காஞ்சி வழக்கு பற்றிய சென்ற பதிவில் மத மாற்றுக்காரர்களின் உலகளாவிய இயக்கங்களின் மறைமுகக் கை இருக்கலாம் என்று கண்டோம். அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் கண்டோம்.
ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை உண்டா என்று கேட்கலாம். என்னுடைய அலசல் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை அவற்றின் கால அளவையும் நிகழ்ந்த நேரத்தையும் கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட அனுமானங்கள் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் நான் இந்த அனுமானத்திற்கு வரக் காரணங்கள் என்ன ?
வழக்கு பதிவு செய்யப்பட்ட விதமும், வழக்கு நடத்தப்பட்ட அழகும் அன்றைய அரசின் இவ்வழக்கு பற்றிய கருத்துக்களும், காவல் துறை மற்றும் ஊடகங்களின் நடத்தையுமே என் அனுமானத்திற்குக் காரணங்கள்.
வழக்கு பதிவு செய்யும் முன்னரே ஜெயேந்திரரைக் கைது செய்வதே முக்கியம் என்பது போல் செயல்பட்டது அரசு. அன்றைய முதலமைச்சரும் முந்தைய நாள் வரை காஞ்சி மடத்துடன் இழைந்துகொண்டிருந்தார். திடீரென்று தீபாவளி நாள் அன்று ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். அது வரை அவரே எல்லாத் தொலைக் காட்சிகளிலும் தீபாவளி அன்று நற்செய்தி வழங்கி வந்தார். இந்துமதம் என்றாலே காஞ்சி சங்கராச்சாரியார் என்ற அளவில் இருந்தது அன்று.
தீபாவளி நாள் அன்று அதிரடி முறையில் அவர் கைது செய்யப்படவேண்டிய தேவை என்ன ? தீபாவளி என்பது பாரதத்தின் அனைத்து இந்து சம்பிரதாய மக்களும் புனிதம் என்று கருதும் நாள். எனவே அன்று அந்த சமயத்தின் முக்கியத் தலைவரைக் கைது செய்து யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது என்று எண்ணத் தோன்றுவது இயற்கையே. ஆக, யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது ?
அப்போது என்ன கதைகள் பேசப்பட்டன ? அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நேபாளத்திற்கு ஹெலிகாப்டரில் தப்ப இருந்தார் என்ற செய்தி பரப்பப் பட்டது. ஆந்திராவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்க இதுவரை ஹெலிகாப்டர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும்.
ஜெயேந்திரர் காஞ்சிபுரம் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே ‘நக்கீரன்’ என்னும் நாலாந்தர ஏட்டின் உதவித் தலைமை ஆசிரியர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருந்தார். அது எப்படி? அவருக்கு இந்தத் தகவல் எப்படி முன்னரே தெரிந்தது ?
வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த பிரேம்குமார் என்ற காவல்துறை ஆய்வாளரின் மைத்துனர் இந்த உதவி ஆசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வெளியே விடாமல் இருக்க ஆன மட்டும் முயன்றனர். அரசின் அத்துனைத் துறையும் இதின் பயன் படுத்தப்பட்டன. முதல்வர் நேரடியாக இந்த வழக்கில் ஈடுபட்டார். பிரேம்குமாருடன் நேரடியாக அனைவரும் பார்க்கும் வண்ணம் தனது ஹெலிகாப்டர் அருகில் நின்று பேசினார். அன்று மாலையே இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மிகவும் அதிரடி முறையில் பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது பிரேம்குமார் காலில் காலணி (ஷூ ) அணிந்திருந்தார். விஜயேந்திரர் தான் பூசை முடித்து வருவதாகக் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஏன் இவ்வளவு அவசரம் ?
ஜெயேந்திரர் மீது அசைக்க முடியாத சாட்சியங்கள் இருப்பதாக அன்றைய முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார் (Clinching Evidence). ஆனால் அந்த சாட்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு தனி வழக்கு பற்றி முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டியது ஏன் ? யாரைத் திருப்திப் படுத்த ?
சரி, அசைக்க முடியாத சாட்சி என்ன ?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து 50 இலட்சம் பணம் எடுத்து அது கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது என்பதே அது. இந்தக் காரணம் காட்டியே காஞ்சி முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பிணை (bail) மறுக்கப்பட்டது. டெல்லியில் தலைமை நீதிமன்றம் முன் இந்த சாட்சி பற்றிக் கேள்வி எழுந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குப் புத்தகம் கேட்கப்பட்டது. அரசு தரப்பில் அப்படி ஒரு கணக்கு இல்லை என்று கூறப்பட்டது.
அன்று வரை எந்தக் கணக்கு முக்கிய சாட்சியாகக் காண்பிக்கப்பட்டதோ அதுவே இல்லை என்று அரசே கூறியது. நீதி மன்றம் கொதிப்படைந்தது.
பின்னர் அரசு அது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கு இல்லை என்றும் அது இந்தியன் வங்கிக் கணக்கு என்றும் கூறியது. நீதிமன்றம் கணக்குப் புத்தகப் கேட்டது. அதில் 50 இலட்சம் எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தேதியில் 50 இலட்சம் வைப்பு செலுத்தப் பட்டது என்றும் தெளிவாகியது. மடத்தின் ஒரு நிலம் விற்ற வகையில் பெற்ற பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.
ஒரு க்ரெடிட் , டெபிட் ( Credit / Debit ) வித்யாசம் கூடவா அரசிற்குத் தெரியவில்லை ? நம்ப முடியவில்லை.
இல்லாத ஒரு வங்கிக் கணக்கை இருக்கிறது என்று அரசு துணிந்து பொய் கூறியது. பணம் செலுத்தியதை எடுக்கப்பட்டது என்று மேலும் துணிந்து பொய் கூறியது. இதெல்லம் ஒரு குற்றத்தை நிரூபிக்க அல்ல; ஜெயேந்திரருக்குப் பிணை மறுக்க.
அவரைச் சிறையில் நீண்ட காலம் வைப்பதால் யாருக்குப் பயன் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.
அவரைச் சிறையில் வைத்து விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக மயக்க மருந்து கொடுத்துப் பல கேள்விகள் கேட்டது காவல் துறை. அதனைப் பதிவு செய்து அதனைத் தொலைக் காட்சிகளுக்கும் அளித்தது. ஆனால் யார் அதனை அளித்தனர் என்று தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்தன. இருந்தும் அந்த ‘விசாரணையை’ ஒளி பரப்பித் தங்கள் ‘தர்ம’த்தை நிலை நாட்டின. இவையும் யாருக்காக என்று தெரியவில்லை.
ஜெயேந்திரருக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் பிணை அளித்து விடுவித்தது. அந்த ஆணையில் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியது உச்ச நீதி மன்றம். புதிய சாட்சிகள் ஒன்றும் இல்லை, வழக்கை நடத்த முயற்சி செய்யாமல் ஜெயேந்திரரைச் சிறையில் வைக்கவே அரசு விரும்புகிறது என்று நீதிமன்றம் சாடியது.
ஜெயேந்திரர் வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே விஜயேந்திரக் கைது செய்தது தமிழக அரசு மீண்டும் வேறு புதிய சாட்சிகள் இல்லாமலே.
இந்திய ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் வாழ்நாளைக் காஞ்சி மடத்தின் சேவையில் கழிக்க நினைத்து அதில் தொண்டூழியம் செய்துவந்த சுந்தரேசையர் என்பவரைக் ‘குண்டர்’ சட்டத்தில் கைது செய்தது அரசு. பின்னர் அதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாகக் குற்றம் செய்யும் குற்றவாளிகளை நடத்துவது போல் இவரை நடத்தியதை நீதிமன்றம் விரும்பவில்லை.
