முகங்களின் தேசம் (எ) பாரத தரிசனம்

ஜெயமோகனின் ‘முகங்களின் தேசம்’ நூலை அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் எம்.ஆர்.டி. ரயிலில் தினம் ஒரு கட்டுரை என்பதாகப் படித்து வந்தேன். ஒவ்வொரு நாளும் மிகுந்த மன எழுச்சியை அடைய இக்கட்டுரை வாசிப்பு உதவியது. சில கட்டுரைகளைப் பற்றிய எனது அனுபவங்கள்:

img__89046_std‘ஆல்’ – மனித மனதின் உயர்வைக் காட்டுகிறது. ஒரு வகையில் இரு மனங்களின் உயர்வையும், மற்றொரு மனதின் தாழ்வையும் ஒருசேர உணர்த்துகிறது. பிச்சை வாங்கும் நிலையில் உள்ளவன் பிச்சை அளிக்கிறான். பிச்சை பெற்றவன் தனது கடனை அடைக்கிறான். வாயும் வயிறும் நிறையும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உங்கள் கண்களை நிறைக்கும்.

சீக்கிய ஞான மரபின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான  ‘உண்டியளித்தல்’  பேரறமாக விஸ்வரூபம் எடுத்து நம்மை ஆட்கொள்கிறது ‘அன்னையின் சிறகுக்குள்’ கட்டுரையில். இத்தகைய ஞான மரபுகள் தோன்றிய பாரத பூமியில் பிறந்தோமே என்று கண்களில் நீர் மல்க புத்தகத்தில் அடுத்த கட்டுரைக்குச் செல்ல முயற்சித்தேன். முடியவில்லை. கட்டுரையில் இருந்த அந்த சீக்கியப் பெரியவரின் பென்சில் ஓவியத்தை நன்றியுடன் பார்த்தவண்னம் இருந்தேன்.

‘கோப்ரா’ கட்டுரையில் ஆகும்பேயில் கொட்டும் மழையில் உணவு தேடிச் செல்லும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் குழு ‘ஷெனாய்’ என்னும் கொங்கணி பிராமணரின் மெஸ் ( அந்த ஊரின் ஒரே மெஸ்) காட்டப்படுகிறது. கடையைச் சாத்திவிட்ட அந்த வயதான உரிமையாளர் குழுவினர் முழுவதும் நனைந்துவிட்டதையும், காலையில் இருந்து ஒன்றும் உண்ணாமல் இருப்பதையும், தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ளதையும் அறிந்து, உறங்கச் சென்விறுவிட்ட தனது மனைவியை எழுப்பி, அடுப்பு மூட்டி உப்புமா தயாரித்து வழங்குகிறார். தொழில் என்பதைத் தாண்டி, மானுட அறம் என்னும் விழுமியம் கண் முன் தோன்றும் இடம் இது.

சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த இடங்களைப் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள் என்று ஜெயமோகன் எழுதியுள்ளது உள்ளத்தை உருக்குவன. சாலையில் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்த போது வயல் வரப்பில் அமர்ந்துகொண்டிருந்த மராத்திய விவசாயியிடம் பேசுகின்றனர். உடன் பயணிக்கும் நாஞ்சில் நாடனுக்கு மராத்தி மொழி தெரியுமாகையால் பேச்சு தொடர்கிறது. ‘விவசாயம் எப்படிப் போகிறது?’ என்ற கேள்விக்கு ‘நஷ்டம் தான்’ என்கிறார் விவசாயி. இருந்தும் ஏன் செய்கிறீர்கள் என்றதற்கு,’ இந்தக் கோதுமை எங்கோ யாருக்கோ உணவாகிறது. எனக்கு லாபமில்லை என்றாலும் யாருடைய பசிக்கோ நான் உணவாக்க வேண்டிய கடமை உள்ளது,’என்று அந்த முதிய விவசாயி சொன்னது நாஞ்சில் நாடன் மட்டுமல்ல யாரையுமே கண் கலங்க வைப்பது. அந்த விவசாயியை கீதையின் கண்ணனாகவே பார்க்கத் தோன்றுகிறது. (பலன் கருதாமல் கடமையாற்றுதல்).

