
நமக்குத் தெரியாத, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட முகங்கள் இவை. தமிழ் மொழியால் வாழாமல், தமிழ் மொழியைக் கொண்டு வயிறு வளர்க்காமல், தமிழை வளர்த்த முகங்கள் இவை. நாடும் மொழியும் இரு கண்கள் எனக் கொண்ட முகங்கள் இவை. எனவே நமது கண்களில் படாத முகங்கள் இவை.
அதிகம் வெளிப்படாத முகங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் திராவிட மாயை சுப்புவும், வ.வே.சு.வும். இந்த முயற்சி இல்லையென்றால் இந்த முகங்கள் நம்மில் பலருக்குத் தெரியாமலே போயிருக்கும். வயிற்றுக்குக் கஞ்சி இல்லாத வேளையிலும் தமிழ்த் தொண்டாற்றிய தூயவர்களின் வரலாற்றில் இருந்து சில மணிகளை இந்த ‘தமிழர் முகங்கள்’ காட்டுகிறது.
இவர்களது தொண்டிற்கு முன் வேறு யாருடைய வாய்ச் சவடால் மிக்க பேச்சுக்கள் எடுபடாது. இந்த முகங்கள் நான்கு திசைகளிலும் தெரிய வேண்டும். நாம் யார் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல் ‘தமிழர் முகங்கள்’.
யார் அந்த முகம் தெரியாத தமிழர்கள்?
உ.வே.சா, திரு.வி.க., ம.பொ.சி., அவ்வை.தி.க.ஷண்முகம், பாபாநாசம் சிவன், பைந்தமிழறிஞ்ர் பி.ஸ்ரீ. — இச்சான்றோரின் முகங்களை ஏந்தி வரும் இந்தநூல் தமிழ் பேசும் நம்மிடம் இருந்தே ஆக வேண்டிய ஒன்று.
உ.வே.சா.வின் வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வரவில்லையெனில் உங்கள் கண்களை மருத்துவரிடம் காட்டிட வேண்டியிருக்கிறது என்று பொருள். அத்வைத மதஸ்தரான உ.வே.சாவிற்கு சமண மதத்தில் இருந்த ஊற்றம் ‘கற்றோரிடம் காழ்ப்பில்லை’ என்னும் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. பாபநாசம் சிவன் வாழ்க்கை பற்றிய பல அரிய தகவல்களை இந்நூல் அளிக்கிறது.
தமிழ் வளர்த்த சான்றோரின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் போது நமது வாழ்வில் நாம் அப்படி என்னதான் செய்துவிட்டோம் என்கிற ஒரு கேள்வியை இந்நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது. மறுமுறை இந்தியா செல்கையில் தீர்த்தயாத்திரை எல்லாம் தேவையில்லை, இவ்வறிஞ்ர்கள் வாழ்ந்த, இவர்களது காலடி பட்ட ஊர்களுக்குச் சென்று அந்த வீதிகளில் ஒருமுறை விழுந்து வணங்கி வர வேண்டும் என்று தோன்றுகிறது.
வாழ்க செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வழிய பாரத மணித்திருநாடு.