அல்லா மாமாவுடன் எனக்கான தொடர்பு 30 வருஷம் உயிருடன் இருந்தது.
‘அப்பா இருக்காகளா’ என்று கேட்டபடியே வருவார் அல்லா மாமா. அவரது இயற்பெயர் ரொம்ப நாள் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்பாவின் அலுவலகத்தில் குரூப் டி என்னும் பியூன் வேலை செய்துவந்தார் அல்லா மாமா. கடை நிலை ஊழியர்.
வெகு நாட்கள் வரை அல்லா மாமா என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றே நினைத்திருந்தேன். வயது ஏற ஏற அவர் அன்னியர் என்று புரிந்தது. ஆனாலும் அவர் மீதான அன்போ மரியாதையோ குறைந்ததில்லை. வெள்ளிக்கிழமை அன்று மட்டும் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார். ‘மாம்சம் சாப்டுவோம் தம்பி’ என்பார்.
அப்பாவுக்கும் அவரிடம் ஒரு தனிப்பிரியம் உண்டு. ‘என்ன பாய், என்ன விசேஷம்?’ என்று துவங்கி அவரது குடும்ப விஷயங்கள் பலது பற்றியும் கேட்டுக்கொள்வார். அவர் குடும்ப விஷயம் பற்றி அப்பாவுக்கு என்ன என்று நான் நினைத்ததுண்டு. பல முறை தனது மகன்களையும் அழைத்து வருவார். அப்பா அவரது பிள்ளைகளுக்கு நான்றாகப் படிக்கும்படி அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பணி ஓய்வுக்குப் பின் வடலூரில் வசிக்கத் தொடங்கினார். வாரம் ஒருமுறையாவது சைக்கிளை மிதித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவார். ‘அப்பா இருக்காகளா ? சும்மா பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்,’ என்பார். தனது ஊரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். தனக்கு வர வேண்டிய நிலம் தொடர்பான ஒரு பிரச்சினையில் அப்பா தலையிட்டுத தீர்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓரிரு வருடங்கள் வழக்கு நடந்தது.
திடீரென்று அல்லா மாமா சாலை விபத்தில் காலமானார். ஆனாலும் அப்பா அவரது இரு பிள்ளைகளையும் அழைத்து பல வருடங்கள் வரை சரியான பாதையில் அவர்கள் குடும்பம் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார். அவர்களில் இளைய மகனுக்கு ஹெப்படைடிஸ் வைரஸ் தாக்கியதில் அவரது அரபு நாட்டுப் பணியாசையில் மண் விழுந்தது. அவன் அரபு நாட்டிற்குச் சென்றால் தான் அவர்கள் குடும்பம் உயரும் என்னும் நிலையில் பல மருத்துவ அதிகாரிகளை அணுகி அவர்களைக்கொண்டு நற்சான்றிதழ் அளிக்க வைத்து ஒருவழியாக அந்தக் குடும்பம் முன்னேற உதவினார்.
‘யாருக்காக இல்லேன்னாலும் அல்லா பிச்சைக்காக நான் அவர் மகன்களுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். நாப்பது வருஷப் பழக்கம்,’ என்று எப்படியாவது அவரது மகன்களில் ஒருவருக்கு நெய்வேலியில் வேலை வாங்கித்தர முயற்சித்தார். கருணை வழிந்து வளர்ந்த நெய்வேலியில் அப்போது கருணை வடிந்துவிட்டிருந்தது. வெற்றி கிட்டவில்லை.
அல்லா மாமாவைப் போலவே பிரின்ஸ் டெய்லர்ஸ் என்னும் ஒரு சிறிய தையற் கடைக்காரரும் எங்களுக்கு நண்பர். அவர் எப்பவும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் இன்னொரு இஸ்லாமியர். நான் எல்.கே.ஜி. முதல் 12வது வரை அவரிடமே துணி தைத்திருக்கிறேன். தீபாவளி வந்தால் அவர் கடையில் இருந்து ஆள் வரும். ‘என்ன இன்னும் தைக்க வரல்லியே ..’ என்று. பின்னாளில் ரெடிமேட் ஆடைகள் வந்த பிறகு அவரையும் காணவில்லை. அவரது கடையின் அளவு சிறிதாகிக்கொண்டே வந்தது என்பதை நான் அறிந்திருந்தேன்.
அகில இந்தியத் தேர்வில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றதால் என் படம் நாளிதழ்களில் வந்தது. யாருக்கு மகிழ்ச்சியோ தெரியாது, பிரின்ஸ் பாய் ரொம்ப ஆனந்தப்பட்டார். ‘நம்ம கடைல யூனிபார்ம் தெச்சு போட்ட கொழந்த இன்னிக்கி பேரும் படமும் பேப்பர்ல வருது’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
1997-ல் ஒருமுறை அவர் கடைக்குச் சென்றிருந்தேன். மிகவும் வயதானவராகத் தெரிந்த அவர் என்னை அப்படியே அணைத்துக் கொண்டார். ‘நான் பார்த்து வளர்ந்தவங்க தம்பி நீங்க. வேலைக்கெல்லாம் போறீங்க. ரொம்ப பெருமையா இருக்கு,’ என்று கண்ணீர் விட்டார்.
நான்கு ஆண்டுகள் கழித்து 2001ம் ஆண்டு தந்தையார் பணி ஓய்வு பெறும் போது ஒரு முறை நெய்வேலி சென்றேன். பிரின்ஸ் டைலர்ஸ் இல்லை. வேறு ஏதோ கடை இருந்தது. என்னைப் பார்த்து ஆனந்தப்பட்ட அந்தப் பெரியவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
நான் அறிந்த இஸ்லாமியர்கள் இவர்களே. வஹாபியம் பேசாத, அடக்குமுறை செய்யாத, யாரையும் விட்டு ஒதுங்காத, எப்போதும் சிரித்த முகத்துடன் தென்பட்ட இந்த இரு பெரியவர்களே ‘இஸ்லாமியர்’ என்றதும் என் நினைவுக்கு வருபவர்கள். எல்லாரையும் போல குடும்பம் வாழ வேண்டி அயராது உழைத்த நேர்மையாளர்கள் இவர்கள். பெரிய பணம் எல்லாம் சம்பாதிக்கவில்லை இவர்கள். பெரும்பாலும் வறுமையிலேயே வாழ்ந்துவந்தார்கள். மதம் கடந்து அன்பு செலுத்தினார்கள்.
வடகலை ஐயங்காரும் லெப்பை முஸ்லீமும் வேறுபாடு இல்லாமல், வன்மம் இல்லாமல் வாழ்ந்த இடம் நெய்வேலி. சிங்கப்பூர் போன்ற பல இன சமுதாயம் கொண்டது நெய்வேலி.
ஆனால் அது வேறு ஒரு காலம். மதங்கள் மனிதர்களைப் பிரிக்காதிருந்த காலம். நான்கு சுவற்றுக்குள் மட்டுமே மதம் புழங்கிய காலம். அரசியல் வியாதிகளின் கறை படியாமல் புனிதமான நட்போடு மக்கள் வாழ்ந்து வந்த காலம் அது.
அல்லா மாமாவையும் பிரின்ஸ் டைலர்ஸ் கடைக்காரரையும் போல் அந்தக் காலமும் மறைந்துவிட்டிருக்கிறது.