‘ருத்ரம்மா’ கட்டுரை காட்டும் பெண்முகம் யாரென்று ஊகிக்க வேண்டியதில்லை. வறண்ட தேசமாகிய வரங்கல் பகுதியைக் காக்க வந்த தேவியாகவே ருத்ரம்மா திகழ்கிறார். தனது சேனையைக் கொண்டு நாடு முழுவதும் ஏரிகளை வெட்ட வைத்த அந்த அன்னையால் இன்றும் அவளது குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். (தமிழகத்தில் வீராணம் ஏரியும் அப்படிப் போர்வீரர்களால் கட்டப்பட்டது தான்).

‘நமது முகங்கள்’ கட்டுரையில் தமிழகத்தின் தரம் தாழ்ந்த நிலை மனதை இறுக்குகிறது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்னும் திராவிட அரசியல் பீற்றல் உண்மைதான் போலும். கலாச்சாரத்திலும், பொது இடங்களில் பெண்களிடம் நடந்துகொள்வதிலும் தமிழகம் தேய்ந்துதான் போய்விட்டது. ஈரோட்டுப் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக இருக்குமோ என்று யாராவது ஆராயலாம்.  ‘நமது விருந்தோம்பல்..’ கட்டுரையைத் தமிழக ஆட்சியாளர்கள் என்று யாராவது இருந்தால் படிக்கக் கொடுக்கலாம். கேரளாவும் இக்கட்டுரையில் சாடப்பட்டுள்ளது. ஒருவேளை ‘கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்’ தோன்றியதால் இன்னமும் நாகரீகம் அடையாமல் இருக்கிறோமோ? என்று எண்னத் தோந்றுகிறது.

‘ஒருங்கிணைவின் வளையம்’ நம்மை உண்மை வரலாற்றை நோக்கி இட்டுச் செல்கிறது. தென் பாரதத்தில் நமது கலாச்சாரமும், கோவில்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கு சிருங்கேரி சாரதா பீடம் ஆற்றியுள்ள மகத்தான பணி நம் கண் முன் தெரிகிறது. சிருங்கேரி பீடத்தின் வித்யாரண்யரின் முயற்சி இல்லாதிருந்தால் விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்டிருக்காது. வடக்கைச் சூறையாடிய இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் தெற்கையும் அழித்தொழித்திருப்பார்கள். சிருங்கேரி பீடத்திற்கும், அதன் ஸ்தாபகரான ஆதி சங்கரருக்கும் கண்ணிர் மல்க நன்றி சொல்ல வைக்கும் கட்டுரை இது. உண்மையில் இது ஒரு வைணவக் கோவில் பற்றியது என்பது ஒரு சுவாரஸ்யம்.

‘ஆழத்தின் முகங்கள்’ நம்மை சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முற்பட்ட லோத்தல் நிலத்திற்குக் கொண்டு செல்கிறது.  பெரும் ஒழுங்கோடும், நுண் வடிவமைப்புடனும் கட்டப்பட்டுச் செயல்பட்டு வந்த அந்த நாகரீகத்தின் எச்சங்களைப் பற்றி ஜெயமோகன் எழுத்தில் காட்டும் காட்சிகள் மீண்டும் மீண்டும் நம் கனவுகளில் உயிர்த்தெழுந்து, கடந்த காலத்தைப் பற்றிய பிரமிப்பை நம்முள் விதைக்கின்றன. அந்நிலத்தைக் கடந்து, கடும் பாலைவனப் பிரதேசத்தில் பயணிக்கும் எழுத்தாளரின் குழு, மாடு மேய்க்கும் நாடோடிக் கூட்டத்துடன் ஒன்றிணைந்து தேநீர் அருந்துகிறது. முகம் தெரியாத அந்தச் சாமானிய மக்கள் முகம் தெரியாத பயணிகளுக்கு ஆதரவாக ‘ஆவோ பாய் ஆவோ’ என்று வரவேற்று உபசரிப்பதை நமது பாரத மண்ணின் மகத்துவங்களில் ஒன்றாகக் கருதலாம். இத்தனைக்கும் அந்த மக்கள் கடும் குளிருக்கும், மணல் வீச்சுக்கும் ஏற்றாற்போல் முகம் வெளியில் தெரியாதபடி கீழே குனிந்து அமர்ந்திருக்கின்றனர். அந்த இடத்தில் ஜெயமோகன் பார்த்தது மானிட முகங்களை அல்ல, லோத்தல் பிரதேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்து மறைந்த நமது மூதாதையின் முகங்களை.

