எல்லாமே நம்ம விதிப்படிதான். சரவணபவனுக்குப் போனாலும் சாம்பார் கிடைக்காது தம்பி என்ற அருளாசியுடன் நாள் துவங்கியது என்று வைத்துக்கொள்ளுங்கள், சாம்பார் கிடைக்காது என்று இருந்தால் நீங்கள் சரவணபவனுக்கு என்ன சமையல் பண்ற மாமி வீட்டுக்குப் போனாலும் அன்று அவர்கள் வீட்டில் வத்தக்குழம்பு தான் என்று சொல்வார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால் விதி அத்தனை வலியது.
விதி என்றவுடன் நினைவுக்கு வருவது பல. வருடாந்திர சம்பள உயர்வு என்னும் கண்கட்டு வித்தை, கூடங்குளம் என்று பல.
சம்பள ஏறும் ஏறும் என்று சொல்வார்கள். வருடா வருடம் விலை தான் ஏறும். சம்பளம் ஏறாது. ஆனால் கம்பெனி மட்டும் லாபம் காட்டிக்கொண்டே இருக்கும். ஒபாமாவிடமிருந்து வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பித் தர முடியும், அதைத் தம்பட்டம் அடிக்கவும் முடியும். ஆனால் வருட முடிவில் பணியாளரின் திறனாய்வு என்ற பெயரில் கோல்மால் அரங்கேறும். அது கோல்மால் தான் என்பது வெளியே தெரியாவண்ணம் பல அடுக்கு மொழித் தொடர்கள் புனையப்படும். அப்படிப்புனைவதற்கு என்றே சில நிறுவனங்கள் உள்ளன. இவற்றிடம் ஒப்பந்தம் செய்யப்படும். அவர்கள் புனைந்து தருவார்கள். அதை வைத்து பணியாளர்களை மழுங்க மொட்டை அடிப்பார்கள். மொட்டை அடிக்க எதற்கு இத்தனை பேச்சு?
அந்த சமயத்தில் பார்க்க வேண்டுமே. நிறுவனம் முழுக்க ஒரே சோக மாயம் தான். ஆய்வு நடக்கும் நேரம் , அதற்கு ஒரு இரண்டு வாரம் முன்னாள் இருந்து ஒரே சோக மயமான மின் அஞ்சல்கள் வரும். உலகப் பொருளாதாரம் சரி யில்லை, மற்ற நிறுவனங்கள் சரிகின்றன, நாம் எப்படியோ தத்தளித்துக் கரை ஏறி இருக்கிறோம் என்பது போன்றவை. நாமும் ஏதோ இந்த மட்டும் நம்மை வேலையில் வைத்துக்கொண்டுள்ளார்களே என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு சோக கீதம் இசைப்பார்கள்;.
அந்த நேரம் கடக்கும். நாமும் நமது விதியை நொந்து நமக்கு அளிக்கப்படும் 0.5 % சம்பள உயர்வை ஏதோ மிகப்பெரிய சாதனை போல் வீட்டாரிடம் சொல்லி தப்பித்திருப்போம். அப்போது ஆரம்பிக்கும் — கலாச்சார நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகளுக்கு நம் நிறுவனத்தின் விளம்பரங்கள், தொலைக் காட்சியில் பலமுறை விளம்பரங்கள், தலைமை அதிகாரியின் “நம்ப முடியாத அளவு உயர்ந்த” நம் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி அஞ்சல்கள் முதலியன.
நமக்குத்தான் பழையன மறந்துவிட்டனவே. இதையும் கொண்டாடுவோம். தொலைக்கட்சியில் விளம்பரம் பார்த்து அக்கம் பக்கத்தாருடன் கூட்டுக் களிப்போம். மனைவியும் மகிழ்வாள்.
