“பிராம்மணர்களுக்கு EWS – Economically Weaker Section – அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையா ?“
‘பிராம்மணர்கள் சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்கிறது. அனேகமாக அனைத்து நிறுவனங்களிலும் தலைமைப் பதவியில் உள்ளனர். சமூக நீதி அடிப்படையில் EWS முறை வசதி குறைந்த முன்னேறிய வகுப்பினருக்கு என்றாலும், அதில் பல ஜாதியினர் இருந்தாலும், இந்த 10% இட ஒதுக்கிடு பிராம்மணர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆகவே இது சமூக நீதிக்கு எதிரானது’ என்பதான கருத்து மழைகளில் நீங்கள் நனைந்திருக்கலாம். இப்படிப் பேசாத ஊடகமே இல்லை என்னும்படியாகவே தற்காலச் சமூகம் உள்ளது.
ஆனால், நிதர்ஸனம் யாது ? பஞ்சத்துக்குப் பிச்சை எடுக்கும் பிராம்மணர்கள் இல்லையா ? எல்லா பிராம்மணர்களுமே அண்ணா நகரில் பங்களாவும், அமெரிக்காவில் வேலையுமாகவே உள்ளனரா ? இதைப் பற்றி எந்த எழுத்தாளருக்காவது அக்கறை இருந்துள்ளதா ?
இருந்துள்ளது என்பேன். அதைப் பற்றி எழுதும் துணிவும், உழைப்பும் உள்ள பெண் எழுத்தாளர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?
வழக்கறிஞர் சுமதி அந்த எழுத்தாளர். அவர் எழுதிய ‘கல் மண்டபம்’ என்னும் நூல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது.
கதை சவுண்டி பிராம்மணர்களைப் பற்றியது. அபர காரியங்கள் பண்ணி வைக்கும் வாத்யார்கள், பாடை கட்டி, தோள் தூக்கி, சுடுகாடு கொண்டு சென்று அங்கும் காரியங்கள் செய்து, பத்து நாள் காரியங்களை விடாமல் செய்து வைக்கும் பார்ப்பனர்களைப் பற்றிய நாவல் ‘கல் மண்டபம்’.
ஶ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் வேத விற்பன்னர் ஒருவர் தன் தொழிலை விட்டுவிட்டுப் பரிஜாரகராக ஆகிறார். ஏன் அவ்வாறு ஆனார் ? ஒரு வைராக்யம் காரணமாக அப்படி ஆகிறார். காட்டுத் தனமாக உழைக்கிறார். பணம் கொட்டுகிறது. ஆனால், மனைவி மனதளவில் விலகுகிறாள். அவரது பிள்ளைகள் என்ன ஆனார்கள் ? அப்பிள்ளைகளில் ஒருவனான தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்ன ஆகிறான் ? வாழ்க்கை அவனை எவ்விதம் சுழற்றி அடிக்கிறது ? அவனுக்குக் குடும்பம் ஏற்பட்டதா ? அவர்கள் என்ன ஆனார்கள் ? என்பனவற்றைப் பற்றிப் பேசும் நாவல் இது.
தேசுவின் வாழ்க்கை மூலம் வாசகர்கள் கண்டடைவன:
- பிராம்மணார்த்தம் சாப்பிடும் வழக்கம், சாப்பிடுபவர்கள் பற்றிய தெளிவு
- சவுண்டிப் பிராம்மணன் வாழ்க்கை முறை
- சவுண்டிப் பிராம்மணன் உட்கொள்ளும் லாகிரி, போதை வஸ்துக்கள்
- அந்திம சம்ஸ்காரம் பண்ணி வைக்கும் பிராம்மணன் போதைக்கு அடிமையாவது ஏன்?
- அவ்வகையான பார்ப்பனர்களின் குடும்ப வாழ்க்கை நிகழ்வுகள்
- திவசம் முதலிய நிகழ்வுகள் நடக்கும் ‘தீர்த்த கட்டம்’ போன்ற இடங்களில் உள்ள ஊழல்
- சாவு வீடுகளில் செயல்படும் பிராம்மணர்களிடம் உள்ள சுரண்டல்கள்
சுரண்டல் இல்லாத இடமே இல்லை என்னும்படியாக ‘விஷ்ணு தீர்த்தம்’ என்னும் காரிய இடத்தில் நடக்கும் பிழைப்புச் சண்டைகள், மனித மனங்களின் கீழ்மை, சில நேரங்களில் எதிர்பாராத இடங்களில் ஏற்படும் திடீர் மன உச்சம் கொள்ள வைக்கும் மனிதர்களின் செயல்கள் மற்றும் எண்ணங்கள் என்று நாவல் மனதை நெருடும் விதமாகச் சுழன்று செல்கிறது.
சமூகத்தில் இவ்வகையான பிராமணர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ‘கல் மண்டபம்’, ‘விடுதலை’, ‘விசாரணை’, ‘அசுரன்’, ‘பரி ஏறும் பெருமாள்’ முதலிய திரைப்படங்கள் வரிசையில் இடம் பெற வேண்டிய ஒன்று. ஆனால் என்ன, இதை எந்த இயக்குநரும் படமாக்க முன்வர மாட்டார்.
இந்த நாவலை இலக்கியத் தர வரிசைகள் எதிலும் நான் கண்டதில்லை. நாவலில் இலக்கியத் தரம் உள்ளதா என்று முற்போக்கு எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆராயலாம். நான் முற்போக்கு இல்லை. பிராமணர்களில் ஒரு வகையினரின் யதார்த்த வாழ்வின் அவல நிலையைச் சொல்லும் இந்த நாவல், பின் நவீனத்துவம், ஊசி நவீனத்துவம் என்கிற ஜல்லிகள் எதுவும் இல்லாமல், நேரடியான கதையாகவும், பிராம்மண அவல வாழ்வின் நிதர்ஸனத்தைச் சொல்லும் ஒரு ஆவணமாகவும் பார்க்கப்பட வேண்டும். குறிப்பாகப் பிராம்மணர்களால்.
நாவலை வாசித்தபின், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளக்கரையில் தினமும் காலையில் சவுண்டி, பிராம்மணார்த்தம், திவசம் முதலியவற்றிற்காகக் காத்து நிற்கும் வயோதிக பிராமணர்களில் தேசு இருக்கிறாரா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். கூடவே ஒரு ஓரமாகக் கல்யாணி நிற்கிறாரா என்றும்.
நாவலில் பல முக்கியமான இடங்களில் ஆழ்வார் பாசுரங்கள் கையாளப்பட்டுள்ளது அருமை.
யார் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும், பிராமணர்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும். திவசம், உபாத்யாயம் என்று வரும் வாத்யார்கள், எடுபிடிகள் என்று அவர்களுக்கு தக்ஷணை விஷயத்தில் கஞ்சத்தனம் கேவலத்திலும் கேவலம் என்கிற எண்ணம், உயர் மத்திய தர பிராம்மணர்களுக்கு ஏற்படும்.
முதல் வரியை வாசிக்கவும்.
நாவல் : கல் மண்டபம். ஆசிரியர் : வழக்கறிஞர் சுமதி. வாசன் பதிப்பகம். விலை ரூ 260.