ஆந்திரத்தில் விஜயநகரப் பேரரசு ஆண்ட கோதாவரி நதிக்கரையில், கிஞ்சித்தும் தமிழறியாத கோவில் பூசகர் ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரத்தைப் பாடுவதையும், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை விஜயநகர அரசர்களின் பின்னவர்களான நாயக்க மன்னர்கள் கட்டிக் காத்ததையும் ஒருங்கே இந்நூலில் காண முடிகிறது. இரண்டு நிகழ்வுகளையும் இணைப்பது மொழித் தடைகளைக் கடந்த ஆன்மீக ஒருங்கிணைப்பு என்னும் சரடே என்பதை உணரும் தருணத்தில் மயிர்க்கூச்சேற்படுவதைத் தடுக்க இயலவில்லை. கிருஷ்ணதேவராயரால் ஆந்திரத்தில் ஆண்டாளும், நாயக்க மன்னர்களால் தமிழகத்தில் கிருஷ்ணதேராயரும் இன்னும் வாழ்வதை மானசீகமாக ஜெயமோகன் குழுவினர் உணர்கின்றனர். நானும் தான். ஆமுக்த மால்யதா புரியாவிட்டால் என்ன? ஆண்டாள் பாசுரம் இருக்கிறதே.

‘ஏழரைப் பொன்’ கட்டுரை, தயாளுவான ஒரு தாய் ஆண் வடிவெடுத்துத் தாயுமானவனாக நின்று, ஜெயமோகனைக் காத்த நெகிழ வைக்கும் ஒன்று. இதில் வரும் பெரியவரைப் போல் நானறிந்த சிலர் இருக்கின்றனர். ஒருவர் என் தந்தை.

ஜெயமோகனும் நண்பர்களும் இந்தியாவின் எந்த ஊரிலும், எந்த நேரத்திலும் உணவுக்கோ, இருப்பிடத்துக்கோ அல்லலுறவில்லை. எந்த நேரத்திலும் ‘கன்னியாகுமரியில் இருந்து வருகிறோம்’ என்றால் உணவு, தங்குவதற்கு ஏதோ ஒரு இடம் என்று கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுக்க இவர்கள் தொடந்து வரவேற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் – கன்னியாகுமரியின் பிள்ளைகளாக, பாரத தேவியின் பிள்ளைகளால்.

மணிப்பூர், அஸாம், காஷ்மீர், குஜராத், மஹாராஷ்டிரம், ஆந்திரம், திபெத், லடாக், பூடான், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், ராஜஸ்தான் என்று விரியும் ஜெயமோகனின் மனித முகங்களின் தரிசனங்களை மையப்படுத்திய பயணம் அவரைக் கொண்டு சேர்த்தது  பாரதம் என்னும் ஞானப் பெருந்தேவியின் பிள்ளைகளிடத்தில். அத்தனை பிள்ளைகளும் அவளது அத்தனை முகங்கள். அத்தனை முகங்களிலும் அன்னையின் கருணையும், அருளும்.

முகங்களின் தேசம் = பாரத தரிசனம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

7 thoughts on “முகங்களின் தேசம் (எ) பாரத தரிசனம்”

  1. ஜெயமோகனால் மட்டுமே முடியும் , இப்படி பாரததேவியின் முழுமைச் சித்திரத்தை வெளிக் காட்ட! ஆமருவி தேவநாதனின் ஆழ் நீச்சல் அருமை. தண்ணீருக்குள்ளேயே நீந்தி இருக்கிறார் . -ஏ பி ஆர்.

    Like

  2. இன்று தான் படிக்க நேர்ந்தது. உடன், சூரியன் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ள உள்ளேன். ஒரு புத்தகம் வாங்க வேண்டும்.

    Like

  3. ஜெயமோகன் அவர்களின் “முகங்களின் தேசம்” என்ற கட்டுரைத்தொகுப்பிற்கு நீங்கள் வழங்கிய விமர்சனம் மிக அருமையாக இருந்தது! .முத்தாய்ப்பாக உங்களின் சமன்பாடு (Equation) முகங்களின் தேசம் = பாரத தரிசனம் மிகவும் பொருத்தம்!!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: