எச்சரிக்கை : இரத்த அழுத்த மாத்திரையை உட்கொண்ட பின் இந்த நூலைப் படிக்கவும்.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நம்மை ஆண்ட தன்னிகரில்லாக் கருணையும் தயையும் கொண்ட முகலாய, சுல்தானிய மன்னர்களின் தியாகச் செயல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள நூல் இது.
சிவாஜி என்னும் திரைப்பட நடிகரையோ, திரைப்படத்தையோ குறிக்கும் சொல்லால் ஆசிரியர் யாரோ போர் வெறி பிடித்த மராட்டிய மன்னனைச் சொல்கிறார். அவன் எந்தக் கோட்டையைப் பிடித்தால் என்ன? எக்கேடு கெட்டால்தான் என்ன? அவன் எந்த கஷ்டத்தை அனுபவித்தால் தான் நமக்கென்ன?
துக்ளக் என்றொரு மன்னனைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். அருமையான அரசியல் செய்திகள் கொண்ட பத்திரிக்கையை விடுத்து, யாரோ மன்னனாம், படை எடுத்தானாம், மக்களைக் கொன்றானாம், ஸ்ரீரங்கத்தை அழித்தானாம். இதெல்லாம் யாருக்கு வேண்டும்? இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார்? புஸ்தகமாம் புஸ்தகம்.
முகமது பின் துக்ளக் அப்படி என்ன சித்ரவதைகள் செய்துவிட்டான்? கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கினான், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது? வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன? ? அவன் பரம்பரை என்ன, வளர்ப்பு என்ன, பழக்கங்கள் என்ன! துக்ளக்கின் பின் வந்த பிரோஸ் ஷா துக்ளக் பணம் பெற்றுக்கொண்டு முகமது பின் துக்ளக் செய்தவற்றை எழுதிவிட்டான். அதை வைத்துக்கொண்டு கூப்பாடு போடுகிறார் ஆசிரியர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் அராஜகம் செய்தான் துக்ளக் என்கிறார் ஆசிரியர். வெள்ளாயி என்கிற நாட்டியக் காரியின் தியாகம் என்கிறார். அவள் நாட்டியம் ஆடியபடியே துக்ளக்கின் தளபதியைக் கவர்ந்து வெள்ளைக் கோபுரத்திற்கு மேல் அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைக் கொன்று தானும் இறக்கிறாள். இதை தியாகம் என்கிறார்கள். நாட்டியத்தால் ஒரு தூய்மையான வீரன் இறந்தான் என்று எழுதியிருந்தால் பாராட்டிடலாம். இதனால் தான் அவுரங்கசீப் நாட்டியத்தைத் தடை செய்தான். இப்போது புரிகிறதா நாட்டியத்தால் வரும் கேடு? தியாகமாம் தியாகம்.
மாலிக் கபூர் படை எடுத்தானாம் கோவில்களை அழித்தானாம், உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றானாம். அதனால் என்ன? கடமையைத் தானே செய்தான்? தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான். அவ்வளவுதான். இதில் தவறு என்ன?
மாலிக் கபூர் செய்த தியாகம் எத்தகையது? மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா? இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கபூர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு? அவனுக்கு சிலை வைக்க வேண்டாம் ஐயா, அவனது தியாகத்தைச் சிதைக்காமல் இருந்திருக்கலாமே.
விஜயநகர அரசு வந்ததாம், பாரத கலாச்சாரத்துக்கு அரணாக இருந்ததாம், கிருஷ்ண தேவ ராயன் என்கிற பிற்போக்காளன் கோவில்களுக்கு உதவினானாம். சுத்த ஹம்பக். மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டான். இதைத் தூக்கிப்பிடிக்கிறார் ஆசிரியர்.
தனது படையில் 30 சதம் ஹிந்து வீரர்களைக் கொண்டிருந்த செக்யுலர் அரசன் அவுரங்கசீப் என்கிற மகத்தான ஆளுமையின் அன்றைய தீர்க்க தரிசனத்தால் தான் இன்று பாரதம் செக்யுலர் நாடாக இருக்கிறது என்னும் செய்தியை மறைக்க ஆசிரியர் என்னவெல்லாம் சொல்கிறார்? கோவில்களை இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது? 30 சதம் ஹிந்துக்களுக்கு வேலை கொடுத்த அந்த மகோன்னத சக்கரவர்த்தியைப் பாராட்ட வேண்டாம் ஐயா, தூற்றாமலாவது இருக்கலாமே. இதற்கு ஒரு புஸ்தகம். ஹூம்.
