ஜெயமோகன் ‘வெள்ளை யானை’ என்னும் பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தாது வருஷத்துப் பஞ்சம் பற்றிய இந்தக் கதையில், உண்மையும் பல புனைவுகளும் நிரம்பி எது உண்மை, எது புனைவு என்று தெரியாத வண்ணம் உள்ளது.
பஞ்சம் வந்தது உண்மை. மக்கள் பட்டினி கிடந்து மடிந்தது உண்மை. தாழ்த்தப்பட்டோர் பெரிய அளவில் மடிந்தது உண்மை. அதே சமயம் அனைத்து மக்களும் அவதிப்பட்டு அவர்களிலும் பலர் மடிந்தது உண்மை. தாதுக் கும்மி என்று தஞ்சை பக்கம் இப்போதும் பாடக் கேட்கலாம்.
கதை: ஒரு ஐரிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகச் சென்னை வருகிறான். அவன் பார்வையில் பஞ்சம் விரிகிறது. மக்கள் துயர் அவன் பார்வையில் எழுதப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டி வரவழைக்கப்பட்டு இந்தியாவின் கனவான்களுக்கு மது அருந்த வழங்கப்படுவது ஒரு தொழில். அதற்கு அந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் எப்படிப் பட்டினியால் அவதிப்படுகின்றனர், சாதி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்று அந்த அதிகாரியின் பார்வையில் விரிவதாக நாவல் பயணிக்கிறது.
நெஞ்சை உலுக்கும் பஞ்சக் காட்சிகள், சாதி அமைப்பின் கொடூரம் எல்லாம் மிகைப்படுத்தல்களுக்கிடையே வெளிப்படுகின்றன. கதை மாந்தர்கள் சிலர் நாடகப் பாணியில் பேசுகின்றனர். சில உண்மை வரலாற்று நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்ட கதையும், செனேட் ஹால் கட்டப்பட்ட கதையும் இந்தச் சோகச் சித்தரிப்பில் இடம்பெறுகின்றன.
ஐஸ்கட்டியை ‘வெள்ளை யானை’ என்று ஒரு படிமமாகச் சொல்வது அருமை. இங்கு ஜெயமோகன் ஜொலிக்கிறார். ஆனால் முரஹரி ஐயங்கார் பாத்திரம் கதையில் ஒட்டவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஷெல்லியின் வரிகள் கதை ஓட்டத்திற்கு மெருகு சேர்க்கிறது.
பஞ்சம் அறியாத நமது தலைமுறையினருக்கு அது பற்றி அறிந்துகொள்ள இது ஒரு நல்ல தொடக்கம். மதுஸ்ரீ முகர்ஜீ எழுதிய Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II என்ற நூலை இதை அடுத்து படிக்கலாம்.
அந்த நூல் பற்றிய எனது மதிப்புரை இங்கே.