ஜடேரி – அனுபவங்கள்

‘நற்போதுபோக்கு’ என்று வைஷ்ணவர்கள் சொல்வதுண்டு. காலக்ஷேபம் கேட்பது, பெருமாளைச் சேவிப்பது, பாகவத கைங்கர்யம் என்று பலதும் இதில் அடங்கும். அவ்வகையில் நேற்று ஜடேரி சென்று வந்தோம்.

நண்பர்கள் வீரராகவன் சம்பத் மற்றும் பிரசன்னாவுடன் ‘ஆடியாடி அகம் கரைந்து’ என்னுமாபோலே ஒருவழியாக ஜடேரி சென்று சேர்ந்தோம். நுழைந்தவுடன் அன்புப் பிரவாகமாக ஊர் மக்கள் சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணர் பஜனை மடத்தில் அமர்ந்து பேசத்துவங்கினோம்.

‘இவர் தான் ஜடேரி பத்தி முதல்ல எழுதினார். அதுக்கப்புறம் நான் வந்தேன், இன்னும் பலர் வந்தாங்க’ என்று மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஊர் மக்கள் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்தனர். ‘உங்க மூலமா பெருமாள் எங்களுக்கு உதவினார்’ என்று கள்ளம் கபடம் அற்ற சகோதரர்கள் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஜடேரி பற்றிய அடியேனின் கட்டுரைக்குப் பின் ஹிந்து நாளிதழ், புதிய தலைமுறை என்று பலரும் வந்து பேட்டி கண்டு சென்றுள்ளனர் என்றார் பெரியவர் தெய்வசிகாமணி. நல்ல எண்ணத்தில், மன வருத்தத்துடன் எழுதியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது பெருமாள் அனுக்ரஹம் தான். நாம் வெறும் கருவி தான். செய்வது யாரோ.

திருமண் கல்
ஒரு டிராக்டர் மண் – பெரியவர் தெய்வசிகாமணி

பெரியவர் தெய்வசிகாமணி ‘நான் இன்னிக்கி நல்லா இருக்கறதுக்கு இந்த திருமண், எம்பெருமான் தான் காரணம்’ என்றார்.

IMG_1488
செக்கில் பொடியாகும் திருமண் கல்

பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமண் செய்முறையைக் காட்டினார்.

IMG_1493
குழியில் திருமண் வடிகட்டுதல்

ஒரு டிராக்டர் மண் ரூ.4000. அருகில் உள்ள ஊரில் இருந்து எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த மண்ணையும் கல்லையும் உடைத்து, செக்கில் வைத்துப் பொடியாக்குகின்றனர். அந்தப் பொடியை மண்ணில் உள்ள குழியில் கொட்டி, 24 லிட்டர் நீர் ஊற்றிக் கலக்குகின்றனர்.

IMG_1491
பல முறை சுத்திகரிப்பு

பின்னர் அழுக்குகளை நீக்க 2-3 முறைகள் வடிகட்ட வேண்டி இன்னொரு குழியில் இறைக்கின்றனர். முதுகு ஒடியும் வேலை. ஓரிரு நாட்கள் வடியவிட்டு, ஈர மண்ணை எடுத்துக் காயவைத்து, பின்னர் சிறிய கட்டை கொண்டு திருமண் கட்டிகளை உருவாக்குகின்றனர். இதில் செயற்கை விஷயங்கள் எதுவும் இல்லை.

IMG_1494
ஈரத் திருமண் , இறுதி வடிவம்

வெளி இடங்களில் உள்ளது போல் ரசாயனக் கலவைகள் எதுவும் சேர்ப்பதில்லை. எனவே திருமண் பளீரென்று வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையான திருமண் பளீர் வெள்ளை நிறத்ததன்று.

இம்மாதிரியாக உருவாக்கிய திருமண்ணை வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். போக்குவரத்தில் இவை உடைந்து போகின்றன. ஆகவே, ஸ்ரீசூர்ணம், அதற்கான ஓலைப்பெட்டி என்று அனைத்தையுமே ஜடேரியிலேயே உற்பத்தி செய்தால் விற்பதற்கும், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கும் வசதியாக இருக்கும்.

திருமண் தயாரிப்பில் எவ்விடங்களில் இயந்திரங்களைப் பயன் படுத்தலாம், ஓலைப் பெட்டிகள் தயாரித்தல் என்று ஏதாவது உதவ முடியுமா என்று ஆராய்வதற்கென்று திரு. பிரசன்னா வந்திருந்தார். ஸ்ரீசூர்ணம் தயாரிக்க உதவவும், திருமண்ணின் தரத்தை உயர்த்த வழிகளை ஆராயவும் வீரராகவன் சம்பத் வந்திருந்தார்.

பின்னர் அருகில் இருந்த காலனிக்குச் சென்று, அங்கிருந்த கோவிலில் விழுந்து சேவித்து, அவர்களுக்கு ஒரு டோலக்கைப் பரிசாக அளித்து வெளியேறினோம். (டோலக் இல்லையாதலால் பஜனைகள் நடப்பதில்லை என்று தெரிந்து, வீரராகவன் தான் ஒரு டோலக்கை அளித்தார். அதை அடியேனை விட்டு மக்களிடம் அளிக்கச் செய்தார். பெரிய மனது அவருக்கு. நான் ஓசியில் குளிர் காய்ந்தேன்).

சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்னும் இளைஞர் வந்திருந்து மிருதங்கம், ஹார்மோனியம் என்று அளித்து, பஜனையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

திருமண் தயாரிக்க ஜடேரி மக்களுக்குத் தேவை :

1. கல் உடைக்கும் கருவி
2. மண்ணைச் சுத்திகரிக்கும் கருவி
3. ஓலைப் பெட்டி தயாரிக்கும் தொழில் திறன்
4. ஸ்ரீசூர்ணம் தயாரிக்கும் தொழில் முறை

வாழ்க்கையென்பது பல அனுபவங்களின் தொகுப்பு. அந்த அனுபவங்கள் நமது தேர்வைப் பொறுத்து அமையும். நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது நற்போதுபோக்கு. ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக இந்த நற்போதுபோக்கில் ஈடுபட அனைவரையும் அழைக்கிறேன்.

புதிய ஆங்கில ஆண்டில் நற்போது போக்குவோம் வாரீர்.

தொடர்புக்கு : வீரராகவன் சம்பத் (+91-9655-219245). (www.pracharam.in)

ஜடேரி பற்றிய முந்தைய பதிவுகள்:

ஜடேரி 1

ஜடேரி 2

ஜடேரி 3

2 thoughts on “ஜடேரி – அனுபவங்கள்

  1. நற்போதுபோக்கு நமக்கும் கிடைக்கட்டும் என எம் குல தெய்வமாம் வேங்கடவனைப் பிரார்த்திக்கிறேன்.
    அவர்களுக்கு உபயோகப்படும் உபகரணங்களின் விலை தெரிந்தால் ஏதேனும் ஒன்றாவது வாங்க உதவ முடியுமா என்று பார்க்கலாம்.
    எம்மைத் திருத்திப் பணி கொள்க, வேங்கடவா! தேவநாதனுக்கு நன்றி.

    Like

Leave a comment