அதற்கும் மேல் நமது நிறுவனம் தனது இத்தனையாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு கண்ணாடிக் கூடு அன்பளிப்பு அளிக்கும். அதையும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வோம். வேலை செய்யும் மேசைமீது வைத்து அழகுவேறு பார்ப்போம். வேறு என்ன செய்ய முடியும்? அதனை பழைய இரும்பு பித்தளைக் காரனுக்குப் போடவும் முடியாது. அவன் ஏற இறங்கப் பார்த்து அர்ச்சனை செய்வான்.
வெந்த புண்ணில் வேல் என்பது போல் சரவண பவனில் சாப்பிட்டால் உங்கள் நிறுவன ஊழியருக்கு ஐந்து சதவீதம் கழிவு என்று ஒரு மின்னஞ்சல் வரும். அதையும் எந்த ஏமாற்ற உணர்வும் இன்றி ஏற்றுக்கொண்டு சாப்பிடச்செல்வோம்.
இங்கு தான் விதி விளையாடும். நமது முறை வரும் போது இட்லியும் சட்னியும் தான் இருக்கு, சாம்பார் இல்லை என்று சொல்வார்கள். நமக்கு என்ன வேறு வழி உண்டா என்ன ? அதையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு காலையில் சுட்ட இட்லியை சுவைத்துச் சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தவாறே சாப்பிடுவோம்.
இதைத்தான் விதி என்பது. சரவணா பவனுக்குப் போனாலும் சாம்பார் கிடைக்காது என்பது.
அதற்கும் கூடங்குளத்திற்கும் என்ன தொடர்பு ?
இருக்கிறதே ! கட்டி முடிக்க இருபது ஆண்டு. போராட்டம் ஐந்து ஆண்டு. பொறியியல் சேரும் முன்பு இந்தத் திட்டம் எப்படியும் வந்துவிடும் நமக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி மின்னியல் தேர்வு செய்து இப்போது இருபது வருடம் ஆகிறது. கூடங்குளம் வந்த பாடில்லை. தொழில் நுட்பம் இல்லை என்றார்கள். ரஷ்யா உடைந்தது என்றார்கள். ஆமை போல் முன்னேறி வந்தால் உதயகுமார் உருவத்தில் விதி சிரித்தது. யார் பெற்ற பிள்ளையோ அவர் பல பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினார். நீதிமன்றம் சென்றார்கள். மீண்டும் ஆமை போல் நகர்ந்து நீதி மன்றம் கூடங்குளம் சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இப்போது சில வால்வுகள் கோளாறு என்கிறார்கள். இன்னும் ஒரு பத்து வருடம் போனால் என் மகனுக்கு அங்கே வேலை கிடைக்குமோ என்னவோ ! இல்லை அப்போது விதி உதயகுமாரின் மகனோ மகளோ உருக்கொண்டு சிரிக்குமோ என்னவோ தெரியவில்லை.
அது போல் தான் ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம். நெய்வேலியின் தொழில் நுட்பம் கொண்டு நிறுவப்படும் என்று இருபது ஆண்டுகள் முன்னர் சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.
சரி நெய்வேலியில் வேலை செய்யலாம் என்று முயன்று 1998-ல் நான்கு ஆண்டு அனுபவம் இருந்தும் உதவிப் பொறியாளர் தேர்வு எழுதினேன். ஒரே நாளில் தேர்வு வெற்றி, நேர் காணல் வெற்றி, கூட்டு விவாதம் வெற்றி – நம்பவே முடியவில்லை. மருத்துவத் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னார்கள். மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தேன். இன்று வரை மருத்துவத்தேர்வு அழைப்பு வர வில்லை. காரணம் – வேறென்ன – சாம்பார் விஷயம் தான்.
எனக்கு மின்னியல் சூத்திரங்கள் அனைத்தும் மறந்துவிட்டன.
இப்போதெல்லாம் சரவண பவன் சென்றால் சாம்பார் கேட்பதில்லை.
Hai
Very nice.enjoyed a lot
LikeLike
சொந்தக் கதை சோகக் கதை மா ..
LikeLike