, அவர்களுக்கு ஒரு டோலக்கைப் பரிசாக அளித்து வெளியேறினோம். (டோலக் இல்லையாதலால் பஜனைகள் நடப்பதில்லை என்று தெரிந்து, வீரராகவன் தான் ஒரு டோலக்கை அளித்தார். அதை அடியேனை விட்டு மக்களிடம் அளிக்கச் செய்தார். பெரிய மனது அவருக்கு. நான் ஓசியில் குளிர் காய்ந்தேன்).

சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்னும் இளைஞர் வந்திருந்து மிருதங்கம், ஹார்மோனியம் என்று அளித்து, பஜனையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

திருமண் தயாரிக்க ஜடேரி மக்களுக்குத் தேவை :

1. கல் உடைக்கும் கருவி
2. மண்ணைச் சுத்திகரிக்கும் கருவி
3. ஓலைப் பெட்டி தயாரிக்கும் தொழில் திறன்
4. ஸ்ரீசூர்ணம் தயாரிக்கும் தொழில் முறை

வாழ்க்கையென்பது பல அனுபவங்களின் தொகுப்பு. அந்த அனுபவங்கள் நமது தேர்வைப் பொறுத்து அமையும். நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது நற்போதுபோக்கு. ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக இந்த நற்போதுபோக்கில் ஈடுபட அனைவரையும் அழைக்கிறேன்.

புதிய ஆங்கில ஆண்டில் நற்போது போக்குவோம் வாரீர்.

தொடர்புக்கு : வீரராகவன் சம்பத் (+91-9655-219245). (www.pracharam.in)

ஜடேரி பற்றிய முந்தைய பதிவுகள்:

ஜடேரி 1

ஜடேரி 2

ஜடேரி 3

திருமண் கிராமம் – அடுத்த கட்டம்

திருமண் தயாரிக்கும் கிராமம் ஜடேரியைப் பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து பலர் அந்தக் கிராமத்திற்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்களுக்கான ஆன்மீக உணவளிக்க முன்வந்துள்ளனர். இத்தனையும் தீபாவளி அன்று நடந்துள்ளது. 

இதைத் தவிர வேறு ஒரு செயலும் செய்யவேண்டியுள்ளது. 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைஷ்ணவர்கள் திருமண் தரித்தே வந்துள்ளனர். இதில் பிராம்மணர்களும் அடக்கம். பல வைஷ்ணவ குலங்கள் – வன்னியர், தேவர், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், நாயக்கர் முதலானோரும் அவ்வாறே நித்யப்படி திருமண் காப்பு தரித்து, தங்கள் குடும்பத்தில் வழக்கத்தில் உள்ள அனுஷ்டானங்களையும் விடாது பின்பற்றியே வந்துள்ளனர்.

திராவிட இயக்கங்கள் என்னும் நச்சு நுழைந்தபின், திரைப்பட நடிகர்கள் நாட்டின் நாயகர்களாக ஆன பின், ஆங்கில அரசின் சூழ்ச்சிக் கல்வியால் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள் அதிகார வர்க்கங்களில் அதிகரித்த பின் திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது. திருமண் இட்டுக் கொள்வது ஏதோ பத்தாம் பசலித்தனம்  என்னும் எண்ணம் ஏற்பட்டு  அவ்வழக்கம் அடியோடு வழக்கொழிந்துவிட்டது.

தற்காலத்தில் கோவில் அர்ச்சகர்கள், உபாத்யாயம் பண்ணி வைப்பவர்கள் தவிர அனேகம் பேர் திருமண் இட்டுக் கொள்வது இல்லை. ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்க்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு, தற்போது அதுவும் குறைந்து வருகிறது.

திருமண் பெட்டி

ஜடேரி கிராமவாசிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமானால், திருமண்+ஶ்ரீசூர்ணம் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். Supply – Demand மூலமே இவர்களுக்கு நல்லது செய்ய முடியும். திருமண் இட்டுக்கொள்வது ஒரு ஆன்மீகச் சின்னம் தரித்தல் என்பது போக, அவ்வழக்கம் ஒரு Fashion Statement என்கிற அளவில் பவனி வர வேண்டும். இதற்கு வாரம் ஒரு நாளெனும் திருமண் தரித்துச் செல்வது என்று மக்கள் முன்வர வேண்டும்.

சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அடுத்த ஓராண்டுக்கு ஒருவருகொருவர் பரிசளிக்கும் போது, ஒரு திருமண் பெட்டியைப் பரிசளித்தால் என்ன? திருமண் பெட்டியுடன் #MeToo, #IamwithDharma, #Thiruman என்று ஹாஷ் டேகுகளில் சமூக ஊடகங்களில் படங்கள் வெளியிட்டால் என்ன? திருமண் இட்டுக் கொண்ட சுயப் படங்களை வெளியிட்டால் என்ன? கிழிந்த ஜீன்ஸ் அணிவது Fashion என்று உள்ளது. திருமண் இட்டுக்கொளது Fashion என்று ஆனால் ஜடேரி முதலிய கிராமங்கள், அங்கு வாழும் மக்கள் எல்லாருக்கும் நன்மை ஏற்படும். திருமண் தொழிலும் செழிக்கும்.

இம்முயற்சியால் மூன்று பிரிவினருக்கு  நன்மைகள் உண்டாகும்.

  • ஜடேரி மக்கள்
  • திருமண் பெட்டி என்று மரப் பெட்டிகள் தயாரிப்போர்
  • திருமண் வைத்துக் கொள்ளும் ஓலைப்பெட்டி தயாரிப்போர்          
ஓலைப் பெட்டி

    ஒரு ஐபோன் சுமார் 70 ஆயிரத்துக்கு விற்கிறது. ஒரு பட்டுப் புடவை சில ஆயிரங்கள். கார், பைக் முதலியன லட்சங்களில். மரத்தாலான திருமண் பெட்டி சுமார் ரூ 250 ஆகிறது. ஓலைப்பெட்டி இன்னமும் குறைவே. 

இனியொரு விதி செய்வோம். இந்த ஆண்டு முழுவதும் திருமண் + ஶ்ரீசூர்ணம்  உள்ள திருமண் பெட்டிகளை வாங்கிப் பரிசளிப்போம். திருமண் இட்டுக்கொள்வோம். திருமண் இட்டுக் கொள்வதைக் காப்பு என்பர் பெரியோர். எதிலிருந்து காக்கிறதோ இல்லையோ, அதைத் தரித்திருந்தால் தீய செயல்களில் நாம் ஈடுபடாமல் காக்கும் என்பது உறுதி.

அலுவலகங்களில் Ethnic Wear என்று சில நாட்களில் உடை உடுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது. அன்னாட்களில் அவ்வுடைகளுடன் திருமண்ணும் தரித்துச் செல்லலாம். உடை மட்டும் Ethnic என்றில்லாமல், நமது நெற்றியும் அவ்வறே இருக்கச் செய்யலாம். 

இது ஆண்களுக்கு மட்டுமானது அன்று. பெண்களும் நல்ல நாட்களில் கோதைத் திலகம் என்று சிறிய அளவில் இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும் கூட இதை ஒரு Fashion Attire என்பதாகவாவது பின்பற்றலாம். இதன்மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இதன் பயன்பாடு அதிகரிக்கும். முயற்சி செய்து பார்ப்போமே.  

ஶ்ரீரங்கத்தில் இருந்து திரு.வீரராகவன் சம்பத்  என்பார் மலிவான விலையில் திருமண் பெட்டிகளை அனுப்பி வைக்கிறார். இதற்கு அவர் ஜடேரி கிராமத்தில் இருந்து திருமண் கட்டிகளை வாங்கி, ஶ்ரீரங்கத்தில் ஶ்ரீசூர்ணம் தயாரித்து, பெட்டிகளில் வைத்து வேண்டுபவர்களுக்கு அனுப்புகிறார். ஜடேரி கிராமத்தில் தயாராகும் திருமண்ணின் தரத்தை அயோத்தியில் தயாராகும் திருமண்ணின் தரத்திற்கு உயரத்த முயன்றுவருகிறார். அன்னாரின் முயற்சிக்குத் தோள் கொடுப்போம். இவரைத் தொடர்புகொள்ள  +91 9655219245 Email: do@pracharam.in