திருமண் கிராமம்

உங்களுக்குத் திருமண் இட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளதா? இருந்தால் மேலே படியுங்கள். இல்லையென்றால் அவசியம் படியுங்கள்.

ஶ்ரீவைஷ்ணவச் சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது ‘பஞ்ச சம்ஸ்காரம்’ (5 சம்ஸ்காரங்கள்). அதில் முதலாவதாக வருவது திருமண் காப்பு (புண்ட்ரம்).   ஊர்த்துவ புண்ட்ரம் என்று உடலில் 12 இடங்களில் இட்டுக்கொள்ளப்படும். ஒவ்வொரு திருமண் காப்பிற்கும் ஒரு நாரயண நாமம். ஆக, பன்னிரண்டு பெயர்கள் ( அச்சுத, மாதவ, கேசவ…).

இந்தத் திருமண் தயாரிப்பில் தானே நேரடியாக ஈடுபட்டார் ஶ்ரீமத்இராமானுஜர் என்று குருபரம்பரை அறிவிக்கிறது.

செய்யாறு அருகில் ஜடேரி என்னும் கிராமத்தில் திருமண் தயாரிப்பையே தங்களது ஒரே தொழிலாகக் கொண்டு செய்துவருகின்றனர் ஊர் மக்கள். காரணம் அந்த ஊரில் உள்ள வெள்ளை மண். திருமண் தயாரிக்க அடிப்படையான மண் அது.

அவர்கள் 80-100 கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ 20ற்கு விற்கிறார்கள். வெளியூர்களில் அது ரூ 120 என்று விற்பனையாகிறது. மக்களுக்குப் பெரிய வருமானமெல்லாம் இல்லை.

ஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பூஜை வேண்டாம் ஐயா, ஒரு விளக்கேற்றக் கூட ஆஸ்திகர்கள் இல்லை. ஊர் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்து, விளக்கேற்றி வருகின்றனர். மனோரம் தாஸ் என்னும் ஆர்வலர் ஜடேரிக்குச் சென்று பார்த்து வந்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. சிறுவர்கள் கோவிலைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைத்திருந்தனர்.

மக்கள் செய்யும் தொண்டைக் கண்டு மனம் உருகிய மனோரம் தாஸ் பண உதவி செய்ய முன்வந்தார். ஊர் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘எங்களுக்குப் பெருமாள் ஏதோ படியளக்கறான். ஆனா, பெருமாளுக்குப் படியளக்க எங்களால முடியல்ல. முன்னெல்லாம் பக்கத்து ஊர்லேர்ந்து ஐயர் வந்து பூஜை பண்ணுவார். இப்ப வயசாயிட்டு. அதால வர்றதில்லை. நாங்களே ஏதோ முடிஞ்ச போது சுத்தம் பண்ணி விளக்கேத்தறோம்,’ என்று சொன்ன ஊர் மக்களைக் கண்டு மனமுருகி நிற்கிறார் தாஸ்.

 

ஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லை என்பதால் பிள்ளைகள் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று செய்யாறில் படித்து வருகின்றனர்.

ஊரில் ஒரு வயதானவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்னது: ‘நீங்க எல்லாம் சுத்த வேஸ்டங்க. எங்கியோ கோவில் கட்றேன்னு போறீங்க. பெரிய கோவிலா இருந்தா அங்க போறீங்க. எங்கள மாதிரி சின்ன ஊர்ல இருக்கற சாமியும் பட்னி நாங்களும் பட்னி.  நாங்க ஒண்ணும் கேக்கலை. எங்க பசங்களுக்கு நம்ம மதத்தோட கதைகளச் சொல்றதுக்கு ஆளில்ல. எங்களுக்கும் ரொம்ப தெரியாது. ஏதோ கூலி வேலைக்குப் போறோம், நாமக்கட்டி செய்யறோம், வயித்தக் கழுவிக்கறோம். ஆனா, எங்களுக்குப் பின்னால இந்த வேலை செய்யவும் ஆள் இருக்காது,’ என்று சொல்லி நிறுத்தினார். லேசாக விசும்பல் சப்தம்.

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றார் நண்பர்.

‘இப்ப க்ரிஸ்டியன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. பைபிள் கதையெல்லாம் எங்க பசங்களுக்குச் சொல்றாங்க. எங்க காலத்துக்குப் பிறகு சிரமம் தான்’ என்றவரின் கண்களில் நீர்.

அதனால் என்ன? பரவாயில்லை. தேசிகப் பிரபந்தம் பாடலாமா கூடாதா, வடகலைப் புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும் என்று சாஸ்த்ரோக்தமான கேள்விகளை நாம் கோர்ட்களில் எழுப்பிக் கொண்டு நமது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவத் தொண்டு புரிவோம்.

இந்து முன்னணி, விச்வ ஹிந்து பரிஷத், சாயி மண்டலிகள், சேவா பாரதி முதலியவையாவது அவ்வப்போது இந்த கிரமத்திற்குச் சென்று பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால் அடுத்த தலைமுறைக்குத் திருமண் கிடைக்கிறதோ இல்லையோ கிருஷ்ணர் கோவிலில் விளக்கு எரியும்.

Screen Shot 2018-10-24 at 10.00.26 PMகாஞ்சிபுரத்தில் இருந்து 40 கி,மீ. தூரத்தில் உள்ளது ஜடேரி கிராமம். செய்யாறு சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் தீபாவளி அன்று சென்று கோவிலில் விளக்கேற்றி வாருங்கள். ஊர் மக்களும் அங்குள்ள கிருஷ்ணர்களும் சந்தோஷப்படுவர்.

மனோரம் தாஸ் அவர்களின் தொ.பே.எண்: +91-7758072388

 

 

3 thoughts on “திருமண் கிராமம்

Leave a comment