நான் இராமானுசனை பக்திக் கண்ணோட்டத்துடன் படிப்பது சிரமம் தான். இராமானுசரையோ திருமாலையோ மிக மிக உயர்த்திப் பேசும் சம்பிரதாயப் பேச்சுக்களும் வழக்குகளும் இதில் இருக்காது. இது கொஞ்சம் கதை, நிறைய தத்துவம் என்கிற அளவில், ‘விசிட்டாத்வைதம்’ குறித்த புரிதலுக்கும் அறிமுகத்திற்கும் ஒரு வழி.
சம்பிரதாயமான நூல்களில் அதீதமான மிகைப்படுத்தல்களும், நம்ப முடியாத, நம்பத் தேவை இல்லாத புனை கதைகளும் தென்படும். அவை ‘நான் இராமானுசனில்’ இருக்காது. நடைமுறை விசிட்டாத்வைதம் என்னும் அளவில் அந்த சித்தாந்தம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக, விசிட்டாத்வைதத்தின் சமன்வயப் பார்வை வெளிப்படும்படியாக எழுதப்பட்ட நூல் இது.
இந்தியச் சிந்தனை மரபின் ஊற்றுக்கண் தர்க்கமே என்றும் நிறுவும் ஒரு முயற்சி இது. இந்த நூலை மேற்சொன்ன கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்லது.
“ ‘நான் பிரபத்தி நெறியை முன்வைத்தேன்’ என்றோ, ‘நான் விசிட்டாத்வைதம் என்னும் முறையைத் துவக்கினேன்’, என்றோ இராமானுசர் சொல்லியிருப்பாரா?” என்று கேட்பதில் இந்த நூலின் புனைவுத்தன்மை அடிபடுகிறது. வைஷ்ணவ ஆச்சாரியர்கள்,’நான் செய்தேன் என்று சொல்ல மாட்டார்கள்,’ என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இருக்கலாம். ஆதலால் இராமானுசன் இப்படி சொல்லக்கூடாது என்று எப்படிச் சொல்வது?
‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் புனைவில் இன்றைய அளவுகோல்களை எப்படிப் புகுத்துவது?’ என்பதே என் பதில்.
ஒருவேளை இராமானுசர் சொல்லாவிட்டால் ஆளவந்தார் சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கும் முன்னர் நாதமுனிகள் சொல்லியிருக்கலாம். இதற்கு ஏதாவது ஒரு மூலம் இருந்திருக்க வேண்டும். நான், இராமானுசரை மூலமாகக் கொண்டு அவர் சொன்னதாகச் சொல்லியிருக்கிறேன். அதிலும் அவர் ‘நான் ஆழ்வார் சொன்னதையே சொல்கிறேன்’ என்றும் சொல்கிறார்.
மறுபடியும் : இது சம்பிரதாய நூல் அல்ல. வாழித் திருநாமங்கள் இருக்காது. நிறைய தர்க்கம், தத்துவம், அறிவுத்தேடல், இவற்றின் ஊடே கொஞ்சம் பொதுவாக அறியப்பட்ட வரலாறு. அவ்வளவே. நன்றி.
Leave a comment