அத்துடன் இல்லாமல் மடத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது அரசு. மடத்தின் கீழே பல பாட சாலைகள், பசுக் காப்பகங்கள், மருத்துவனமனைகள் முதலியன நடந்து வந்தன. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டன.
இதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தத் தீர்ப்பில் அரசின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. (“Action for freezing the accounts of the Mutts is ultra vires, illegal and liable to be set aside”).
தெரிந்தே நீதி மன்றத்தில் பொய் சொல்வது ஒரு அரசின் வேலையா ? இவ்வளவு தூரம் மெனக்கெட்டு பொய் கூறி, நீதி மன்றத்திடம் வாங்கிக் கட்டிகொண்டது யாருக்காக ?
இந்த நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது. கொல்கொத்தாவின் சோனாகாச்சியில் நடைபெறும் தொழிலுக்கும் ஊடகங்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லை.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். ‘காலச்சுவடு’ என்னும் ஒரு இலக்கியப் பத்திரிகை. அந்நேரத்தில் அதில் வெளிவந்த ஒரு கட்டுரையில் ஒரு சிறிய பகுதி இது. மேலும் நான் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை.
“கேட்டுக்கொண்டிருந்த நான் சொன்னேன்: “சார், நீங்கள் ஜெயேந்திரரைத் தவறாக நினைக்கக் கூடாது. அவர் எல்லோரையும்தான் சட்டையை அவிழ்க்கச் சொல்கிறார். ஆண்களிடம் வெளியில் வைத்துக் கேட்பார். பெண்களிடம் உள்ளே வைத்துக் கேட்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.” ( நன்றி : தமிழ் ஹிந்து )
காலச்சுவடு என்பது முற்போக்கு இலக்கியச் சூழலில் உள்ள ஒரு பத்திரிக்கை. இதுவே இப்படிச் செயல்பட்டது. மற்றவை பற்றிப் பேசவேண்டியதில்லை.
பத்திரிக்கை தர்மம் என்று கொடி பிடிப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் ? யாரைத் திருப்திப் படுத்த இந்தச் செயல்பாடு ?
விஜயேந்திரரையும் ஒரு முன்னாள் நடிகையையும் தொடர்பு படுத்தியும் பத்திரிக்கைகள் பேசின. பெண் உரிமைக்காரர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ‘ஜன நாயக மாதர் சங்கம்’, ‘தேசியப் பெண்கள் ஆணையம்’ முதலியன அப்போது தோன்றவில்லையா ? அல்லது அந்தக் பெண் நடிகை பெண்ணே இல்லையா ?
எதற்காக இந்த அளவு வீழ வேண்டும் பத்திரிக்கைகளும், ஊடகமும், அரசும் ?
என்னிடம் பதில்கள் இல்லை. அனுமானம் மட்டுமே. விடை தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.
ஆனால் ஒன்று நிச்சயம். வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயெந்திரர் விடுதலை ஆனார்கள் என்றாலும் மடத்தின் பெருமையும் ஆளுமையும் குறைந்தது என்பது உண்மை. துறவியரின் பெருமையும் அவ்வாறே.
இனி ஜெயேந்திரர் சமூக சீர்திருத்தங்களில் அவ்வளவு தீவிரமாக ஈடுபடுவாரா என்பது சந்தேகமே. அவரது உடல் நலமும் இடம் கொடுக்காது. மன உரமும் தளர்ந்திருக்கும். பழையபடி காஞ்சி மடம் ‘ப்ராம்மணர்களின்’ கூடாரமாகலாம். ‘நமக்கேன் வம்பு’ என்று அவர்கள் பார்வை உள் நோக்கித் திரும்பலாம். இவை எதிர்பார்க்கக் கூடியவை.
காஞ்சி மடத்தின் இந்தப் போக்கினாலும் பெருமை வீழ்ச்சியாலும் பயன் அடையப்போவது யார் என்பதை அறிந்துகொள்ளப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.