‘உன்னை போஸ்ட்மேன் பார்க்கணும்னார்’ சந்தானகிருஷ்ணனோ, ஷங்கரோ சொன்னார்கள். 1996ல் என்னுடன் டோம்பிவிலியில் தங்கி இருந்தவர்கள். எனக்குக் காரணம் புரியவில்லை. என்ன காரணம் என்று கேட்டேன். ‘உங்கிட்ட தான் பேசுவேன்னார்’ என்று பதில் வந்தது.
மறுமுறை போஸ்ட்மேன் வந்தபோது,’துமி மதராஸி மானுஸ் ஆஹே கா?’ ( நீங்கள் மதராஸியா?) என்றவாறே ஆரம்பித்தார். ‘ஹான் ஜி’ என்று எனக்குத் தெரிந்த மராத்தியில் பேசினேன்.
‘தும்சா மராட்டி கச்சா ஆஹே. பண் சாங்களா ஆஹே’, (உங்கள் மராத்தி மழலையாக உள்ளது. ஆனால் நன்றாக உள்ளது) என்று புகழ்ந்துவிட்டு விஷயத்திற்கு வந்தார்.
‘ஹே பகா’ என்று ஒரு இன்லேன்ட் லெட்டரைக் காண்பித்தார். அப்பா எழுதியிருந்தார். லெட்டர் வீங்கி இருந்தது.
‘உள்ளே என்ன இருக்கிறது?’ என்று கேடடார். மெதுவாகப் பிரித்தேன். உள்ளே அட்சதை, குங்குமம், ஒரு பூணல் என்று சின்ன பேக்கிங் இருந்தது. வரும் வாரம் ஆவணி அவிட்டம்.
அசடு வழிந்தபடியே போஸ்ட்மேனை நோக்கினேன். ‘ப்ரஷாத் ஆஹே கா?’ (பிரசாதமா?) என்றார். ஆமாம் என்று தலை அசைத்தேன். ‘முன்ஜா’ ( பூணல்) என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவர் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டினுள் வந்தார்.
இலேன்ட் லெட்டரைக் கையில் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டவர் “பிரஷாத் கேலியே ஸ்பெஷல் கவர் பாய்ஜெத் ‘ (பிரசாதத்திற்கென்று தனியாக கவர் தேவை) என்று சொல்லி திருப்பிக் கொடுத்தார்.
வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வந்து ‘ஏக் அவுர் பாத் ஹைன். அட்ரஸ் மதே மதராஸி நஹின் லிக்னா ஹைன். மராடி மானுஸ் லா மதராஸி மாயத் நாஹி,’ ( அட்ரஸ் மதராஸியில் எழுதாதீர்கள். மராட்டியர்களுக்கு மதராஸி தெரியாது) என்று சொல்லி, குல்லாயைச் சரி செய்துகொண்டு திரும்பிச் சென்றார்.
அட்ரஸ் காலத்தில், அட்ரசுக்கு மேல் அப்பா எழுதியிருந்தது ‘உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். பாட்டி உன்னை ரொம்பவும் கேட்டதாகச் சொன்னாள். அநேக ஆசீர்வாதம் ‘.
தேரழுந்தூர் உற்சவம், நெய்வேலி நிலவரம், அம்மாவின் உடம்பு, தம்பியின் படிப்பு, நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதன் அவசியம், அழகியசிங்கர் மதுராந்தகத்தில் செய்துள்ள பாடசாலை அபிவிருத்தி விஷயங்கள் என்று அனைத்தையும் எழுதியபிறகு அட்ரஸ் காலத்தில் தான் இடம் இருக்கும்.
2 நாட்கள் கழித்து சந்தானத்துக்கு ஒரு இன்லேன்ட் லெட்டர் வந்தது. போஸ்ட்மேன் ஒரு பேச்சும் பேசாமல் கொடுத்துச் சென்றார்.
இந்தமுறை பூணலுடன் தர்ப்பையும். கோயம்புத்தூரிலிருந்து.
மறு முறை போஸ்ட்மேனை மார்க்கெட்டில் சந்தித்தேன். ‘ஆஜ் சுக்ரவார் ஆஹேனா? மஸ்ஜித் ஜா ரஹா ஹூன்’ (இன்று வெள்ளி இல்லையா, அதனால் மசூதி செல்கிறேன்) என்றார். உடன் அவரது மகனும்.
So sweet!
LikeLike
thank you
LikeLike