டொமிங்கோ பேஸ் என்கிற போர்த்துகீசிய ஆய்வாளர் கிருஷ்ண தேவ ராயர் அரசர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தார் என்று தற்புகழ்ச்சி வேறு. அதே ஆய்வாளர் அவுரங்கசீப் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்தே டொமிங்கோ பேஸ் பணம் வாங்கிக்கொண்டு எழுதியுள்ளார் என்பது தெரியவில்லையா? ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா? நேருவிய செக்யுலர் கல்வியில் படித்தோமோ இந்தக் காவி புத்தகத்தின் உண்மையை உணர்ந்தோமோ. நல்ல வேளை.
தெலுங்கு பேசும் ராஜகம்பள நாயக்கர் இனத்தின் கெட்டி பொம்மு என்கிற தெலுங்கரின் வீரத்தைப் புகழ்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆண்ட பரம்பரைகள் கொண்ட, கல்லும் மண்ணும் தோன்றாத போதே தோன்றிய தமிழ் நாட்டில் இல்லாத வீரமா தெலுங்கு நாட்டில் இருந்து வந்தது? அதைப் போய் புகழ்கிறார் ஆசிரியர். கெட்டி பொம்மு என்று இருந்தால் தெலுங்கு என்று தெரிந்துவிடும் என்பதால் கட்டபொம்மன் என்று பெயரை மாற்றி அழைத்த வீரம் கொண்ட நம் முற்போக்குத் தமிழ் மண்ணில் இப்படிப்பட்ட பாசிச உண்மை விளம்பி நூல்கள் தோன்றுகின்றனவே. ஐயகோ!
சிவாஜி என்கிற கொடும் போர் மன்னன் பீரங்கிப் படை வைத்திருந்தானாம். அதற்கு கோவா, ஐரோப்பா முதலான இடங்களில் இருந்து பொறியாளர்களை வரவழைத்தானாம். இது தான் ‘மேக் இந்த இந்தியா’ திட்டமாம். அதையே தற்போதைய பிரதமர் மோதி பின்பற்றுகிறாராம்.
இந்தியாவைக் கட்டமைத்துக் கொடுத்ததே முகலாய மகோன்னத அக்பர், அவுரங்கசீப் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர். இங்கிலாந்து ராணியின் கடைக்கண் பார்வை இல்லாவிட்டால் நமக்கு அரசியல் சட்டம் ஏது? அது கூட வேண்டாம். இந்தியா என்கிற அமைப்பே இங்கிலாந்து போட்ட பிச்சை தானே. சிவாஜியாம், பீரங்கியாம். ஹூம் .
மெக்காலே இல்லாவிட்டால் நாம் மரங்களில் தாவிக்கொண்டிருந்திருப்போம் என்பதை மறைக்க இம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள்.
சரி. புஸ்தகம் எழுதிவிட்டார். அச்சாகிவிட்டது. புஸ்தகத்திற்கான 80 தரவுகளையும் கொடுத்துவிட்டார் ஆசிரியர். இந்த வலதுசாரி எழுத்தாளர்களே தரவுகளை அடுக்கி விடுவார்கள். அதுதான் பிரச்சினையே. அருண் ஷோரியின் புத்தகத்தை விட அவர் காட்டும் தரவுகளின் அளவு அதிகமாக இருக்கும். அது போலவே இந்த ஆசிரியரும் செய்துள்ளார். சரி. என்ன செய்வது? சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம்? யாரோ மேற்கத்தியன் ஏதாவது சொல்ல வேண்டும், அதை நாம் ‘பகுத்தறிவுடன்’ பின்பற்ற வேண்டும். அது தானே நமக்கு வழக்கம். போகட்டும்.
என்னதான் செய்வது புஸ்தகத்தை ?
ரத்தம் சுண்டி, ஹீமோகுளோபின் குறைந்து, கை கால்களில் வலு இழந்தவர்கள், உயிர் வாழ விருப்பம் இல்லாதவர்கள், இறப்பை எதிர் நோக்கி, வலிமையற்று படுத்திருப்பவர்கள் – இப்படியானவர்களுக்கு இந்தப் புஸ்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம். ரத்தம் சூடேறி, திடீரென்று உணர்வு பெற்று எழுந்து உட்கார வாய்ப்புண்டு.
உடல் நலமுள்ள, கல்வி, பணம், அந்தஸ்து முதலியவை பெற்ற, பேஸ்புக்கில் போட்டோ போட்டு வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு லைக் வந்துள்ளது என்று கணக்கிட்டு ஆகப்பெரிய தியாகத்தைச் செய்வாரும், ரஜினி காந்தின் அடுத்த படத்திற்கான பூஜை வேலைகள் துவங்கும் அன்றே அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வழி உண்டா என்று யோசிக்கும் பெருவாரியானவர்களுக்கு இந்த நூலினால் எந்தப் பயனும் இல்லை.
காலை மாலை ஆபீஸ் போனோமா, மாலை டி.வி. பார்த்தோமா, ரஜினி வழிபாடு செய்தோமா, விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏஸி ரூமில் அமர்ந்துகொண்டு, ‘விவசாயிகளைக் காப்போம்’ என்று மிமி போடுவது என்று காலத்தை ஓட்டுவதை விட்டு, புஸ்தகம் படிப்பது, உண்மை வரலாற்றை அறிந்துகொள்வது, அறிவோடு பேசுவது / எழுதுவது என்றெல்லாம் மூடவழக்கங்கள் வைத்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் புஸ்தகத்தைப் படியுங்கள். ஒரு ரத்த டாக்குமெண்டரிக்கு தயாராகுங்கள்.
எச்சரிக்கைகள்:
- படித்து முடித்தபின் ஓவென்று அழுகை வரும். இது நார்மல் பிஹேவியர் தான்.
- நூலைப் படித்தபின் பாரத கலாச்சாரத்துக்கு நாம் கிஞ்சித்தாவது செய்தோமா என்கிற குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
- நூலில் வரும் கோவில்களுக்கும், வரலாற்று இடங்களுக்கும் செல்லும் போது, பக்தி மற்றும் வரலாற்று உணர்வை மீறி அழுகை வரும். மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக நேரிடும்.
- அடுத்த விடுமுறைக்கு சிவாஜியின் கால் பதித்த இடங்களைப் புண்ணிய தரிசனம் செய்துவர கிளம்பிவிடுவீர்கள்.
- ஒவ்வொரு முறையும் மதுரை மீனாட்சியை வழிபடும் போது எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்து மீண்டு வந்து இன்றும் நமக்கு அருள்பாலிக்கிறாள் என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்க்கத் தோன்றும்.
- நூலைப் பத்து பிரதிகளாவது வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
ஸ்ரீரங்கம் கோவிலையும் நம்பெருமாளையும் காக்க பிள்ளைலோகாச்சாரியாரும் வேதாந்த தேசிகரும் ஆற்றிய பணிகள் பற்றி முன்னரே ஸ்ரீவேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’வில் படித்திருந்தேன். எஸ்.பி.சொக்கலிங்கம் ‘மதுரை சுல்தான்கள்’ என்னும் நூலில் ஏற்கெனவே கோரங்களுக்குத் என்னைத் தயார்ப் படுத்தியிருந்தார். மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்னும் ரத்தக்களரியிலும் முன்னரே மூழ்கி எழுத்துவிட்டேன். எனவே எனக்கு இப்போது அதிக பாதிப்பில்லை.
என்ன வாங்கப் போகிறீர்களா? சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.
பிரகாஷ் எழுதி தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புஸ்தகத்தை இங்கே வாங்கலாம்.
இத்தனை மெனக்கெட்டு இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்நூல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டால் பெருவாரியான மக்களைச் சென்றடையும்.
சொற்களில் தான் எத்தனை சொடுக்குகள்! எட்டி வீசும் சாட்டையில் என்னென்ன எழுத்துச் சிதறல்கள்! விமர்சனத்திற்கு இப்படியொரு புதுப்பாதையா? ஆமருவி தேவ்நாதா உன் எழுத்தில் உணர்ச்சிகள் கரை புரண்டொடுகின்றன. உன் கருத்துகள் நடைபோடும் அழகே அழகு! — ஏ. பி. ஆர்.
LikeLike
மிக்க நன்றி ஐயா.
LikeLike
வித்தியாசமான ரெவ்யூ ! படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. மிக்க நன்றி சார்!
LikeLike
நன்றி சார்
LikeLike